For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தலை நிமிர வைத்த இயக்குநர் அமீர்!

  By Shankar
  |

  நான் சினிமாவுக்கு வந்து இருத்தியேழு ஆண்டுகள் கடந்துவிட்டன.திரும்பிப் பார்த்தால் இப்போதுதான் தொடங்கியதுபோல் இருக்கிறது! ஆனால் எவ்வளவு அனுபங்களை வாரி வழங்கிருக்கிறது இந்த சினிமா... வாழ்க்கையையும் கூட!!

  இந்த சினிமா பரமபதத்தில் பலர் எனக்கு ஏணியாகவும் சிலர் பாம்பாகவும் என் வாழ்க்கையின் போக்கை திசை திருப்பியிருக்கிறார்கள். இந்தப் பயணத்தில் அவர்களிடமிருந்து நான் எண்ணற்ற சுவாரஸ்யங்களையும்... புருவம் உயர்த்திப் பார்க்கிற அளவுக்கான செயல்பாடுகளின்போதும் உடன் இருந்ததே காலக் கொடை.

  அப்படியான வாழ்க்கையை டைம் மெசினில் ஏறி பின்னோக்கிப் பயணிக்கப் போகிறேன். அதனைத் 'தொடர்'சியாகச் சொல்லமுடியாது. அப்போதைய மனநிலையில் எங்கு போகிறேனோ அது பற்றிய ஞாபகங்கள் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

  'அட! இப்படியெல்லாமா நடத்துச்சு!!' என ஆச்சர்யப்பட்டுக் கடந்து போனாலும் சரி...'அட,த்த்தூ'என்று துப்பினாலும் சரி... சிரித்தபடி கடக்கும் வல்லமையும் நான் சந்தித்த மனிதர்களிடமிருந்தே கற்றுக்கொண்டேன். அவர்கள் அனைவருக்கும் நன்றி!

  சினிமாவில் இயக்குனர் பாலா, அமீர் இருவரையும் சந்தித்த பிறகுதான் வயதில் மூத்தவரோ இளையவரோ எல்லாரையும் 'அண்ணே' என்றழைக்கும் பழக்கம் எனக்கு வந்தது. அவர்கள் அலுவலகங்களில் 'SLAVE I REMAIN' என்ற பதத்திற்கான 'SIR' பயன்பாட்டில் இருந்தது மிகக் குறைவு. அதன் தொடர்ச்சியாக இன்று சினிமாவில் திரும்பிய பக்கமெல்லாம் 'ண்ணே...' என்ற வார்த்தை கேட்கமுடிகிறது. அதற்கு இணையாக இப்போது 'தோழர்' என்ற வார்த்தையும் இணைக்கப்பட்டிகிறது 'மகிழ்ச்சி'.

  இந்த மேலே உள்ள பாராவை எழுதியதற்கு காரணம்-நான் சொல்லப்போகும் மனிதர்களை இந்த வார்தையோடுதான் குறிப்பிடுவேன். எழுத்தில் உயர்திரு, அய்யா போன்ற வார்த்தைகளோடு ஒருவர் பெயரைக் குறிப்பிட்டு எழுதக் கூடாது என்பது ஊடக விதி! அதைச் சற்றே மீறுவேன் என்பதற்காக,உங்களிடம் ஒரு முன்பதிவு... நன்றி!

  இயக்குனர் அமீர். நான் பார்த்து வியந்த ஆகச் சிறந்த படைப்பாளிகள் மிகச் சிறந்தவர். சினிமாதான் எல்லோருரையும் கெடுக்குது என்பது பலரின் குற்றச்சாட்டு. சினிமா ஒருவரைத் திருத்த முடியுமா என்று கேட்டால் - அமீர் அண்ணனே அதற்கு நடமாடும் சாட்சி!

  சினிமாவுக்கு வருவதற்கு முன்பு அவருக்கு மது, புகைப் பழக்கம் இரண்டும் உண்டு. உதவி இயக்குநராக இருந்தபோதே அதைப் படிப்படியாகக் குறைத்து, இப்போது சுத்தமாக இரண்டையும் விட்டுவிட்டார் என்பது எவ்வளவு பழகிய முரண்!

  அதற்கு அவர் சொன்ன காரணம்... "ஊரிலிருந்தபோது எப்போதாவது நண்பர்களைச் சந்திக்கும்போது இவை இருக்கும். சினிமாவில் அது சகஜமாக, அது ஒரு சோஷியல் டிரிங் என்பதுபோல் அன்றாடப் பழக்கமா இருக்கு... இதைக் கையில் எடுத்தால் நான் விரும்பும் ஒரு சினிமா எடுக்க முடியாது. அதனாலேயே அதைத் தொடக்கூடாதுன்னு முடிவு பண்ணினேன்."

