மாரி செல்வராஜுக்கு முத்தம் கொடுத்த பாலா.. ‘வாழை’ படத்தை பார்த்து கண் கலங்கிட்டாரு மனுஷன்!
சென்னை: வாழை படத்தை பார்த்த இயக்குநர் பாலா அந்த படத்தை இயக்கிய இயக்குநர் மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த காட்சிகள் வெளியாகியுள்ளன. அதன் வீடியோ காட்சியை வெளியிட்டு பாலாவுக்கு நன்றி கூறியுள்ளார் மாரி செல்வராஜ்.
சிறு வயதிலிருந்து பல கஷ்டங்களை அனுபவித்து வந்த மாரி செல்வராஜ் சினிமாவில் எப்படியாவது இயக்குநராக மாறி தனது வலிகளை மக்கள் உணரும் படங்களாக கொடுக்க வேண்டும் என்கிற முயற்சியில் இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக இணைந்தார்.

பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த நிலையில், தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கி வசூல் ரீதியாக வெற்றிப் படமாக கொடுத்த மாரி செல்வராஜ் கடந்த ஆண்டு உதயநிதி ஸ்டாலின், வடிவேலு மற்றும் பகத் பாஸில் நடிப்பில் வெளியான மாமன்னன் படத்தையும் இயக்கி இருந்தார்.
விமர்சனங்களும் வெற்றியும்: சாதிய ரீதியிலான படங்களை மாரி செல்வராஜ் இயக்கி வருவதாக அவர் மீது விமர்சனங்கள் குவிந்தாலும் அதை எல்லாம் தாண்டி தனது தரமான படைப்புகள் மூலமாக வெற்றிகளை பெற்று வருகிறார் மாரி செல்வராஜ். ஆகஸ்ட் 22 ஆம் தேதியான நாளை வெளியாக உள்ள வாழை திரைப்படம் தனது பயோபிக் என்று வெளிப்படையாக கூறியே ரிலீஸ் செய்கிறார். இந்த படத்தையும் தனது சொந்த பெயரிலேயே தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திலீப் சுப்புராயன் மாஸ்டர், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனங்கள் இந்த படம் உருவாக துணையாக நின்றுள்ளன.
பாராட்டும் பிரபலங்கள்: வாழை படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக இயக்குநர்களுக்கும் சினிமா பிரபலங்களுக்கும் நடிகர்களுக்கும் போட்டு காண்பித்து வருகிறார் மாரி செல்வராஜ். மணிரத்னம், மிஷ்கின், சிவகார்த்திகேயன், பா. ரஞ்சித், ராம், நெல்சன் உள்ளிட்ட பல பிரபலங்கள் பாராட்டி வந்த நிலையில், தற்போது இயக்குநர் பாலாவுக்கு இந்த படத்தை போட்டுக் காட்டியுள்ளார் மாரி செல்வராஜ்.
முத்தம் கொடுத்த பாலா: மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை படத்தை பிரத்யேக காட்சியில் பார்த்த இயக்குநர் பாலா அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பார்த்து கலங்கிப் போய்விட்டார். இத்தனை சோகங்களை உள்ளே வைத்துக்கொண்டு தான் படங்களை எடுக்கிறாயா என கண் கலங்கியபடியே மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். அந்த காட்சியை தற்போது மாரிசெல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இயக்குநர் பாலாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நாளை ரிலீஸ்: கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல், பொன்வேல் மற்றும் ராகுல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள வாழை திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த வாரம் ரசிகர்கள் திரையரங்குகளில் கொட்டுக்காளி படத்தை கொண்டாடுகிறார்களா? அல்லது வாழை படத்தை கொண்டாடுகிறார்களா என்பதை காத்திருந்து காணலாம். இரண்டு படங்களும் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் படங்களாக இருக்கும் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
வணங்கான் வருது: சேது படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திய இயக்குநர் பாலா வாழை படத்தை பார்த்து பாராட்டிய நிலையில், அடுத்ததாக அருண் விஜய்யை வைத்து அவர் இயக்கியுள்ள வணங்கான் படமும் விரைவில் வெளியாக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











