AR Murugados : ரஜினியின் தர்பார் படத்தின் தோல்விக்கு இதுதான் காரணமா.. மனம்திறந்த ஏஆர் முருகதாஸ்!
சென்னை : நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா என லீட் கேரக்டர்களுடன் வெளியான படம் தர்பார். ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
ரஜினியின் தீவிர ரசிகரான ஏஆர் முருகதாஸ், படத்தில் சிறப்பான பல விஷயங்களை சேர்த்திருந்தாலும், வலுவான திரைக்கதை இல்லாமல் படம் சொதப்பியது.
இதனிடையே இந்தப் படத்தின் தோல்விக்கான காரணம் குறித்து தற்போது பேட்டியொன்றில் ஏஆர் முருகதாஸ் வெளிப்படுத்தியுள்ளார்.

ரஜினியின் தர்பார் படம்
நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டில் ரிலீசானது தர்பார் படம். ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. கத்தி, துப்பாக்கி, 7ம் அறிவு உள்ளிட்ட சிறப்பான படங்களை கொடுத்த ஏஆர் முருகதாஸ், ரஜினிக்கும் மாஸான படத்தை கொடுப்பார் என்று மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் வெளியான இந்தப் படம் சொதப்பியது.

சொதப்பிய திரைக்கதை
படத்தின் பல காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தாலும் ரஜினி போன்ற மாஸ் ஹீரோவுடன் களமிறங்கும் சூழலில், அவருக்கு ஏற்ற கதை மற்றும் திரைக்கதை அமைய வேண்டியது அவசியம். ரஜினி மற்றும் அவரது படங்களுக்கான எதிர்பார்ப்பை இந்த இடங்களில்தான் இயக்குநர்கள் தவற விடுகின்றனர். அந்த வகையில் தர்பார் படத்தின் திரைக்கதையை வலுவாக அமைக்க தவறியிருந்தார் ஏஆர் முருகதாஸ். பல இடங்களில் ரசிகர்கள் கொட்டாவி விடும் சூழல் திரையரங்குகளில் காணப்பட்டது.

கேரக்டருக்கு உயிர் கொடுத்த ரஜினி
ஆனாலும் இந்த கேரக்டருக்கு தன்னுடைய ஸ்டைலால் உயிர் கொடுத்திருந்தார் ரஜினி. மும்பையில் போலீஸ் அதிகாரியாக ஆதித்யா அருணாச்சலமாக களமிறங்கும் ரஜினி, போதை தடுப்பு மற்றும் பெண்கடத்தல் தடுப்பில் ஈடுபட, அதன் காரணமாக அவரது மகள் கொல்லப்பட என இந்தப் படம் வழக்கமான கதையுடன்தான் இருந்தது. இருந்தபோதிலும் தன்னுடைய ஸ்டைல் பேச்சு, நயன்தாராவுடனான காட்சிகள் என படம் வித்தியாசப்பட்டது.

தர்பார் குறித்து பேசிய இயக்குநர்
இருந்தாலும் சொதப்பலான திரைக்கதை படத்தின் வெற்றியையும் பாதித்தது. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் தோல்வி குறித்து பேட்டியொன்றில் தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார் முருகதாஸ். பிப்ரவரியில் இந்தப் படத்தின் பேச்சுவார்த்தைகள் துவங்கப்பட்ட நிலையில், ரஜினியின் அரசியல் பிரவேசம் காரணமாக படத்தை மார்ச் மாதத்திலேயே துவங்கவேண்டிய கட்டாயமும் ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய வேண்டிய தேவையும் தனக்கு இருந்ததாகவும் ஏஆர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

ஏஆர் முருகதாசின் தவறான முடிவு
இந்த நெருக்கடி காரணமாக சரியான திட்டமிடலுடன் படத்தை இயக்க அவகாசம் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ள ஏஆர் முருகதாஸ், இது தன்னுடைய தவறான முடிவு என்பது பிறகுதான் புரிந்தது என்றும் கூறியுள்ளார். தான் ரஜினியின் தீவிர ரசிகன் என்பதால், நெருக்கடியான சூழலில் இருந்தாலும் அவரது படத்தை மிஸ் செய்ய தான் விரும்பவில்லை என்றும் அதனால்தான் படத்தை ஒப்புக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

நெருக்கடியான சூழல்
அந்த சூழலில் ரஜினி அரசியலுக்கு வரவிருந்த நிலையில், கட்சித் துவங்கவுள்ளதாகவும், தர்பார்தான் அவரது கடைசி படம் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் இந்தப் படத்தின் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஏஆர் முருகதாஸ் களமிறங்கினார். படத்தை மிகச்சிறந்த வெற்றிப் படைப்பாக கொடுக்கவும் நினைத்து அவர், சிறப்பான பங்களிப்பை செய்திருந்தார் ஆனாலும் இந்தப் படம் அவருக்கு கைக்கொடுக்கவில்லை.

தயாரிப்பாளர் ஏஆர் முருகதாஸ்
ஆகஸ்ட் 16 1947 படத்தை தயாரித்துள்ளார் ஏஆர் முருகதாஸ். படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படத்தில் கௌதம் கார்த்திக் லீட் கேரக்டரில் நடித்துள்ளார். பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தின் மோஷன் போஸ்டர்கள், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனிடையே பிரமோஷனின் ஒரு பகுதியாக பல பேட்டிகளை கொடுத்து வருகிறார் இயக்குநர் ஏஆர் முருகதாஸ்.


Click it and Unblock the Notifications











