Vijayakanth - விஜய்க்காக 27 எம்.எல்.ஏக்களை காக்க வைத்த விஜயகாந்த்.. அமீர் சொன்ன டாப் சீக்ரெட்
சென்னை: விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று முன் தினம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சூழல் இப்படி இருக்க அவரது நினைவுகள் குறித்து பிரபலங்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயக்குநர் அமீர் பேசியிருக்கும் விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
ரசிகர்களின் பேரன்பை சந்தித்த விஜயகாந்த்துக்கு கடந்த சில வருடங்களாகவே உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக அவர் அமெரிக்காவிற்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார். அதன் பிறகு தமிழ்நாடு திரும்பிய அவர் ஆக்டிவ் அரசியலில் இருந்து ஒதுங்கி முழு நேர ஓய்வு எடுத்துவந்தார். இருப்பினும் தொண்டர்களை சந்திப்பதை அவர் வழக்கமாக வைத்திருந்தார். அந்த வகையில் சமீபத்தில் நடந்த தேமுதிக பொதுக்குழுவில்கூட அவர் கலந்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மரணம்: ஆனால் பொதுக்குழுவில் கலந்துகொண்ட பிறகு அவருக்கு நுரையீரல் அழற்சி ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் மியாட் மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு மக்கள் அலைகடலென திரண்டு சென்று அஞ்சலி செலுத்தினர். கோயம்பேட்டில் இருக்கும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்த்தின் உடல் நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
மிஸ் யூ கேப்டன்: விஜயகாந்த் இறப்பு பலரையும் சோகத்தில் தள்ளியது. ஏனெனில் அவரால் உதவி பெற்று இப்போது நன்றாக வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் ஏராளம் பேர் இருக்கிறார்கள். தர்மம் செய்தால் ஒருவருக்கு எவ்வளவு மனிதர்கள் கூட்டம் சேரும் என்பதற்கு நேற்றைய விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம் ஒரு சாட்சி. கிட்டத்தட்ட 15 லட்சம் பேர் அவருக்கு அஞ்சலி செலுத்தியதாக தெரிகிறது. மூத்த தலைமுறையிலிருந்து தற்போதைய தலைமுறைவரை அவரை மிஸ் யூ கேப்டன் என்று சொல்லிவருகிறார்கள்.
வளர்த்துவிட்ட விஜயகாந்த்: விஜயகாந்த்தால் சாமானியர்கள் மட்டுமில்லை. நடிகர், நடிகைகள்கூட ஏராளமான உதவிகள் பெற்று இப்போது நல்ல நிலையில் இருக்கிறார்கள். ஏன் விஜய்யே தனது கரியரின் ஆரம்பத்தில் தடுமாறிக்கொண்டிருந்தபோது அவருடைய உதவிதான் தேவைப்பட்டது. அதேபோல்தான் நடிகர் சூர்யாவுக்கும் அவருடைய கரியர் வளர்வதற்கு உதவிகளை செய்திருக்கிறார் விஜயகாந்த். இன்று அதனை அவர்கள் நன்றியுடன் நினைவுகூர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
காக்க வைத்த விஜயகாந்த்: இப்படி பல உதவிகளை அவர் செய்திருக்கிறார். அவர் மறைந்த பிறகு அவர் குறித்த நினைவுகளை பலரும் பகிர்ந்துவருகிறார்கள். அந்தவகையில் இயக்குநர் அமீர் தெரிவித்திருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. அவர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக வந்ததும் அவரை பார்ப்பதற்காக நானும் இயக்குநர் சேரனும் சென்றிருந்தோம். அப்போது எங்களுக்கு முன்னதாகவே 27 எம்.எல்.ஏக்கள் அவரை பார்ப்பதற்காக காத்திருந்தார்கள்.

விஜய்யும் காத்திருந்தார்: ஆனால் எங்களை உடனடியாக உள்ளே கூப்பிட்டார். நாங்கள் அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது விஜய்யும் அங்கே வந்திருக்கிறார். அப்போது அதனையும் தெரிந்துகொண்ட அவர் 27 எம்.எல்.ஏக்களை அப்படியே உட்கார வைத்துவிட்டு விஜய்யை மட்டும் உள்ளே அனுமதித்தார். அதற்கு பிறகு எங்கள் மூன்று பேருடனும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்" என்றார்.
விஜயகாந்த் பொதுவாக சினிமாக்காரர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். நடிகர் போண்டா மணி கூட இறப்பதற்கு முன்பு அளித்திருந்த ஒரு பேட்டியில், விஜயகாந்த்தின் 25ஆவது திருமண நாளுக்கு சென்றிருந்தபோது அரசியல்வாதிகள் எல்லாம் காத்திருந்தார்கள். நான் வந்திருப்பதை அறிந்ததும் உடனடியாக என்னை மட்டும் உள்ளே அழைத்து வர சொன்னார். உள்ளே சென்றதும் எதற்காக என்னை மட்டும் உடனடியாக உள்ளே அழைத்தீர்கள் என்று கேட்டேன்.
அதற்கு அவர், டேய் அவங்க எல்லாம் இப்போ வந்தவங்க. நாம என்ன அப்படியா. சினிமாவிலிருந்து வந்தவங்க. நீதான் எனக்கு சகோதரன் என்று சொல்லி 5,000 ரூபாய் நிதியுதவி அளித்தார். அதனை எனது வாழ்க்கையில் மறக்கவே முடியாது என்று சொல்லி நெகிழ்ந்திருந்தது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











