இது தொடர்ந்தால்.. விஜய்யை மட்டுமல்ல யாரையுமே உங்களால் வீழ்த்த முடியாது.. திமுகவை எச்சரிக்கும் அமீர்!
சென்னை: இயக்குநர் அமீர், தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குநர்களில் ஒருவராக உள்ளார். இவரது இயக்கத்தில் வெளியான முதல் படமான மௌனம் பேசியதே படம் கடந்த வாரத்தில் 22வது ஆண்டினைக் கொண்டாடியது. இன்றைக்கும் தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டெட் நடிகையாக உள்ள மௌனம் பேசியதே படத்தின் மூலம் த்ரிஷாவை அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் அமீர்தான். கடந்த வாரம் அந்தப் படம் ரிலீஸ் ஆகி 22ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து ரசிகர்கள் படத்தைக் கொண்டாடினர்.
ஒரு படம் சிறப்பாக இருந்தால் அது யாருடைய படமாக இருந்தாலும், அதனைப் பாராட்டும் பண்பு கொண்டவர் அமீர். கடந்த சில வருடங்களாக படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டிவரும் இவர், அரசியல் மற்றும் பொது நிகழ்வுகள் குறித்தும் கருத்து தெரிவித்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அப்படி அவர் விஜய் மற்றும் திமுக குறித்து தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி முழுக்க முழுக்க அரசியல் களத்தில் களமிறங்கப்போகின்றார் என கடந்த பிப்ரவரி மாதம் தெரிவித்தார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், இவர் அரசியலில் காலடி எடுத்து வைப்பார் என எதிர்பார்த்தவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. கடந்த அக்டோபரில் விஜய், தனது அரசியல் கட்சியின் முதல் மாநில மாநாட்டினை நடத்தினார். அதில் ஆளும் திமுக குறித்து அதிகப்படியாக விமர்சித்தார்.

திமுக: விஜய்யின் பேச்சுக்கு, திமுகவினர் நேரடியாகவும், மறைமுகமாகவும் பதிலடிகளைக் கொடுத்தனர். திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினே விஜய் பெயரைக் குறிப்பிடாமல் விமர்சித்தார். அதேபோல், திமுகவைச் சேர்ந்த திண்டுக்கல் லியோனி உள்ளிட்ட திமுகவினர் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதுமட்டும் இல்லாமல் திமுகவின் மூன்றாம் தர பேச்சாளர்களும் விஜய்யை திமுக மேடைகளிலேயே மிகவும் மோசமாக விமர்சிக்கின்றனர்.

விஜய்: இது பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. இப்படியான நிலையில் நடிகரும் இயக்குநருமான அமீரின் பேச்சு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. அதாவது, நடிகர் விஜய் இப்போதுதான் அரசியல் களத்திற்கு வந்துள்ளார். இன்னும் மக்கள் பிரச்னைகளை அவர் கையில் எடுத்து களத்திற்கு வரவில்லை. அப்படி இருக்கும்போது, விஜய்யின் அரசியல் நிலைப்பாடு இன்னும் முழுமையாக தெரியவில்லை. டங்ஸ்டன் விவகாரத்தில் விஜய்யின் நிலைப்பாடு என்ன? ஒரு நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் விஜய்யின் நிலைப்பாடு என்ன எனத் தெரிந்துகொண்ட பின்னர்தான் மக்கள் அவரை வரவேற்பது குறித்து முடிவெடுப்பார்கள்.

பலவீனம்: திமுக போன்ற கட்சி, மூன்றாம் தரப் பேச்சாளர்களை வைத்து கட்சியை வளர்க்கவேண்டிய அவசியம் இல்லை. மாறாக, கருத்தினை கருத்தால் எதிர்கொள்ளவேண்டும். ஒருவரின் தொழிலை இழிவுபடுத்திப் பேசுவதாலோ, ஆபாசமாக பேசுவதாலோ எவரையும் வீழ்த்திவிட முடியாது. விஜய்யை தரம் தாழ்ந்து பேசுவதால், திமுகதான் தனது வாக்குகளை இழக்கும். அது திமுகவுக்குத்தான் பலவீனமாக அமையும் என பேசினார். இவரது பேச்சு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications











