Manobala Memories: இட்லியும் வத்தக் குழம்பும்.. பிரபலங்களுக்கு தன் கையாலேயே சமைத்துக் கொடுத்த மனோபாலா!
சென்னை: தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், யூடியூபர் என பன்முகத் தன்மைக் கொண்ட மனோபாலா புதன்கிழமை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
மனோபாலாவின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய், வடிவேலு, ஆர்யா உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தும் சிலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

இன்று காலை 10 மணிக்கு சாலிகிராமத்தில் இருந்து வளசரவாக்கத்தில் உள்ள மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாக்கியராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இன்றும் மனோபாலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், சினிமா பிரபலங்கள் பலருக்கும் மனோபாலா செய்யும் வத்தக் குழம்பு என்றால் அவ்வளவு இஷ்டமாம். அதை பற்றிய ஒரு தொகுப்பை இங்கே பார்ப்போம்..
எப்பவுமே சிரித்த முகம்: இயக்குநராக இருந்த காலக்கட்டத்தில் கூட ரஜினிகாந்த் உள்ளிட்ட உச்ச நடிகர்களை இயக்கும் போது கூட சிரித்த படியே ஜோக் சொல்லி அவர்களிடம் நடிப்பை வாங்கும் திறமைக் கொண்டவர் மனோபாலா என அவருடன் பழகிய பல பிரபலங்கள் கூறி உள்ளனர்.
நகைச்சுவை நடிகராக ஆன பிறகு அவர் ஒரு முறை கூட முறைத்தே பார்த்தது கிடையாது என்றும் வாழ்க்கையை அவ்வளவு எளிதாகவும் குழந்தை மனத்துடனுமே வாழ்ந்து சென்றவர் மனோபாலா என்கின்றனர்.
மாடித்தோட்டம் போட்ட மனோபாலா: தனது வீட்டில் நடிகர் மனோபாலா மாடித் தோட்டம் போட்டு வளர்த்து வந்தார். அதில், விளையும் வெண்டக்காய், பாகர்காய் உள்ளிட்ட காய்களை வைத்து தான் செல்லும் படப்பிடிப்புகளுக்கு தன் கையாலே சமைத்துக் கொண்டு மற்ற நடிகர்களுக்கு கொடுப்பாராம்.
சினிமா ஷூட்டிங்கிற்காக வெளி மாநிலங்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ சென்று விட்டால் அங்கே நல்ல சாப்பாடு கிடைக்காத நிலையில், மனோபாலா அங்கு அவர்களுடன் இருந்தால் எந்த கவலையும் இல்லை என்கின்றனர். நொடிப்பொழுதில் நடிகர் சமையல் கலைஞராக மாறி வித விதமான உணவுகளை சமைத்து அசத்தி விடுவார் என ஓவியக் கலைஞர் மனோபாலாவின் கைகள் பெயின்ட் பிரஷ்ஷை மட்டுமின்றி கரண்டியையும் கச்சிதமாக பிடிக்கும் என்கின்றனர்.

இட்லியும் வத்தக் குழம்பும்: தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இயக்குநராகவும் வேஸ்ட் பேப்பர் எனும் யூடியூப் சேனலையும் நடத்தி வந்த மனோபாலாவை சந்திக்க யாராவது அவரது வீட்டுக்குச் சென்றால் அதிகாலையிலேயே மணக்க மணக்க இட்லியும் வத்தக் குழம்பும் ரெடியாகி இருக்கும் என்கின்றனர்.
பாரதிராஜா, பாக்கியராஜ் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு மனோபாலா வைக்கும் வத்தக் குழம்பு என்றால் கொள்ளைப் பிரியம் என மனோபாலாவின் புகழை அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டுச் செல்லும் பல பிரபலங்கள் வாயாற பாராட்டிச் செல்கின்றனர்.
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தனது சமையல் திறமையை மனோபாலா வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. குக் வித் கோமாளி பிரபலங்களும் மனோபாலாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்று வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











