ஞானவேல் ராஜா, ஜெமினி லேப் மீது இயக்குநர் அமீர் போலீஸில் புகார்!

தனது பருத்தி வீரன் படம் மூலம் கார்த்தியை பெரிய நடிகராக அறிமுகப்படுத்தியவர் அமீர். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாதான் என்றாலும், அந்தப் படத்தின் பாதியிலேயே அவர் வெளியியேறிவிட்டதாகவும், மொத்தப்படத்தையும் தனது செலவிலேயே எடுத்து வெளியிட்டதாகவும் அமீர் கூறினார்.
அமீருக்கும் - ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீனுக்கும் இடையே இதுதொடர்பான கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இன்னும் முடியவில்லை. தனியாக வழக்கு ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், இப்போது கார்த்தி தெலுங்கிலும் பிரபலமாகிவிட்டார். ஆனாலும் தெலுங்கு தேசத்தில் பருத்திவீரன் மட்டும் இன்னும் வெளியாகாமல் இருந்தது.
தெலுங்கு வெளியீட்டு உரிமை இயக்குனர் அமீர், ஞானவேல்ராஜாவிடம் கூட்டாக இருந்ததுதான் இதற்குக் காரணம். அமீர் அனுமதி இல்லாமல் இந்தப் படத்தை தெலுங்கில் வெளியிட மாட்டேன் என ஞானவேலும், நெகடிவை பாதுகாப்பாக வைத்திருப்போம் என ஜெமினி லேபும் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்திருந்தனராம்.
இந்த நிலையில்தான் பருத்திவீரன் படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிடுவதாக தன்னிச்சையாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்திருந்தார் ஞானவேல் ராஜா. இதற்கு உடந்தையாக ஜெமினி பிலிம்ஸ் இருந்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, எனக்கு சேர வேண்டிய 25 சதவீத ராயல்டி தொகையை கொடுக்காமல் பருத்திவீரனை ரிலீஸ் செய்யும் ஞானவேல் ராஜா, ஜெமினி பிலிம்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளார் இயக்குநர் அமீர்.
இந்த இருவருக்கும் எதிராக நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கூட்டுசதி போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார் அமீர்.


Click it and Unblock the Notifications











