Vijay: விஜய் தரம் தாழ்ந்தவர் இல்லை.. போஸ் வெங்கட்டுக்கு பளீச்சுனு சொன்ன அமீர்!
சென்னை: நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி முழுக்க முழுக்க அரசியல் களத்தில் செயல்படப்போவதாக கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தனது ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தினை, தமிழக வெற்றிக் கழகமாக மாற்றி அறித்தார். கட்சி அறிவித்து கிட்டத்தட்ட 9 மாதங்களில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டினை அக்டோபர் 27ஆம் தேதி நடத்தினார். இதில் விஜய்யின் முதல் அரசியல் மேடைப் பேச்சு என்பதால், விஜய் என்ன பேசப்போகின்றார் என்ற ஆவல் பலருக்கும் இருந்தது. விஜய்யின் பேச்சினை கவனித்த பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் விஜய்யை தரக்குறைவாக விமர்சித்து பதிவிட்டார். இது தொடர்பாக அமீர் தனது விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஏற்கனவே கூறியதைப்போல் நடிகர் விஜய் சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகி, முழுக்க முழுக்க அரசியலில் களமிறங்குவதாக அறிவித்தார். இது சினிமா துறையில் இருந்த பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனால் அரசியல் களத்தில் இருந்த பலர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்ததுடன் மறைமுகமாக விமர்சித்தும் வந்தனர். குறிப்பாக விஜய் இன்னும் களத்திற்கு வரவில்லை. மக்களைச் சந்திக்கவில்லை. மக்கள் பிரச்னைகளை கையில் எடுக்கவில்லை என பல விமர்சனங்களை முன்வைத்தனர்.

தமிழ்நாடு அரசியல் களம் கடந்த சில தசாப்தங்களாகவே மாறிவிட்டது. குறிப்பாக நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலும், அவர்கள் கொள்கைகள் என்ன? அவர்களின் கள செயல்பாடு எப்படி உள்ளது என்பதையெல்லாம் நன்கு கவனித்துதான் வாக்கு செலுத்துகின்றனர். அப்படி இருக்கும்போது, நடிகர் விஜய்யின் கன்னிப்பேச்சு பலரது கவனத்தை ஈர்த்தது.
தரக்குறைவான விமர்சனம்: பலரும் அவரது பேச்சு குறித்து தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் தனது எக்ஸ் பக்கத்தில் விஜய்யின் பேச்சு குறித்து மிகவும் தரக்குறைவாக விமரசனம் செய்தது பலரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. அவரது எக்ஸ் பக்கத்தில், “ யப்பா.. உன் கூடவுமா அரசியல் பன்னனும்.. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம்.. 😁😁😁” என குறிப்பிட்டிருந்தார்.
அமீர்: மாநாட்டிற்கு முதல் நாள் சூர்யாவின் கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போஸ் வெங்கட் சூர்யாவை அரசியலுக்கு வரச்சொல்லிப் பேசினார். ஆனால் விஜய்யின் முதல் அரசியல் கன்னிப்பேச்சு குறித்து போஸ் வெங்கட் விமர்சனம் பேசுபொருளாக மாறியது. இது தொடர்பாக இயக்குநர் அமீர் கூறியிருப்பதாவது, “ இயக்குநர் போஸ் வெங்கட்டின் எக்ஸ் தளப் பதிவினைப் பார்த்தேன். அது மிகவும் கண்ணியக் குறைவாக உள்ளது. ஒரு பொதுவெளியில், யப்பா உன் கூடவுமா அரசியல் பண்ணனும் என்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தியிருக்ககூடாது.
தரம் தாழ்ந்தவர்: நீங்கள் விமர்சிக்கும் அளவிற்கு விஜய் தரம் தாழ்ந்தவர் இல்லை. விஜய்யை நீங்கள் குறைத்து மதிப்பிடாதீர்கள். இத்தனை லட்சம் பேரை காசு கொடுக்காமல், ஒற்றைச் சொல்லில் அழைத்து வந்துள்ளார். நீங்கள் வேறு விதமாக விமர்சனம் செய்திருக்கலாம், போஸ் வெங்கட்டின் கருத்து ஏற்புடையதல்லை” என கூறியுள்ளார். இயக்குநர் அமீரின் இந்தக் கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











