ரஜினிகாந்த் கலந்துகொள்ளவுள்ள மாநாடு?.. முருகன் பெயரால் அரசியல் செய்பவர்கள் எதிரிகள்.. அமீர் ஆவேசம்
சென்னை: வரும் 22ஆம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த முருக பக்தர்கள் மாநாட்டினை தமிழ்நாடு பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்துகிறது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து முருக பக்தர்கள் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இந்த மாநாடு முருகன் பெயரால் அரசியல் சதித்திட்டத்தை அரங்கேற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என பலரும் தெரிவித்து வரும் நிலையில், இயக்குநர் அமீர் இந்த மாநாடு குறித்து காட்டமான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
மதுரையில் நடைபெற உள்ள இந்த மாநாடானது குன்றம் காக்க கோயிலைக் காக்க என்ற முழக்கத்துடன் நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் உத்தரபிரதேசம் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இது மட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசியல் தலைவர்களான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த மாநாடு குறித்து எதிர்மறை விமர்சனங்களை பலரும் முன் வைத்து வருகிறார்கள். குறிப்பாக தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மிகவும் காட்டமான விமர்சனங்களை முன் வைத்தார். அதாவது, முருகன் மாநாடு என்ற பெயரில் மக்களை பிளவு படுத்துகிற மாநாடுகள் தேவையற்றது என விமர்சித்தார். இவரது இந்த விமர்சனத்திற்கு, தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது ஸ்டைலில் பதிலடியும் கொடுத்துள்ளார். அதாவது, திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது எனக் கூறினார். திமுகவையும் இந்த மாநாட்டிற்கு அழைக்கிறோம் எனவும் தெரிவித்தார்.

அமீர்: இந்நிலையில் இந்த மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட இயக்குநர் மற்றும் நடிகர் அமீர் இது குறித்து பேசுகையில், " முருகர் எங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. முருகன் பெயரால் அரசியல் செய்கிற சதிகாரர்கள்தான் எங்களுக்கு எதிரானவர்கள். நீதிமன்ற வழிகாட்டுதல் கொடுத்த பின்னரும் எதற்கு இந்த மனித சங்கிலி என்று கேட்கிறீர்கள், நீதிமன்ற எவ்வளவு முறை வழிகாட்டுதல் கொடுத்தாலும் இந்த மாநாட்டின் நோக்கம் மக்களுக்கு சென்று சேரவேண்டும்.
ஆபத்தானது: முருகன், பக்தி என்ற பெயரில் யாராவது அந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்றால் அவர்கள் அதனைத் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் ஆன்மீக மாநாடுகள் பல நூற்றாண்டுகளாக நடந்து கொண்டுதான் உள்ளது. அதில் அரசியல் செய்வதும், அந்த மாநாட்டினை அரசியல் கட்சிகள் நடத்துவதுதான் ஆபத்தானது. இங்கு கூடியிருப்பவர்கள் முருகனுக்கு எதிரானவர்களல்ல, முருகன் பெயரால் அரசியல் செய்ய நினைக்கிற சங்கிகளுக்கு எதிரானவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்" என்று பேசினார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











