நாற்பது கோடி இருக்கா? கேடுகெட்ட அரசியல்.. தங்கர்பச்சான் ஆதங்கம்!
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நாளை ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவுகிறது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பதை கணிக்கவே முடியாத ஒன்றாக இருக்கிறது.
அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்தனர். நேற்றோடு பிரச்சாரம் முடிவடைந்து தமிழகம் நாளை தேர்தலை சந்திக்க உள்ளது. இந்நிலையில், இயக்குநரும் நடிகருமான தங்கர் பச்சான் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தி பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

கேடு கெட்ட அரசியல்: அதில், நாற்பது கோடிகள் இருந்தால் மட்டுமே இனி சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் நுழைய முடியும் எனும் கேடுகெட்ட நிலைக்கு அரசியலை கொண்டு சென்று விட்டார்கள். செலவழித்தப் பணத்தை திருப்பி எடுக்கவும், மேலும் கொள்ளை அடித்து அடுத்த தேர்தலை சந்திக்கவும் மட்டுமே ஐந்தாண்டுகள் வேலை செய்வார்கள். இதில் மக்களாட்சிக்கு இனி என்ன வேலை இருக்கப் போகின்றது? இனிமேல் எந்த ஒரு சாதாரண மனிதனும் அரசியல் மூலம் மக்களுக்குத் தொண்டு செய்யும் எண்ணத்தை விட்டுவிட வேண்டியதுதான். அனைத்து திருட்டுத்தனங்களையும் செய்வதற்கு மக்கள் கேள்வி கேட்காதவாறு அவர்களையும் கூட்டு சேர்த்துக் கொள்ளும் சூழ்ச்சியை அறிமுகப்படுத்திய கட்சி தமிழ்நாட்டில் இருக்கும் வரை உண்மையான மக்களாட்சி எக்காலத்திலும் மலரப் போவதில்லை என தங்கர் பச்சான் மன வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
தங்கர் பச்சான்: ஒளிப்பதிவாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட தங்கர் பச்சான் 'மலைச் சாரல்' படத்தில் ஒளிப்பதிவாளராக தனது சினிமா பயணத்தை தொடங்கினார். அதன் பின், மோகமுள், பாரதி போன்ற படங்களில் பணியாற்றிய இவர், பார்த்திபன் நடித்த அழகி படத்தை இயக்கி அதில் முக்கிய ரோலில் நடித்தும் இருந்தார். அதன் பின் பல படங்களில் இயக்கிய தங்கர் பச்சான், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். தற்போது, சட்டமன்ற தேர்தலில் பாமக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.


Click it and Unblock the Notifications