செல்வந்தராக பிறந்து.. சொத்துக்களை இழந்து.. துறவியாக வாழ்ந்து மறைந்த தக்காளி சீனிவாசனின் கண்ணீர் கதை!
சென்னை: இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் என பன்முகத்திறமை கொண்டவர் தான் தக்காளி சீனிவாசன். 90கால கட்டத்திலேயே ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகராக அறிவியலும், அமானுஷ்யம் நிறைந்த படங்களை கொடுத்து தமிழ் சினிமாவை வியப்பில் ஆழ்த்தினார். சினிமா பின்புலம் இல்லாமல் திரைத்துறையில் கால்பாதித்த சீனிவாசன் சாதித்தது எப்படி? கடைசி காலத்தில் துறவி போல் வாழ்ந்தது ஏன்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
1962 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ந் தேதி பாலக்காட்டை பூர்வீகமாக கொண்ட, KSE ஐயர் மற்றும் கல்யாணி தம்பதியர்க்கு கடைகுட்டி மகனாகப் பிறந்தவர் தான் சீனிவாச ஐயர். இவருக்கு இரண்டு அண்ணன்கள் மற்றும் ஒரு அக்கா என பாசமான குடும்பத்தில் செல்ல மகனாக வளர்ந்து வந்தார்.
தக்காளி சீனிவாசன்: கே.எஸ்.ஈ. ஐயா பெரிய தொழிலதிபராக இருந்ததால், பணத்திற்கும் செல்வ செழிப்பிற்கும் குறைவு இல்லை. சீனிவாசன் சென்னை எழும்பூரில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். பள்ளியில் படிக்கும் போதே நாடகம் எழுதுவதிலும், கட்டூரை எழுதுவதிலும் ஆர்வமாக இருந்தார். பள்ளிப்படிப்பை முடித்த சீனிவாசன் கோவையில் உள்ள PSG தொழில்நுட்ப கல்லூரியில் வானியல் தொடர்பான படிப்பை படித்து அதில் தேர்ச்சியும் பெற்றார். சீனிவாசனுக்கு வானியல் தொடர்பான பணி வந்த போதும், சினிமா மீது ஆர்வம் இருந்ததால், அதை புறக்கணித்துவிட்டு, சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.

திறமையானவர்: 'இவர்கள் வருங்கால தூண்கள்' என்கிற படத்தை தயாரித்த தக்காளி சீனிவாசன், அந்த படத்தில் வில்லனாகவும் இருந்தார். அந்த படத்தை தொடர்ந்து பிரபு, சரண்யா, லிஷா நடிப்பில் வெளியான 'மனசுக்குள் மத்தாப்பூ' என்ற படத்தின் விநியோகஸ்தராக இருந்தார். நடிகர், பாடகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என படிப்படியாக வளர்ந்து கொண்டு இருந்த சீனிவாசனை உச்ச தொட வைத்த திரைப்படம் தான் 'சூரசம்ஹாரம்' இந்த படத்தில் போதை பொருள் கடத்தல் மன்னன் கிட்டியின் மகனாக நடித்திருந்தார்.
ஜென்ம நட்சத்திரம்: அந்த படம் சீனிவாசனுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அதன் பின் தனது அறிவியல் புலமையை வைத்து நாளைய மனிதன், அதிசய மனிதன் என, மக்களே பீதி கொள்ளும் அளவிற்கு தரமான படத்தை தயாரித்தார். இதையடுத்து ஜென்ம நட்சத்திரம் என்ற பேய் படத்தை இயக்கினார். இந்த படம் வணிகரீதியாக வெற்றி பெற்றதால், விட்னஸ், அசோகவனம், அடுத்தடு என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து இருந்த தக்காளி சீனிவாசனின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி கரமாக இல்லாததால், திருமணமான சில ஆண்டுகளிலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

துறவி வாழ்க்கை: புகழின் உச்சத்தில் கொடி கட்டி பறந்த தக்காளி சீனிவாசனின் படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்ததால் சொத்துக்களை இழந்தார். ஒரு கட்டத்தில் எல்லாம் கை மீறிப்போக விரக்திக்கு சென்ற தக்காளி சீனிவாசன், தன்னை அன்பும், பாசமும் காட்டி வளர்ந்த சகோதரர்களுக்கு எதுவுமே செய்யவில்லையே என்ற மனவேதனைக்கு உள்ளாகி, காசி, ராமேஸ்வரம் என ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்பட்டு துறவியாக மாறினார். பின் திருவண்ணாமலையில் ஒரு ஆசிரமத்தை கட்டி அதில் ஆதரவற்ற குழந்தைகளை தத்து எடுத்து வளர்ந்து வந்தார்.
இந்த ஆசிரமத்தில் இருந்து ஓய்வு எடுப்பதற்காக 2023 ஆம் ஆண்டு பெங்களூர் சென்ற இவர் மார்ச் 10ந் தேதி, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது இறுதி சடங்குகளை இவர் தத்து எடுத்து வளர்த்தவர்கள் முன்னின்று நடத்தி உள்ளனர். செல்வ செழிப்புடன் செல்ல மகனாக வாழ்ந்து வந்த சீனிவாசன், கடைசி காலத்தில் அனைத்தையும் வெறுத்து துறவி வாழ்க்கை வாழ்ந்தது தான் வேதனை.


Click it and Unblock the Notifications











