ரஜினி, விஜய்க்கே பக்கத்து மாநில சூப்பர் ஸ்டார்கள் தேவைப்படுகிறார்கள்.. அமீர் அதிரடி பேச்சு
சென்னை: Ameer (அமீர்) ரஜினிகாந்த், விஜய்க்கே பக்கத்து மாநில சூப்பர் ஸ்டார்கள் தேவைப்படுகிறார்கள் என்று இயக்குநர் அமீர் தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்தவர் அமீர். மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் ராம், பருத்திவீரன், ஆதிபகவான் உள்ளிட்ட படங்களை இயக்கினார். பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமீரின் பருத்திவீரன் திரைப்படம் ஒட்டுமொத்தமாக தமிழ் சினிமாவின் முகத்தையே மாற்றியது குறிப்பிடத்தக்கது.

வெற்றிமாறன்: அமீர் தற்போது இயக்கத்திலிருந்து ஒதுங்கி நடிகராக அவதரித்திருக்கிறார். வடசென்னையில் அவரது நடிப்பு அனைவரையுமே கவர்ந்தது. அமீர் எப்படி தனது இயக்கத்தால் கவனம் ஈர்த்தாரோ அதேபோல்தான் வெற்றிமாறனும். வெற்றிமாறன் இந்திய அளவில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக அடையாளப்பட்டிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. தற்போது அமீரும், வெற்றிமாறனும் இணைந்து மாயவலை என்ற படத்தை தயாரித்திருக்கின்றனர்.
மாயவலை: இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தை ராமேஷ் பாலகிருஷ்ணா இயக்கியிருக்கிறார். வின்செண்ட் அசோகன், சஞ்சனா ஷெட்டி, சரண், தீனா, சத்யா உள்ளிட்ட பலர் இதில் நடித்திருக்கின்றனர். அமீரும் முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க சினேகன் பாடல்களை எழுதியிருக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகின்றன. இந்த சூழலில் படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது.
அமீர் பேச்சு: அப்போது பேசிய இயக்குநரும் தயாரிப்பாளருமான அமீர், “சினிமா அறிவு யாருக்கு இருக்கிறதோ அவர்களை ரசிப்பதுதான் எனது வேலை. இந்தப் படத்தில் அடிப்பதற்காக நிறைய நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் யாரும் நடிக்க முன்வரவில்லை. அதனால் நானே நடித்துவிட்டேன்.இது எனக்கு புதுமையான அனுபவமாகத்தான் இருக்கிறது. படத்தை பார்த்துவிட்டு நானே வெளியிடுகிறேன் என கூறி வெற்றிமாறன் நம்பிக்கை தந்தார்.
பக்கத்து மாநில சூப்பர் ஸ்டார்கள்: ரஜினிகாந்த், விஜய் ஆகியோருக்கே பக்கத்து மாநில சூப்பர் ஸ்டார்கள் தேவைப்படுகிறார்கள். அதனால் எனக்கு வெற்றிமாறனோ இல்லை வெற்றிமாறனுக்கு நானோ தேவைப்படுவதில் ஆச்சரியமும் இல்லை புதிதும் இல்லை. நான் கொஞ்சம் கோபக்காரனும் சுயமரியாதைக்காரனும்கூட. அதனால்தான் சூர்யாவிடமிருந்து நான் ஒதுங்கிவிட்டேன். ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு யாரும் என்னை அழைக்கவில்லை. நானும் போகவில்லை” என்றார்.


Click it and Unblock the Notifications











