பருத்திவீரன் சர்ச்சை.. பலர் அமைதியாக இருப்பதால்.. நான் குற்றவாளியாக நிற்கிறேன்.. அமீர் விளக்கம்!
சென்னை: பருத்திவீரன் தொடர்பான பிரச்சினை குறித்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் குற்றச்சாட்டுகளுக்கு இயக்குநர் அமீர் விளக்கமளித்துள்ளார்.
பருத்தி வீரன் படம் வெளியாகி 16 வருடத்திற்கு மேலான நிலையில், அது தொடர்பான சர்ச்சைகள் சோஷியல் மீடியாவில் பூதாகரமாகி புயலை கிளப்பு வருகிறது.

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா அளித்த பேட்டியில், இயக்குனர் அமீர் குறித்து பல குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.
அமீர் அறிக்கை: இந்நிலையில் இயக்குநர் அமீர் விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மரியாதைக்குரிய பத்திரிகை, தொலைக்காட்சி, வலைத்தள, வலை ஒளி, வானொலி, பண்பலை மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கு வணக்கம்.
உண்மைக்குப் புறம்பான செய்தி: கடந்த சில தினங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா என் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கும், பரப்பிய அவதூறுகளுக்கும், என்னைப் பற்றிக் கூறிய வரம்புமீறிய வார்த்தைகளுக்கும், உண்மைக்குப் புறம்பான செய்திகளுக்கும் பதிலளிக்க கோரி என்னிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்க கூடிய அனைத்து ஊடக நண்பர்களுக்காகவே இந்த அறிக்கை.
நீதிமன்றத்தில் வழக்கு: பருத்திவீரன் தொடர்பான வழக்கு, இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்ற காரணத்தினால், வழக்கறிஞரின் அறிவுறுத்தலின் பேரிலேயே நான் இன்னும் பதிலளிக்காமல் இருக்கிறேன். அதன் காரணமாகவே, ஊடக நண்பர்களைச் சந்திக்காமலும் இருக்கிறேன். இதில், வேறு எந்த காரணமும் கிடையாது. இருந்தாலும், தொடர்ச்சியாக இப்பிரச்னை யூடிப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சென்று கொண்டிருக்கின்ற காரணத்தினால், சில விளக்கங்களை அளிக்க நான் விரும்புகிறேன்.
புனையப்பட்ட பொய்கள்: பருத்திவீரன் தொடர்பாகவும், என்னுடைய திரைப்பயணம் தொடர்பாகவும், ஞானவேல்ராஜா கூறிய கருத்துகளில் ஒன்றில் கூட உண்மையில்லை. அனைத்தும், புனையப்பட்ட பொய்கள். இது முழுக்க முழுக்க சமூகத்தில் எனக்கு இருக்கும் கண்ணியத்தைக் குறைக்கும் நோக்கத்தோடும், திரைத்துறையில் என்னுடைய பயணத்தை தடைசெய்யும் நோக்கத்தோடும் திட்டமிட்டு நடத்தப்படும் பொய்ப்பிரசாரமே.
பாதியில் காணாமல் போனார்: பருத்திவீரன் படம் தொடர்பாக, எனக்கும் ஞானவேல்ராஜா அவர்களுக்கும் இடையே எந்த ஒரு ஒப்பந்தமும் போடப்படவில்லை. எனவே, இல்லாத ஒப்பந்தத்தை நான் மீறவும் இல்லை. படத்தின், முதல் கட்டப் படப்பிடிப்புக்கு அவர் வழங்கிய தொகையைத் தவிர அடுத்தடுத்த காலகட்டங்களில் படப்பிடிப்புக்கான தொகையைத் தராமல் படத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு காணாமல் போனவர் அவர்.
வேடிக்கை பார்க்கின்றனர்: அதன் பின்னரே, நான் எனது “TEAMWORK PRODUCTION HOUSE” நிறுவனத்தின் மூலம் அந்தப் படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி முடித்தேன். மேலும், பருத்திவீரன் படப்பிடிப்புச் சூழல் முழுவதையும் முற்றாக அறிந்த, இன்றைக்கு திரைத்துறையில் உயர்ந்த இடத்தில் இருக்கும் என் சகோதரர்களும், பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இப்பிரச்னையில், அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எனக்கு வியப்பளிக்கிறது.
அமைதியாக இருப்பது ஏன்: பருத்திவீரன் படம் எந்த சூழலில் தொடங்கப்பட்டது? தொடங்குவதற்கான காரணம் என்ன? என்ற உண்மையை அறிந்த பெரிய மனிதர்களும், எனக்கு வாக்கு கொடுத்து ”படத்தை நீங்களே வெளியிடுங்கள்” என்று சொன்னவர்களும், அன்றும் வேடிக்கை பார்த்தார்கள்.! இன்றும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பருத்திவீரன் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பஞ்சாயத்தை, நடத்தியவர்களும், முடித்து வைத்தவர்களும், சாட்சிக் கையெழுத்திட்டவர்களும் இன்றளவும் அமைதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
குற்றவாளியாக நிற்கிறேன்: மொத்தத்தில், 17 வருடங்களுக்கு முன்பு என் கை பிடித்து வாக்கு கொடுத்தவரின் அன்புக்கு கட்டுப்பட்டு வேலை செய்த நான், இன்று சமூகத்தில் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கிறேன். நடந்த உண்மைகளைச் சொல்வதற்கு எனக்கு சில மணி நேரங்களே போதுமானது. ஆனால், அது பலருடைய வாழ்க்கையில் புயலைக் கிளப்பி விடும் என்ற காரணத்தினாலும், ஒட்டு மொத்த திரையுலகத்தையும் திசை திருப்பி விடும் என்ற காரணத்தினாலுமே நான் அமைதி காக்கிறேன். வேறு எதற்காகவும் அல்ல.


Click it and Unblock the Notifications