  -எவ்வளவு யதார்த்தமான உண்மை.அப்படியான ஆச்சர்யம்தான் அமீர் அண்ணன்.

  முதல் படம் மௌனம் பேசியதே படத்துலேயே தமிழ் சினிமாவை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர். அடுத்து அவரே தயாரித்து இயக்கிய படம் ராம். அந்தப் படத்தில் என் மனைவி சந்திரா உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பொதுவாக சினிமாவில் உதவி இயக்குநராகப் பணியாற்றுகிறவர்கள் பல்வேறு சிரமங்களைக் கடக்க வேண்டியதிருக்கும்.

  ஆனால் முதல் படத்தில் பணியாற்றும் ஒரு உதவி இயக்குநர் அதுவும் பெண் என்கிற காரணத்தினால் தனி அறை கொடுத்து தங்க வைத்திருந்தார். கிட்டத்தட்ட நூற்றி இருபதுநாள் படப்பிடிப்பு நடந்தது. மிகுந்த சிரமங்களுக்கிடையே அந்தப் படப்பிடிப்பை நடத்தினார். ஒருபோதும் எவருக்கும் குறையில்லாமல் குடும்பம் போல் தன் உடன் பணிபுரிவோரைப் பார்த்துக்கொண்ட விதம் தமிழ் சினிமாவில் அதுவரை நான் பார்க்காதது!

  அந்தப் படம் ரிலீஸ் ஆனது. வியாபாரக் கணக்கில் அவருக்கு பெரிய இழப்புதான். அப்போதைய நிலையில் ஐம்பது லட்ச ரூபாய் கடன். இவ்வளவு பெரிய கடன் பட்டு எனக்கு நெருக்கமான ஒருவர் இருப்பதை அப்போதுதான் பார்க்கிறேன்.

  "அண்ணே, இவ்வளவு பெரிய தொகை எப்படி சமாளிக்கப் போறீங்க!"

  "அதெல்லாம் விடுங்க சுந்தரு...எங்க தொலச்சமோ அங்கதான் எடுக்கணும்...பயந்துக்கிட்டு மதுரைக்கு போயிட்டா, எல்லாஞ் சரியாகிருமா! எம் பிள்ள, அதுக பிள்ள என மூணு தலைமுறை வந்தாலும் இந்தப் பணத்துக்கு வட்டி கூடக் கட்டமுடியாது. எங்க தொலச்சமோ அங்கதான் தேடி எடுக்கணும். வெளிச்சம் இருக்குங்குறதுக்காக வேற எங்கயோ போய்த் தேடினா தொலச்சது கண்டிப்பா கிடைக்காது."

  அவ்வளவு பிரசினையிலயும் நம்பிக்கையாகப் பேசினார்.

  அந்தப் படம் வியாபார ரீதியாக வெற்றிப்படமாக இல்லை என்றாலும் படைப்பு ரீதியாக மிகப் பெரிய படம் என்பதற்கு மூன்று உதாரணங்கள் சொல்லமுடியும்.
  ஒன்று - சைப்ரஸ் நாட்டில் நடந்த உலகப் படவிழாவில் வீரபாண்டிய கட்டப்பொம்மன் படத்திற்கு அப்புறம் நாற்பது ஆண்டுகள் கழித்து ஹீரோ ஜீவாவுக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்தது.

  இரண்டு - மீடியா அவரைத் தூக்கி வைத்துக் கொண்டாடியது. பொதுவாக மீடியா ஆட்கள் நல்ல படங்களை தங்களது படைப்பாகக் கொண்டாடுவார்கள்... அது 'ராம்' படத்திற்கும் கிடைத்தது.

  மூன்றாவது? பின்னோக்கிய பயணத்தின் கடைசிப் பாராவில் அது பற்றிச் சொல்கிறேன்.
  அதன் பிறகு தொடங்கியதுதான் 'பருத்தி வீரன்.' ராம் படத்தைப் பார்த்துவிட்டு ஞானவேல் ராஜா கே.கே.நகரிலிருந்த அமீர் அண்ணன் ஆபீசுக்கு வந்தார். தினமும் வருவார். பலநாள் அமீர் அண்ணன் ஆபீஸில் இருக்க மாட்டார். ஆனாலும் காத்திருப்பார் ஞானவேல் ராஜா! அமீர் அண்ணனோட ஒர்க்கிங் ஸ்டைல் சற்று வித்தியாசமானது. பிற்பகல் லஞ்ச் டைமுக்குதான் அவரது அன்றைய நாள் தொடங்கும். பின்னிரவு மூன்று மணி அல்லது அதிகாலைதான் அறைக்குத் திரும்புவார்.
  அதற்கெல்லாம் சளைக்காமல் காத்திருந்ததன் பலன்தான் ஞானவேல் ராஜா என்ற தயாரிப்பாளர் தமிழ் சினிமாவுக்குக் கிடைக்கக் காரணம். கார்த்தி என்ற ஹீரோவும் கூட!
  பருத்தி வீரன் படம் தொடங்கியதும் அதன்பிறகு நடந்ததும் கடைசியில் பஞ்சாயத்தில் முடிந்ததும் பற்றி இன்னொரு சந்தர்பத்தில் சொல்கிறேன்.

