Actor Vikram: நான் சொல்லாமலேயே என்னுடைய தேவைகளை புரிந்து கொண்ட விக்ரம்.. பாலா ஓபன்!
சென்னை: நடிகர் விக்ரம் துவக்கத்தில் சாக்லேட் பாய் கேரக்டர்களில்தான் நடித்து வந்தார். அவரது முழுத்திறமையையும் வெளிப்படுத்த அவை போதுமானதாக இல்லை. இருந்தபோதிலும், தனக்கான சந்தர்ப்பம் வரும் என்று காத்திருந்தார். அவர் எதிர்பார்த்த அந்த சந்தர்ப்பமும் வந்தது. அதை கொண்டுவந்தவர் இயக்குநர் பாலா. தன்னை போலவே சாதிக்க துடிப்பவரை தன்னுடைய படத்தில் இணைக்க வேண்டும் என்று பாலா நினைத்ததன் விளைவே இந்தக் கூட்டணி.
பாலா எதிர்பார்த்ததை காட்டிலும் மிகவும் அதிகமாகவே மெனக்கெட்டார் விக்ரம். கும்பகோணம் நகர வீதிகளில் இந்தப் படம் எடுக்கப்பட்ட சூழலில் படத்தின் கதைக்களம் பார்த்தவர்கள் அனைவரையும் மிரட்டியது. கண்கலங்க வைத்தது. இந்தப் படத்தின் ஒரிஜினல் ஃபீலை தன்னுடைய நடிப்பால் பார்வையாளர்களுக்கு கடத்தினார் விக்ரம். பாலாவிற்கு மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் உண்மையான ஹீரோ இந்தப் படத்தின் மூலம் கிடைத்துவிட்டார்.

நடிகர் விக்ரம்: நடிகர், தயாரிப்பாளர், பாடகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என சினிமாவில் பன்முகம் காட்டுவது என்பது அதனை நேசிக்கும் கலைஞர்களால் மட்டுமே சாத்தியம். இதை சாத்தியப்படுத்தியவர் நடிகர் விக்ரம். சின்னத்திரையிலேயே இவரது அறிமுகம் அமைந்தது. கலாட்டா குடும்பம் என்ற தொடரில் நடித்திருந்த விக்ரம் இதன்மூலம் என் காதல் கண்மணி படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதையடுத்து தொடர்ந்து சாக்லேட் பாய் கேரக்டர்களில் நடித்து வந்தார். இதனிடையே பாலாவின் அறிமுகம் கிடைத்து சேது படத்தில் கமிட்டானார். இந்த இடைப்பட்ட காலங்களில் டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் பணிபுரிந்துள்ளார்.
சேது படம்: மிகுந்த போராட்டங்களுக்கு பின்பே இயக்குநர் பாலா சேது படத்தை இயக்க கமிட்டானார். தன்னைப் போலவே இதுதான் வாழ்க்கை என்று தேடிய விக்ரமை சேது படத்தில் தன்னுடன் இணைத்துக் கொண்டார் பாலா. இந்தக் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக மாறியது. அடுத்தடுத்து பிதாமகன் உள்ளிட்ட படங்களிலும் மாஸ் காட்டியது. வருவேண்டா ஒருநாள் என்ற வெறியும் வேகமும் தாகமும் சேது சமயத்தில் விக்ரமிடம் மிக அதிகமாக இருந்ததாக பாலா தன்னுடைய இவன்தான் பாலா புத்தகத்தில் விக்ரம் குறித்து தெரிவித்துள்ளார். தன்னை யாருமே நம்பாதபோது தன்னை தந்தவன் விக்ரம் என்று பாலா மேலும் கூறியுள்ளார்.
தேவைகளை புரிந்த விக்ரம்: சேது படத்தின் சூட்டிங் தாமதமான நிலையில், அனைவரும் நிலைகுலைந்திருந்தபோது, டெலிஃபிலிமில் நடித்து அதன்மூலம் கிடைத்த பணத்தை பாலாவிற்கும் சமமாக கொடுத்து அழகு பார்த்தவர் விக்ரம் என்றும் பாலா உச்சி முகர்ந்துள்ளார். தன்னையும் தன்னுடைய தேவைகளையும் தான் சொல்லாமலேயே புரிந்து கொண்ட ஆத்மா விக்ரம் என்றும் பாலா பாராட்டியுள்ளார். படத்தில் கல்லூரி காலக்கட்டத்தை சொல்லும் கதைக்களத்தில் சிறப்பாக நடித்து முடித்துவிட்டு, தொடர்ந்து அடுத்தக்கட்டத்திற்கு கதை நகர வேண்டும். இந்த சமயத்தில்தான் 20 கிலோ எடையை விக்ரம் குறைக்க வேண்டும்.
தொடர் பட்டினி: ஒரு மாதம் சூட்டிங்கிற்கு ஓய்வளித்தபோது இதை சாத்தியப்படுத்தினார் விக்ரம். அவர் உணவுக்கட்டுப்பாடு உள்ளிட்டவற்றை மேற்கொண்டு உடல் இளைத்த நிலையில், கஷ்டமாக இருக்கிறதாக என்று பாலா கேட்க, தன்னுடைய துன்பத்தை மறைத்துக் கொண்டு இல்லை என்று புன்னகையை பரிசளித்துள்ளார் விக்ரம். இதை தன்னுடைய புத்தகத்தில் புல்லரிப்புடன் வெளிப்படுத்தியுள்ளார் பாலா. ஏர்வாடி தர்கா காட்சிக்காக தொடர்ந்து பட்டினியாக இருந்த விக்ரம், யாராவது சென்று உலுக்கினால் மட்டுமே சுயநினைவிற்கு வருவார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த அளவிற்கு தன்னுடைய கேரக்டருக்காக மெனக்கெடும் தைரியம் சினிமாவில் ஒரு சிலருக்கே சாத்தியம். அதில் விக்ரம் முக்கியமானவர்.


Click it and Unblock the Notifications











