இங்கு தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லையா? எல்லாமே அரசியல்.. அமீர் பேச்சு!
சென்னை: கள்ளச்சாராய மரணமாக இருக்கட்டும், பட்டியல் இனத் தலைவர் படுகொலையாக இருக்கட்டும் அவற்றை தவிர்த்து இருக்க வேண்டும். ஆனாலும், இதற்காக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என்று சொல்லிவிட முடியாது. தனிபட்டமுறையில் தலித்தின் தலைவர்கள் பாதுகாக்கப்படவில்லை, மற்ற தலைவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது, இதன் பின் ஒரு அரசியல் இருக்கிறது என்றார் அமீர்.
யோலோ திரைப்படத்திற்கான பூஜை இன்று சென்னையில் போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் அமீரிடம் செய்தியாளர் ஒருவர், தமிழகத்தில் போதை பொருளின் பயன்பாடு அதிகமாக இருக்கு, அதுமட்டுமில்லாமல் ஒரு தேசிய தலைவர் கூலிப்படையினரால் கொல்லப்பட்டு இருக்கிறார் இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்றார்.

இயக்குநர் அமீர் பதில்: இதற்கு பதில் அளித்த அமீர், போதை பொருள் வந்து உலகம் முழுவதும் வியாபித்து இருக்கிறது. தமிழ் நாட்டில் மட்டும் தான் இருக்கிறது என்று சொல்வது ஒரு வகையான அரசியல். போதை பொருள் உலகம் முழுவதும் இருக்கிறது, இந்தியாவின் வடமாநிலமான குஜராத்தில் எல்லாம் டன் கணக்கில் இறக்குமதி ஆகிறது. இதை யார் அனுப்புகிறார்கள், எங்கிருந்து வருகிறது என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த வகையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அது அரசியலாகி விடும்: நடந்து கொண்டிருக்கும் அசம்பாவிதங்களை தடுத்து இருக்க வேண்டும், அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. கள்ளச்சாராய மரணமாக இருக்கட்டும், பட்டியல் இனத் தலைவர் படுகொலையாக இருக்கட்டும் அவற்றை தவிர்த்து இருக்க வேண்டும். ஆனாலும், இதற்காக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என்று சொல்ல முடியாது, இதற்காக நடவடிக்கை எடுத்துக்கொண்டு வருகிறார்கள். இதற்கு, நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் வேண்டுமானால் சீர்கெட்டுவிட்டது என்று விமர்சனம் பண்ணலாம். இதுகுறித்து நானும் விமர்சனம் செய்தால், அது அரசியலாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்றார்.
தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லையா: இதைத்தொடர்ந்து மற்றொரு செய்தியாளர் தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று இயக்குநர் ரஞ்சித் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், தனிபட்டமுறையில் தலித்தின் தலைவர்கள் பாதுகாக்கப்படவில்லை, மற்ற தலைவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்று சொல்வதை ஏற்க முடியாது. இதற்குள் அரசியல் இருக்கிறது. உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.
அரசியல் தான்: இந்த படுகொலை குறித்து பல பின் தகவல்கள் வருகின்றன. இரண்டு நாள் தான் ஆகிஉள்ளது. சிசிடிவி காட்சி உள்ளது, இதில் சரணடைந்தவர்கள் தான் உண்மையான குற்றவாளிகளா என்பதை இன்றைய டெக்னாலஜியில் சுலபமாக கண்டுபிடித்துவிட முடியும். இதனால், இங்கு தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்வது ஒரு அரசியல் தானே தவிர, அனைவருக்கும் பாதுகாப்பு வேண்டும். குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் தான் சார்ந்த சமூகத்தில் போற்றப்படும் நபராக இருந்த அவரை பாதுகாத்திருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அவருக்கு நடந்தது ஒரு துயரமான சம்பவம் தான் அதற்காக தலித்தை பிரித்து பார்க்கும் செயலை நான் செய்ய விரும்பவில்லை என்றார்.


Click it and Unblock the Notifications