Manobala Passes Away: அதிர்ச்சி.. இயக்குநரும் நடிகருமான மனோபாலா காலமானார்.. சோகத்தில் திரையுலகம்
சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஊர்க்காவலன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவரும் ஏகப்பட்ட தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக கலக்கிய மனோபாலா காலமானார். அவருக்கு வயது 69.
கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நடிகர் மனோபாலா உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

மனோபாலா சமீப காலமாக பல்வேறு பிரபலங்களின் இறுதி ஊர்வலத்துக்கு சென்று வந்தார். இத்துடன் நிறுத்திக்கோ ஆண்டவா போதும் தாங்க முடியாது என வேதனையுடன் மயில்சாமியின் மரணத்தின் போது புலம்பி இருந்தார். இந்நிலையில், அவரது மறைவு ஒட்டுமொத்த சினிமா பிரபலங்களையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன.
நடிகர் ஜி.எம். குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த அதிர்ச்சி செய்தியை பகிர்ந்து தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
மனோபாலா எனும் மகா நடிகன்: 1953ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி நாகர்கோயிலில் பிறந்த மனோபாலா 1979ம் ஆண்டு புதிய வார்ப்புகள் படத்தில் உதவி இயக்குநராக பாரதிராஜாவிடம் வேலை செய்த நிலையில் ஒரு சிறிய காட்சியில் நடிகராகவும் தோன்றினார்.
அதன் பின்னர் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த மனோபாலா நகைச்சுவை நடிகராக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து அசத்தினார்.

வடிவேலு, சந்தானம், விவேக் என பல முன்னணி நடிகர்களுடன் காமெடி காட்சிகளில் இணைந்து நடித்து பட்டையை கிளப்பிய மனோபாலாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் தமிழ் சினிமாவில் உள்ளனர்.
அவரது ஒல்லியான பாடியும் அதை வைத்து அவர் செய்யும் பாடி லேங்குவேஜும் ரசிகர்களை பார்த்தமாத்திரத்திலேயே சிரிக்க வைத்துவிடும். சோறு போடுறதுக்கு முன்னாடி ஏன் உப்பு தின்ன என சந்தானம் மனோபாலாவை பார்த்துக் கேட்கும் காட்சிகள் எல்லாம் வேறலெவல் காமெடி அலப்பறைகள்.
கஜினி, கலகலப்பு, அரண்மனை, தலைவா, காஞ்சனா, பிகில், டான் என பல படங்களில் தனது நகைச்சுவையால் ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார்.
சூப்பர் ஸ்டாரை இயக்கிய இயக்குநர்: 1982ம் ஆண்டு ஆகாய கங்கை படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான மனோபாலா, நான் உங்கள் ரசிகன், பிள்ளை நிலா, பாரு பாரு பட்டணம் பாரு, டிசம்பர் 31, சிறை பறவை, தூரத்து பச்சை, என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் என பல படங்களை இயக்கி உள்ளார்.
1987ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஊர்க்காவலன் படத்தை இயக்கிய இயக்குநரும் மனோபாலா தான் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நல்ல நண்பராகவும், ஆலோசகராகவும் இருந்தவர் மனோபாலா.

சதுரங்க வேட்டை தயாரிப்பாளர்: நடிப்பு மற்றும் இயக்கத்தை தாண்டி சில நல்ல படங்களையும் மனோபாலா தயாரித்துள்ளார். இயக்குநர் எச். வினோத் அறிமுகமான சதுரங்க வேட்டை படத்தை தயாரித்தவரே மனோபாலா தான்.
அதன் பின்னர் பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான பாம்பு சட்டை மற்றும் இன்னமும் வெளியாகாத சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட படங்களையும் இவர் தான் தயாரித்துள்ளார்.
கண்ணீர் கடலில் ரசிகர்கள்: தொடர்ந்து காமெடி நடிகர்கள் ஒவ்வொருவராக மறைந்து வருவது தமிழ் சினிமாவின் சாபக்கேடா? என்கிற கேள்வியை மயில்சாமி மரணத்தின் போது கேட்டிருந்த மனோபாலா இனிமேல் எந்தவொரு பிரபலத்தின் மரணத்துக்கும் செல்லும் சக்தி இல்லை எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், அவரது மறைவு ஒட்டுமொத்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்தி உள்ளன.


Click it and Unblock the Notifications