அமீர் மீது அபாண்ட பழி.. ஞானவேல் சொல்வது பொய்.. உண்மையை உடைத்த சசிக்குமார்!
சென்னை: பருத்தி வீரன் விவகாரம் பூதாகரமாகி வரும் நிலையில், இயக்குநர் சசிகுமார் அமீருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
கார்த்தி, இயக்குநர் அமீர், ப்ரியாமணி ஆகியோருக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்த திரைப்படம் பருத்தி வீரன்.
பருத்திவீரன் படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய கார்த்தி, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் வரிசையில் இருக்கிறார்.
இவர் நடிப்பில் வெளியான கைதி, பொன்னியின் செல்வன், சர்தார் போன்ற படங்கள் இவரின் நடிப்புக்கு தீனி போடும் படங்களாக இருந்தன.

அமீர் வருத்தம்: ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு தன்னை கூப்பிடவில்லை என அமீர் வேதனையை வெளிப்படுத்தினார். மேலும், பருத்தி வீரன் படத்தால் தனக்கு 2 கோடிக்கும் மேல் கடன் உள்ளது. சிவகுமார், சூர்யா, கார்த்தி குடும்பத்தினருடன் தனக்கு நெருங்கிய பழக்கம் இருந்தது. ஆனால், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் எங்கள் நட்பை கெடுத்துவிட்டார் என்று அமீர் கூறினார். அமீரின் இந்த பேச்சு கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது.
அமீர் மீது குற்றச்சாட்டு: அதேநேரம் அமீரின் இந்த குற்றச்சாட்டை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மறுத்து பேட்டி கொடுத்திருந்தார். அதில், அமீருக்கு அவ்ளோ சீன்லாம் இல்லை, அவர் தான் என்னை ஏமாற்றிவிட்டார். நந்தா படத்தில் இருந்து சூர்யா, அமீர் இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. இதனால், அமீரின் முதல் படமான மெளனம் பேசியதே படத்தில் சூர்யா நடித்துக் கொடுத்தார். ஆனால் அமீர் இயக்குனர் ஆனதும் ரொம்பவே மாறிவிட்டார்.
ஃபர்ஸ்ட் காப்பி: அமீர் என்னிடம் பல லட்ச ரூபாய் கடன் வாங்கி திருப்பி கொடுக்க முடியாமல் போனதால், பருத்திவீரன் படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் இயக்கி கொடுத்தார். அதேபோல், 2.75 கோடி பட்ஜெட்டில் ஃபர்ஸ்ட் காப்பி தருவதாக சொல்லிவிட்டு, இரண்டு ஆண்டுகளில் 4 கோடி வரை செலவு செய்து பருத்தி வீரன் படத்தை எடுத்தார் என அடுக்கடுக்கான புகாரை அமீர் மீது ஞானவேல் ராஜா கூறியிருந்தார்.
நானே கடனாக கொடுத்தேன்: இந்நிலையில், இயக்குநரும் நடிகருமான சகிகுமார் தனது எக்ஸ் தள பக்கத்தில், அண்ணன் அமீர் குறித்த ஞானவேல் ராஜாவின் கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறேன். 'பருத்திவீரன்' இறுதி கட்ட படப்பிடிப்பிற்கான முழு தொகையையும் அண்ணன் அமீருக்கு நானே கடனாக கொடுத்தேன். எங்களுக்கான பணம் செட்டில் செய்யப்படாமலேயே படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அவர் சொல்வது உண்மை என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











