Ameer - இப்படியே இருக்காது.. ஒருநாள் விளைவை சந்திப்பீங்க.. தயாரிப்பாளரை கடுமையாக எச்சரித்த அமீர்
சென்னை: Ameer Audio (அமீர் வெளியிட்ட ஆடியோ) பருத்திவீரன் விவகாரத்தில் அமீர் பேசி வெளியாகியிருக்கும் ஆடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
பருத்திவீரன் பிரச்னைதான் கடந்த சில வாரங்களாக கோலிவுட்டின் ஹாட் டாபிக். கார்த்தி 25 நிகழ்ச்சிக்கு தனக்கு முறையான அழைப்பு வராததால் செல்லவில்லை என அமீர் சொல்லியதை அடுத்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜவோ; பருத்திவீரன் படத்தில் அமீர் பொய் கணக்கு எழுதினார்; என்னுடைய பணத்தில்தான் வேலையையே கற்றுக்கொண்டார் என பேசினார்.

கண்டனம்: அவரது இந்தப் பேச்சு பலரிடமும் கண்டனத்தை ஏற்படுத்தியது. மிகச்சிறந்த படைப்பாளியை இப்படியா பேசுவது; அவருக்கு இல்லையென்றால் கார்த்திக்கு இப்படி ஒரு படம் கிடைத்திருக்குமா என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டன. அமீரும் ஞானவேல் ராஜாவுக்கு அறிக்கை வெளியிட்டு தக்க பதிலடியை கொடுத்திருந்தார். அதேபோல் சமுத்திரகனி, சசிகுமார், கரு.பழனியப்பன், பாரதிராஜா உள்ளிட்டோரும் ஞானவேலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
வருத்தம்: படைப்பாளிகள் ஒன்று சேர்வதை உணர்ந்துகொண்ட அமீர், தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார். இத்துடன் இந்தப் பஞ்சாயத்து முடியும் என்று பார்த்தால் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்த வலைப்பேச்சு பிஸ்மி, 'அமீருக்கு எதிராக வீடியோ போட சொல்லி என்னை அணுகினார்கள். ஆனால் அமீர் பக்கம் நியாயம் இருப்பதால் முடியாது என்று சொல்லிவிட்டேன்' என குறிப்பிட்டிருந்தார்.
அமீர் ஆடியோ: பிஸ்மியின் இந்தப் பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமீர் பேசியதாக ஒரு ஆடியோ வலைப்பேச்சு யூட்யூப் சேனலில் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த ஆடியோவில், "இந்த மாதிரி விஷயங்களை வெளியே பேசக்கூடாது கடந்த போய்விட வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் யாராவது என்னை பேச வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். பருத்திவீரன் பிரச்னையில் தனஞ்ஜெயன் தொடர்ந்து தலையிடுகிறார்.

உண்மை: சசிகுமாரை அவர் சந்தித்து பேசியது உண்மை. சசிகுமார் பதிவு போட வேண்டுமென்றால் நான் அவரிடம் சொல்கிறேன். அதேபோல் தயாரிப்பாளர் சங்கத்தில் கபாரை சந்தித்து பேசியிருக்கிறார். இதுதொடர்பாக நான் தனஞ்ஜெயனை தொடர்புகொண்டபோது அவர் என்னுடைய அழைப்பை ஏற்கவில்லை. மேலும் கரு.பழனியப்பனிடமும் இதுபற்றி பேசியிருக்கிறார். இப்படி அவர் தொடர்ந்து வேலை செய்துகொண்டே இருக்கார்.
ஏன் என்று புரியவில்லை: அவர் ஏன் இந்த விஷயத்தில் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்று புரியவில்லை. கேட்டால் அவர் ஸ்டூடியோ கிரீனில் ஒரு வேலையில் இருக்கிறார். அதற்காக எனக்கும் ஞானவேலுவுக்கும் இருக்கும் பிரச்னையில் என்னை சார்ந்தவர்களையும், திரைத்துறையை சார்ந்தவர்களை சந்திப்பது கண்டிக்கத்தக்கது. நீங்கள் என்னுடைய வலியில் விளையாடுகிறீர்கள். அதோட விளைவை கண்டிப்பாக ஒரு நாள் சந்திப்பீர்கள். காலம் இப்படியே கடந்துவிடும். நாம் உயரத்தில் இருக்கிறோம் என்று நினைக்காதீர்கள். இப்படியே இருக்காது. இதை நான் அவருக்கு எச்சரிக்கையாகவே சொல்கிறேன்" என்று பேசியிருக்கிறார். இந்த ஆடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