  அமீர் என்கிற படைப்பாளி என்ன செய்ய வேண்டும்! அவருக்கான களம் எது என்பதை அவரே புரிந்துகொள்ளாமல் கோக்கு மாக்காகச் செஞ்ச வேலைதான் -யோகியும், ஆதி பகவானும்! அதைச் சமீபத்தில் நடந்த 'சந்தனத்தேவன்' படவிழாவில் அவரே ஒப்புக்கொண்ட நேர்மைக்கு ஹாட்ஸ் ஆஃப் ண்ணே.

  அந்த விழாவில் அவர் சொல்ல மறந்த ஒரு விசயம் இருக்கு! அது எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான். 'நல்ல படைப்பாளி...தேவையில்லாமல் இயக்குநர் சங்கம், ஃபெப்சி தலைவர் என்று பொறுப்புகளைத் தூக்கிச் சுமந்து சினிமாவை கோட்டை விட்டுட்டாரே!' என்பது.

  ஒரு படைப்பாளி எப்போதும் நல்ல தயாரிப்பாளராக இருக்க முடியாது. தமிழ் சினிமாவுக்கே உரிய வியாபாரக் கணக்கில் இந்த இரண்டையும் இணையாக வழி நடத்துவதில் உள்ள குழப்பமே இதற்கு காரணம். அப்படிதான் ஒரு படைப்பாளி, அதுவும் மார்கெட்டில் உச்சத்திலிருக்கும்போது சினிமா சங்கங்களின் பொறுப்பை ஏற்றுக்கொள்வது தற்கொலைக்கு சமம் என்பதற்கு அமீர் அண்ணனைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

  இப்போதைய சங்கப் பொறுப்பாளர்களுக்கும் பிற்காலத்தில் இந்த வார்த்தை நிச்சயம் பொருந்தும் என்பது என் அனுபவக் கணக்கு.

  சங்கங்களை வழி நடத்திப் போவதும் ஒரு கலை; அது எல்லோருக்கும் வந்துவிடாது. அந்த ஆறு வருடம் தமிழ் சினிமாவுக்கும், தனிப்பட்ட முறையில் உங்களுக்கும் எவ்வளவு பெரிய இழப்பு என்பதை மிகத் தாமதமாக உணர்ந்திருப்பதுதான் சோகம்ண்ணா.

  போகட்டும்...கால இடைவெளியை உங்கள் 'சந்தனத்தேவன்' இட்டு நிரப்புவான் என்கிற நம்ப்பிக்கை எனக்கும் நல்ல சினிமாவை நேசிக்கும் அனைவருக்கும் உண்டு.

  சந்தனத்தேவன் படத்தின் தொடக்க விழாவில் நீங்கள் குறிப்பிட்ட ஒரு விஷயத்தை இப்போது ஞாபகப்படுத்துவது அவசியம். ஒரு படைப்பாளி எப்போது தன்னையும் தன்னைச் சுற்றியும் உள்ள வாழ்கையைப் படமாக்குவதுதான் 'உலக சினிமா' என்று குறிப்பிட்டுப் பேசினீர்களே அதை அப்படியே வழிமொழிகிறேன்.

  உங்களைப் போன்ற நல்ல படைப்பாளிகளும் அந்தப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்பதும் எனது வேண்டுகோள்.

  'யோகி' படத்துக்கான ஆடியோ வெளியீட்டு விழா அப்போது சத்தியம் தியேட்டரில் நடந்தது. பொதுவாக ஆடியோ விழாக்களுக்கு உதவி இயக்குநர்களை அழைப்பதில்லை! இல்லையென்றால் பார்வையாளர்களாக அல்லது சிறப்பு அழைப்பாளர்களாக!

