அடுத்தடுத்து இரு படங்களில் இணையும் ஏஆர் முருகதாஸ்... முன்னணி ஹீரோக்களை இயக்கறாரு!
சென்னை : இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் நடித்து அந்தப் படங்கள் ஹிட்டடித்த நிலையில், அவர் அடுத்ததாக யாரை இயக்கவுள்ளார் என்பது குறித்து ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழில் அவர் அனிமேஷன் படத்தை இயக்கும் பணிகளில் முன்னதாக ஈடுபட்டிருந்தார்.

இயக்குநர் ஏஆர் முருகதாஸ்
ரஜினி, அஜித், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியவர் ஏஆர் முருகதாஸ். இவர் தற்போது அனிமேஷன் படத்தை இயக்கிவருவதாகவும் சோனி பிக்சர்சுடன் இணைந்து இந்த ப்ராஜக்ட்டை அவர் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அனிமேஷன் படத்தில் முருகதாஸ்
ஆனால் இந்தப் படத்தின் பணிகள் தாமதமாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே தயாரிப்பாளராகவும் செயல்பட்டுவரும் ஏஆர் முருகதாஸ், கௌதம் கார்த்திக்கை வைத்து புதிய படம் ஒன்றை தயாரிக்கவுள்ளதாகவும் அதை அவரது உதவி இயக்குநர் ஒருவர் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

தாமதமான அனிமேஷன் படம்
இந்நிலையில் ஏஆர் முருகதாஸ் இயக்கும் அனிமேஷன் படத்தின் வேலைகள் தாமதமாகி வருவதால் அவர் அடுத்ததாக முன்னணி ஹீரோக்களை வைத்து படமியக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக சியான் விக்ரமை வைத்து ஏஆர் முருகதாஸ் படமியக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அடுத்தடுத்த படங்களில் பிசியான விக்ரம்
சியான் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் மகான் ரிலீசான நிலையில் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம் ஆகிய படங்களின் சூட்டிங் நிறைவடைந்து ரிலீசாக உள்ளது. அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கத்திலும் கமலின் தயாரிப்பிலும் இவர் படங்களில் இணையவுள்ளார்.

முருகதாசுடன் இணையும் விக்ரம்
இந்நிலையில் ஏஆர் முருகதாசுடன் சியான் இணைவதும் அந்தப் படத்தை யார் தயாரிப்பார்கள் என்பது குறித்தும் கோலிவுட்டில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. விரைவில் இதற்கான விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் ஏஆர் முருகதாசுடன் விஜய் சேதுபதியும் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் சேதுபதியை இயக்கும் முருகதாஸ்
இதற்கான பேச்சுவார்த்தைகளும் ஒருபுறம் நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு படங்களும் தனித்தனி ப்ராஜக்ட்களாக நடைபெறவுள்ளதாகவும் இதற்கான ஸ்கிரிப்டை ஏஆர் முருகதாஸ் தயாராக வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜய் சேதுபதியின் கைவசமும் ஏராளமான படங்கள் உள்ள நிலையில், அவர் ஏஆர் முருகதாஸ் படத்தில் நடிப்பது குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

ரசிகர்களுக்கு சிறப்பான செய்தி
இந்த இரு படங்களும் அடுத்தடுத்து உருவாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், முதலில் எந்தப்படம் குறித்து அறிவிக்கப்படும் என்பதும் விரைவில் தெரியவரும். திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கிவரும் ஏஆர் முருகதாசின் இயக்கத்தில் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி இணையவுள்ளது கண்டிப்பாக ரசிகர்களுக்கு சிறப்பான செய்தியாகவே இருக்கும்.


Click it and Unblock the Notifications











