சிவகார்த்திகேயன் செய்தது வன்முறை.. கொட்டுக்காளியை இப்படி அசிங்கப்படுத்தக் கூடாது.. அமீர் விளாசல்!
சென்னை: வாழை படத்துடன் கொட்டுக்காளி படத்தை வணிக ரீதியிலான போட்டிக்கு விட்டு மிகப்பெரிய வன்முறையை நிகழ்த்தியுள்ளார் சிவகார்த்திகேயன் என இயக்குநர் அமீர் பரபரப்பை கிளப்பும் வகையில் பேசியுள்ளார். ’கெவி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசும் போது இயக்குநர் அமீர் 'கொட்டுக்காளி’ படத்தை தியேட்டருக்கு கொண்டு வந்ததே தப்பு என்று பேசியுள்ளார்.
கமர்ஷியல் படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, வாழ், குரங்குப் பெடல் மற்றும் கொட்டுக்காளி உள்ளிட்ட படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

குறைந்த பட்ஜெட்டில் வித்தியாசமான படங்களை கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் சிவகார்த்திகேயன். தனக்கு நிறைய வருமானத்தை கொடுத்துள்ள சினிமாவுக்குத் திருப்பி தன்னால் முயன்றதை செய்ய வேண்டும் என உழைத்து வருகிறேன் எனக் கூறியிருந்தார் சிவகார்த்திகேயன்.
சர்வதேச அங்கீகாரம்: கூழாங்கல் படத்தை இயக்கி சர்வதேச அங்கீகாரத்தை பெற்ற இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் நடிப்பில் உருவான கொட்டுக்காளி திரைப்படமும் பெர்லின் உள்ளிட்ட திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு அங்கே உள்ள சினிமா ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த படத்தை தமிழ்நாட்டு மக்கள் கண்டு ரசிக்க கடந்த வாரம் தியேட்டருக்கு கொண்டு வந்திருந்தார் சிவகார்த்திகேயன்.
கழுவி ஊற்றிய ரசிகர்கள்: கொட்டுக்காளி படம் நல்லாவே இல்லை என்றும் படமே புரியலை என்றும் ஆட்டோவில் ஒரு குடும்பம் ஒரு இடத்துக்கு போவது மட்டுமே படமாக எடுத்து வைத்து எங்களோட நேரத்தையும் பணத்தையும் இயக்குநர் வினோத்ராஜ் சுரண்டி விட்டார் என படத்தை தியேட்டருக்கு சூரியையும் சிவகார்த்திகேயனையும் நம்பி போனவர்கள் பார்த்து விட்டு கழுவி ஊற்றி விட்டனர். இந்த படத்தின் புரமோஷனுக்காக நிர்வாணமாகக் கூட ஆடுவேன் என மிஷ்கின் போட்ட எக்கச்சக்க பிட்டு காரணமாக படத்தை நம்பி பார்க்கப் போன ரசிகர்கள் திட்டிய வீடியோக்கள் அதிகம் பரவின.
சிவகார்த்திகேயன் செய்தது வன்முறை: கொடைக்கானலில் உள்ள வெள்ளக்கெவி எனும் கிராமத்தை சுற்றி நடக்கும் உண்மை சம்பவத்தை கெவி எனும் பெயரில் படமாக்கியுள்ளனர். அந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று நேற்று பேசிய இயக்குநர் அமீர் சிவகார்த்திகேயன் வாழை படத்துடன் கொட்டுக்காளி படத்தை வெளியிட்டது மிகப்பெரிய வன்முறை என்றும் விருது விழாக்களுக்கு அனுப்பப்பட வேண்டிய படத்தை கமர்ஷியல் லாபத்துக்காக தியேட்டருக்கு கொண்டு வந்து அந்த படத்தின் இயக்குநரை பலர் வெட்டுவேன், குத்துவேன் என கொந்தளிக்க வைக்கும் அளவுக்கு செய்து விட்டார் என்றார்.
தியேட்டர் ரிலீஸே தப்பு: நான் இந்த படத்தை தயாரித்து இருந்தேன் என்றால் தியேட்டருக்கே கொண்டு வந்திருக்க மாட்டேன். நேரடியாக ஓடிடியில் விற்று இருப்பேன். அங்கே ரசிகர்கள் அந்த படத்தை பிடித்தால் பார்த்து மகிழட்டும் என விட்டிருப்பேன். ஒரு நல்ல படைப்பாளியின் பெயரை இப்படி பொதுமக்கள் பப்ளிக் விமர்சனம் என்கிற பெயரில் கேவலமாக பேசும்படி செய்திருக்கக் கூடாது என பேசியுள்ளார்.
சூரியின் வளர்ச்சி பிடிக்கல: விடுதலை, கருடன் என காமெடி நடிகர் சூரி தொடர்ந்து ஹிட் கொடுத்து வரும் நிலையில், அவரது வளர்ச்சி பிடிக்காமல் இப்படியொரு படத்தில் நடிக்க வைத்து சிவகார்த்திகேயன் சூரிக்கு தோல்வியை கொடுத்து விட்டார் என்றும் நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர். கொட்டுக்காளி படத்தை கமல்ஹாசன், மிஷ்கின், வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பல இயக்குநர்கள் புகழ்ந்து பேசிய நிலையில், இயக்குநர் அமீர் கொட்டுக்காளி படத்திற்கு எதிராக பேசுகிறாரா? அல்லது சிவகார்த்திகேயனுடன் என்ன விரோதம் என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











