Director Bala :கைக்கொடுக்குமா வணங்கான்.. நம்பிக்கையுடன் காய் நகர்த்தும் பாலா!
சென்னை : இயக்குநர் பாலா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவான வணங்கான் படத்தின் சூட்டிங் தொடர்ந்து 35 நாட்கள் நடைபெற்ற நிலையில் நிறுத்தப்பட்டது.
இந்தப் படம் நிறுத்தப்பட்டதாக இயக்குநர் பாலா அறிவித்த நிலையில், படத்தை தயாரித்து நடித்த, சூர்யா படத்திலிருந்து விலகினார்.
தொடர்ந்து இந்தப் படத்தை தற்போது நடிகர் அருண் விஜய்யை வைத்து இயக்கி வருகிறார் பாலா. படத்தின் முதல்கட்ட சூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது.
பாலாவின் வணங்கான் : நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா இருவரும் நந்தா, பிதாமகன் உள்ளிட்ட படங்களில் இணைந்து சிறப்பாக செயல்பட்ட நிலையில், 18 ஆண்டுகள் கழித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வணங்கான் படத்தில் மீண்டும் இணைந்தனர். இந்தப் படத்தை தன்னுடைய 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்காக நடிகர் சூர்யாவே தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு கன்னியாகுமரியில் 35 நாட்கள் தொடர்ந்து சூட்டிங் நடத்தப்பட்டது.

இந்நிலையில் சில பல தவிர்க்க முடியாத காரணங்களால் வணங்கான் படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டது. சூர்யா மற்றும் பாலா இடையில் சூட்டிங்கின்போது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து இருவரும் எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், படத்தை கைவிட்டதாக பாலா அறிவித்திருந்தார். சந்தர்ப்பம் வாய்த்தால் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் சில வாரங்கள் கழித்து இந்தப் படத்தை மீண்டும் துவங்கவுள்ளதாகவும் அருண் விஜய் நாயகனாக நடிக்கவுள்ளதாகவும் அறிவித்த பாலா, படத்தின் சூட்டிங்கை உடனடியாக துவங்கி, அதேபோல 20 நாட்கள் சூட்டிங்கை எடுத்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் அருண் விஜய்யின் மிரட்டலான கெட்டப்பும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. பாலாவின் சொந்த தயாரிப்பாக படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் இரண்டாவது ஷெட்யூல் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் அடுத்தடுத்த ஷெட்யூல் திருவண்ணாமலை, கன்னியாகுமரி, பாண்டிச்சேரி, விழுப்புரம் போன்ற இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான பாலாவின் சில படங்கள் கைக்கொடுக்காத நிலையில், வணங்கான் படம் அவருக்கு சிறப்பான வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலாவும் அந்த நம்பிக்கையில்தான் படத்தின் சூட்டிங்கை விரைவுப் படுத்தியுள்ளார்.
இதனிடையே இந்தப் படத்தின் 5 பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபகாலங்களாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய வைரமுத்துவிற்கு, இந்தப் படம் மீண்டும் ஒரு கம்பேக்காக அமையும் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்தப் படம் குறித்து கவிஞர் வைரமுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இயக்குநர் பாலா, தேடிவந்து திகைக்குமொரு கதையை சொன்னதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தோற்காத ஆயுதங்களை தன்னுடைய பட்டறையிலிருந்து வடித்துக் கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