  'யோகி'க்கு அத்தனை உதவி இயக்குநர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தீர்களே ஞாபகம் இருக்கா ண்ணா! பால்கனி முழுக்க உதவி இயக்குநர்கள். ட்ரைலர் மற்றும் பாடல் காட்சிகளைப் பார்த்துவிட்டு அரங்கம் அதிர தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். அவ்வளவு கொண்டாட்டமாக உணர்வுப் பூர்வமாக அதுக்கு அப்புறம் ஒரு விழாவும் நடந்ததில்லை இதுவரை!

  தங்களின் இயக்குநருக்கு இணையாக உங்களையும் வாரி அணைத்துக்கொண்டானே... அதுதானே ண்ணா உங்கள் இடம். அதை மீட்டெடுக்க வேண்டி 'சந்தனத்தேவன்' படப்பிடிப்பைத் தொடங்கியிருக்கிறீர்கள். தெரிந்து செய்தீர்களா அல்லது தற்செயலாக நடந்ததா தெரியவில்லை... 23 பிப்ரவரி 2017.சரியாக 'பருத்திவீரன்' ரிலீஸ் ஆகி பத்து வருடம் ஆகிறது. அதே நாளில் புதுக் கணக்கைத் தொடங்கிவிட்டீர்கள்.

  ஆங்கிலத்தில் 'DECADE' என்றொரு வார்த்தை உண்டு. பத்து ஆண்டுகளைக் குறிக்கும் அந்த வார்த்தையோடு இன்னொரு இயற்கை நிகழ்வும் அதில் இருக்கிறது. உலகம் முழுக்க பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நிச்சயம் மாற்றம் ஏற்பட்டே தீரும் என்பது.
  உங்களின் அடுத்த DECADE தொடக்கி விட்டதாக நம்புகிறேன். வாழ்த்துகிறேன். உங்கள் வார்த்தையில் சொல்வதானால் இனி, தமிழ் சினிமாவுக்கு 'சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்'.

  'ராம்' படம் வெளியானபோது மூன்றாவதாக ஒரு விசயத்தைக் கடைசியாகச் சொல்வதாகச் சொன்னேன் அல்லவா?

  அது - அந்தப் படம் வெளியாகி சில மாதங்கள் கடந்திருக்கும். அமீர் அண்ணனிடம் அந்தப் படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர் தம்பி ஒருவனைத் தற்செயலாக டீக்கடை ஒன்றில் சந்தித்தேன்.

  இருவரும் டீ ஆர்டர் பண்ணினோம். டீ வந்தது. தம்பி, என்னப்பா நடக்குது என்று கேட்டேன். தீவிரமா கதை சொல்ற முயற்சிதாண்ணே போகுது என்று சொன்னவன், டீயை ஒரு சிப் உறிஞ்சும்போது சட்டென்று ஞாபகம் வந்து ஒரு விசயம் சொன்னான்.

  "அண்ணே,ரோஜா கம்பைன்ஸ்ல கத சொல்லப் போனேன். 'யார் நீங்க...என்ன படம் ஒர்க் பண்ணியிருக்கிங்கனு' வாசல்ல நிக்க வச்சுக் கேட்டாங்க. 'அமீர் ஆண்ணன் கூட கடைசியா ராம் படத்துல ஒர்க் பண்ணிருக்கேன்'னு சொன்னேன். 'உள்ள வாங்க தம்பி'ன்னு கூப்பிட்டு ஹால்ல உக்காரச் சொன்னாங்க. கொஞ்ச நேரத்தில் தண்ணியும் டீயும் வந்துச்சு. 'குடிங்க தம்பி'ன்னு சொன்னாங்க... தயக்கத்தோட குடிச்சேன்.
  குடிச்சு முடிச்சதும் 'தம்பி, தப்பா எடுத்துக்காதிங்க! கம்பெனில இப்போதைக்கு கதை கேக்குற ஐடியா இல்ல. ஒரு வேளை கேக்குறதா இருந்தா நம்பர் கொடுத்திட்டுப் போங்க கண்டிப்பா கூப்புட்றோம்'னு சொல்லி அனுபிச்சாங்க ண்ணே". என்று கொஞ்சம் இடைவெளி விட்டுச் சொன்னான் - "ண்ணே, இதுக்கு முன்னால்லாம் கத சொல்லப் போனா வாசல்லயே திருப்பி அனுபிச்சிருவாங்க. இப்பல்லாம் எந்தக் கம்பனிக்குப் போனாலும் அமீர் அண்ணன் அசிஸ்டன்ட்னு சொன்னாலே தனி மரியாதைதான்!"

  பின்னோக்கிய பயணம் 'தொடர்'ரும்...

  - வீ கே சுந்தர்

  English summary
  VK Sundar's article on his experiences with director Ameer.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X