விஜய்யின் கட்சியில் இணைந்து பணியாற்ற தயார் - இயக்குநர் அமீர் ஓபன் டாக்!
திருச்சி: தமிழ் சினிமா கலைஞர்களில் ஒரு சில கலைஞர்கள் மட்டுமே அரசியல் குறித்தும் சமூகம் குறித்தும் மிக தைரியமாக எல்லா காலகட்டத்திலும் பேசக்கூடியவர்களாக உள்ளனர். அவர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் மற்றும் நடிகர் அமீர். இவர் தற்போது நடிகர் விஜய் தொடங்கியுள்ள கட்சியில் பணியாற்ற, விஜய் என்னை அழைத்தால் கட்டாயம் செல்வேன் எனவும் நடிகர் விஜய்யின் தவெக மற்றும் சீமானின் நாதக ஆகிய இரண்டு கட்சிகள் இணைந்து பயணித்தால், இருவருடன் இணைந்து பயணிக்க தான் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் சுப்பிரமணிபுரம் பகுதியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தனியார் பிரியாணி கடை திறப்பு விழாவில் கலந்துக்கொண்ட இயக்குநர் அமீர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழ்நாட்டு அரசியல் சூழல் தொடர்பாக பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதற்கு அமீர் கொடுத்த பதில்களைப் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் கிராமத்து கதைகள் பற்றிய படம் அதிக அளவில் வருகிறது என்ற கேள்வி அமீரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'கிராமங்கள் என்பது நம் நாட்டின் முதுகெலும்பு. நமது நாட்டின் முதுகெலும்பாக இருக்ககூடிய கிராம்ங்களை திரைத்துறையில் தவிர்த்து விட்டு எந்த படமும் எடுக்க முடியாது.
அரசியல்: நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா எனவும் அப்படி அரசியலுக்கு வந்தால் திராவிட கட்சியில் சேரூவீர்களா எனவும் அமீரிடம் நிரூபர்கள் கேட்டதற்கு, 'அரசியலில் அனைவரும் இருக்க வேண்டும். தற்போது இருக்கும் நெருக்கடி சூழ்நிலையில் அரசியலுக்கு வந்தாலும் வரலாம். அதுதான் எனக்கு உள் உணர்வு சொல்கிறது. திராவிடம் என்ற சொல்லின் அர்த்தத்தை புரிந்தால் மட்டுமே திராவிடம் வேண்டும், வேண்டாம் என்று தெரியவரும். ஆரியத்திற்கு எதிரான சொல் தான் திராவிடம் ஆகும். திராவிடம் என்பது நம்முடைய மண் ,ரத்தம் உணர்வுகளில் கலந்து இருப்பது. ஆகையால் அனைவரும் திராவிடர்கள் தான், திராவிட சிந்தனைகள் உள்ளவர்கள் தான். பாசிச அரசியலுக்கு எதிராக யாரெல்லாம் அரசியல் செய்கிறார்களோ அது திராவிட அரசியலாகும். பாசிசதிற்கும், ஆரியத்திற்கும் எதிராக செய்யக்கூடிய அரசியல் திராவிட அரசியல் எனப்படும்' எனக் கூறினார்.

ஜாபர் சாதிக் வழக்கு: அதேபோல் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர்சாதிக்கு, ஜாமீன் வழங்கப்பட்டது குறித்த கேள்விக்கு, 'இந்த வழக்கை பற்றி எனக்கு முழுமையாக தெரியாது. நீதிமன்றத்தில் நீதியரசர் விசாரணையில் எந்த முகாந்திரமும் இல்லாமல் இருப்பதாக தெரியவந்தது. ஆகையால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாக தெரிகிறது. மற்றபடி எனக்கு இந்த வழக்கை பற்றி எதுவும் தெரியாது எனக் கூறினார். இந்த வழக்கு தொடுக்கப்பட்டபோது இயக்குநர் அமீர் பல கட்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் தரப்பு விசாரணை முடிந்த பின்னர், அமலாக்கத்துறையினர் அமீரை விசாரணை வளையத்தில் இருந்து விடுவித்துள்ளனர். இது தன்னிடம் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாகவும், டெல்லியில் இந்த விசாரணைக் காலத்தில் தனது மனநிலை எவ்வாறு இருந்தது என்பது குறித்தும், பேட்டி ஒன்றில் மிகவும் தெளிவாக விளக்கி இருந்தார் அமீர்.
உதயநிதி துணை முதலமைச்சர்: மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு குறித்த கேள்விக்கு, 'மத்திய அரசின் நிலைப்பாடு தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் இருந்து தெளிவாக தெரிகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தமிழ்நாட்டை புறக்கணித்தார்கள் என்பதற்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த சில அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரித்தது தான் மேலும் வேதனை அளிக்கிறது. மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் சமமாக பார்க்க வேண்டும்' என்றார்.அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, 'அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கினால் எனக்கு மகிழ்ச்சி' என பதில் அளித்தார்.

விஜய் கட்சியில்: நடிகர் விஜயின் அரசியல் குறித்தும், விஜய் அல்லது சீமான் இவர்களில் யாருடன் அரசியலில் பயணம் செய்ய உள்ளீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு, 'விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். விஜய் என்னை அழைத்தால் நிச்சயம் நான் செல்வேன். விஜய் உடன் சீமான் இணைந்து செயல்பட உள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். என்னை பொறுத்தவரை விஜய் மற்றும் சீமான் ஆகிய இருவருடன் இணைந்து அரசியல் பயணம் செய்வதற்கு நான் தயாராக உள்ளேன்' என பதில் அளித்தார். இயக்குநர் அமீர் விஜய் மற்றும் சீமானுடன் இணைந்து பயணிக்க தயாராக உள்ளேன் எனக் கூறியுள்ளது அரசியல் தளத்திலும் சினிமா தளத்திலும் பேசுபொருளாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications











