அடிச்சவன் தான் சொல்லல.. அடிவாங்குன நீ சொல்லணும்ல.. ஜனநாயகன் சென்சார் விவகாரம்.. அமீர் பளிச்!
சென்னை: ரம்ஜானை முன்னிட்டு மதுரையில் நடைபெற்ற தொழுகையில் கலந்துக் கொண்ட இயக்குநர் அமீர், ஜனநாயகன் சென்சார் பிரச்னை குறித்து தனது கருத்தை பேசியுள்ளார். செய்தியாளர்கள் இயக்குநர் அமீரிடம் விஜய்யின் மதச்சார்பற்ற நிலைப்பாடு குறித்த கேள்விக்கு அவர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மனைவி சங்கீதாவை விஜய் விவாகரத்து செய்வது மற்றும் நடிகை த்ரிஷாவுடன் பொதுவெளியில் ஒன்றாக பங்கேற்றது உள்ளிட்ட விஷயங்களில் விஜய்க்கு எதிரான தனது கருத்துக்களை இயக்குநர் அமீர் பகிரங்கமாக பேசியிருந்தார்.

பார்த்திபன், சமுத்திரகனி, அமீர், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் விஜய்க்கு அந்த விவகாரத்தில் பதிலடி கொடுத்தனர். இந்நிலையில், ஜனநாயகன் சென்சார் பிரச்னை குறித்த கேள்விக்கு அமீர் பேசியிருப்பது பலரது கவனத்தை திருப்பியுள்ளது.
அடிவாங்குறவனும் அமைதியா இருப்பது ஏன்?: விஜய்யின் ஜனநாயகன் படத்தை பார்த்த மறு தணிக்கை வாரியம் படத்துக்கு சான்றிதழை வழங்கியிருக்க வேண்டும் அல்லது வழங்க மறுத்திருக்க வேண்டும். அதைவிட்டு விட்டு முதன்முறையாக தேர்தல் அதிகாரிகள் பார்த்து முடிவு சொல்ல வேண்டும் என மீண்டும் கால தாமதம் செய்வது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் அமீர், அடிக்கிறவன் ஏன் அடிக்கிறேன்னு கடைசி வரை சொல்லமாட்டான். ஆனால், அடிவாங்குறவன் நீ தான.. நீயாவது இதுக்குத்தான் என்னை அடிக்கிறாங்கன்னு சொல்லணும்ல.. ஆனால், நீயும் அமைதியாகவே இருந்தால், மத்தவங்களுக்கு உண்மை எப்படி தெரிய வரும் என அமீர் பேசியுள்ளார்.
விஜய்யை வரவேற்கிறேன்: ரம்ஜான் பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில், மதுரையில் அதனை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இயக்குநர் அமீரிடம், பாஜக கூட்டணிக்கு கடைசி வரை செல்லமாட்டேன் என்றும் மதச்சார்பற்ற அரசியலையே பின்பற்றுவேன் என விஜய் உறுதியாக கூறியுள்ளாரே, அதுதொடர்பான உங்கள் கருத்து என்ன? என்கிற கேள்விக்கு விஜய்யின் அந்த கருத்தை நான் வரவேற்கிறேன் என அமீர் கூறினார்.
கட்சிக்குள் குழப்பம்: எங்களிடம் NDA கூட்டணி பேரம் பேசியது என்று ஆதவ் அர்ஜுனாவும் அப்படி எதுவும் பேசவில்லை என மற்றவர்களும் பேசி வரும் நிலையில், கட்சிக்குள்ளே முரண் இருப்பதை பார்க்க முடிகிறது. அதை அவர்கள் தான் முதலில் சரி செய்ய வேண்டும் என்றும் இயக்குநர் அமீர் கூறினார். ஜனநாயகன் படத்தை தேர்தல் ஆணையம் பார்த்துவிட்டு என்ன பதில் சொல்லும் படத்திற்கு சென்சார் எப்போது கிடைக்கும் என ரசிகர்கள் மற்றும் தியேட்டர் ஓனர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











