படம் இல்லைனாலும் 20 வருடங்களாக தொடரும் நட்பு.. அஜித் துக்கத்தில் கலந்துகொண்ட பிரபல இயக்குநர்
சென்னை: அஜித்தின் தந்தை இன்று உயிரிழந்ததை அடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அஜித் நடித்த தீனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதன் பிறகு அவர் இயக்கிய பல படங்கள் ஹிட்டாக இந்தியாவின் முன்னணி இயக்குநராக வலம் வந்துகொண்டிருக்கிறார் முருகதாஸ்.

அஜித்துக்கு அமைந்த பக்கா கமர்ஷியல் படம்
கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான படம் தீனா. இந்தப் படத்தி அஜித்துடன் சுரேஷ் கோபி, லைலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்தப் படம்தான் அஜித்தை ஆக்ஷன் படங்களில் அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தி சென்றது. இதுவரை அஜித்தின் படங்களில் வந்த அவரது அறிமுக காட்சிகளில் தீனா படத்திற்கு எப்போதும் தனியிடம் உண்டு. அதேபோல் இப்படத்தில் அஜித்தின் கெட்டப்பும் அவரது ரசிகர்களால் இன்றும் ரசிக்கப்படுகிறது.

தீனாவுக்கு பிறகு இணையாத அஜித், முருகதாஸ்
தீனா படத்துக்கு பிறகு அஜித்தை வைத்து மிரட்டல் என்ற படத்தை தொடங்கினார் முருகதாஸ். அந்தப் படத்தின் போட்டோஷூட்டும் நடத்தப்பட்டது. அசின் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் என்ன காரணத்தினாலோ அந்தப் படம் போட்டோஷூட்டோடு நிறுத்தப்பட்டுவிட்டது. அந்தப் படம்தான் சூர்யா நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான கஜினி திரைப்படமாகும். இதனையடுத்து அஜித்தும், முருகதாஸும் இணையவே இல்லை.

நேரில் அஞ்சலி செலுத்திய முருகதாஸ்
இந்தச் சூழலில் நடிகர் அஜித்குமாரின் தந்தை இன்று காலை உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதனையடுத்து பலரும் அவருக்கு தங்களது ஆறுதலை தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில் ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் நடிகர் அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்ற இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அஜித்தின் தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அஜித்குமாருக்கு தனது ஆறுதலை தெரிவித்தார்.

இன்று காலை அஜித் தந்தை மரணம்
முன்னதாக, கடந்த நான்கு வருடங்களாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அஜித்தின் தந்தை சுப்ரமணியம் படுத்த படுக்கையாக இருந்தார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துவந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்தார். அவரது உடலானது பெசன் ட் நகரில் இருக்கும் மின் மயானத்தில் இன்று காலை தகனம் செய்யப்பட்டது. இந்த இறுதி நிகழ்வில் அஜித்தும், அவரது உறவினர்களும் மட்டுமே கலந்துகொண்டனர்.

மீண்டும் எப்போது கூட்டணி
ஏ.ஆர்.முருகதாஸ் நேரில் சென்றதை பார்த்த ரசிகர்கள் 20 வருடங்களாக படம் எதுவும் செய்யவில்லை என்றாலும் அஜித்தின் துக்கத்தில் நேரடியாக சென்று பங்கு எடுத்துக்கொண்டது நல்ல விஷயம் என முருகதாஸை பாராட்டிவருகிறார்கள் அஜித் ரசிகர்கள். அதுமட்டுமின்றி, விரைவில் அஜித்துடன் முருகதாஸ் இணைந்து மீண்டும் ஒரு ப்ளாக் பஸ்டர் படத்தை கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். இதற்கிடையே ஏகே 62 படத்தை இயக்கும் இயக்குநர்கள் லிஸ்ட்டில் ஏ.ஆர். முருகதாஸ் பெயரும் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











