தமிழ்ல பேசுனா ஃபிகரு அவமானமா பாக்குதா.. அப்படிப்பட்ட ஃபிகரே வேண்டாம்.. செல்வராகவன் நச்!
சென்னை: காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் என பல வெற்றிப்படத்தை கொடுத்து தன்னை ஒரு இயக்குநராக நிலை நிறுத்திக் கொண்டவர் இயக்குநர் செல்வராகவன். இணையத்தில் எப்போதும் ஏதாவது கருத்தை கூறி வரும் இவர், தற்போது, தமிழில் பேசுவதை அவமானமாக பார்க்காதீர்கள் என்று கெஞ்சி கேட்டுள்ளார்.
இயக்குநர் செல்வராகவன், விஜய்யின் பீஸ்ட் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்பு ஹீரோவாக சாணிக் காயிதம், பகாசுரன் உள்ளிட்ட படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ஃபர்ஹானா, மார்க் ஆண்டனி, ராயன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படங்களைத் தொடர்ந்து, தெலுங்கில் ரவி தேஜா - கோபிசந்த் மலினேனி கூட்டணியில் உருவாகும் புது படத்தில் நடிக்கிறார்.

தமிழில் பேசுவது அவமானமா: தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டு மக்களை நான் கெஞ்சிக் கேட்கிறேன். தமிழ் இனி மெல்லச் சாகும்ன்னு பாரதியார் சொன்னாரு. அது எந்த அளவுக்கு உண்மைன்னா தமிழ் இப்போது ஐசியு-வெண்டிலேட்டர்ல இருக்கு. தமிழ்ல பேசுறத அவமானமா அருவருப்பா நினைக்குறாங்க. எங்க போனாலும் இங்கிலீஷ்.. இங்கிலீஷ் தான், இதனால் இத பேசத் தெரியாதவன் கூட திக்கி திணறி பேசுகிறான். இதனால், தமிழில் பேசுவதை அவமானமா, அருவருப்பா நினைக்கிறார்கள்.
இங்கிலீஷ் தெரியாம அழுதேன்: நான் ஸ்கூல்ல, காலேஜில இங்கிலீஷ் தெரியாம எவ்வளவு அவமானப்பட்டு இருக்கிறேன். கூனிக்குறுகி, எவ்வளவு அழுது இருக்கிறேன். மொத்த க்ளாசும் இங்கிலீஷில் தான் பேசுவார்கள், இங்கிலீஷ் தெரிஞ்ச பசங்க தான் கையை காட்டி பேசுவாங்க. இங்கிலீஷே தெரியாம எப்படியோ கடைசி பென்ச்சுல இருந்து, ஏதோ ஏனோதானோ என்று படிச்சு வெளியே வந்துட்டோம். அப்புறம் தான் எனக்கு ஒரு வெறி வந்தது இங்கிலீஷ் தானே என்று. இதனால், இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் என நிறைய இங்கிலீஷ் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். அர்த்தம் தெரியவில்லை என்றால் அதற்காக பக்கத்திலேயே ஒரு டிக்ஷ்னரியை வச்சுக்கிட்டு டக்கு டக்குனு பார்த்து பார்த்து இதற்கு இதுதான் அர்த்தமா என்று தெரிந்து கொண்டேன்.
இது ஒரு கஷ்டமான விஷயம் தான் ஆனால், பண்ண பண்ண அது தானவே வந்துவிட்டும். ஒரு கட்டத்தில் பேச ஆரம்பித்தேன். பின் நான் சினிமாவிற்கு வந்த பின் தான் நன்றாக பேசவே ஆரம்பித்தேன். இன்னைக்கும் நான் சரியாக பேசுகிறேனா என்று தெரியாது. அதுபற்றி எனக்கு கவலையும் கிடையாது. நான் தமிழன், நான் எங்கே போனாலும் தமிழில் தான் பேசுவேன்
ஃபிகரே வேண்டாம்: நான் உங்களிடம் கேட்பது ஒன்னே ஒன்னு தான், நீங்க தமிழில் பேசுங்க, எங்கே போனாலும் தலை நிமிர்ந்து குரலை உயர்த்தி தமிழில் பேசுங்க, அவங்க உங்களை அவமானமாக பார்த்தால், அவர்களை முறைத்துவிட்டு, என்ன யோசிக்கிறீங்க என்று தைரியமாக கேளுங்க, அப்படி இல்லாம எதாவது ஃபிகர் உங்களை அவமானமா பார்த்து, முகம் சுளிச்சா அப்படி பட்ட ஃபிகரே நமக்கு தேவையில்லை தூக்கி போடுங்க என்று செல்வராகவன் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











