Bala: எல்லா ரசிகர்களுக்கும் அகம்பாவம் இருக்கு.. ஓபனாக சொன்ன இயக்குநர் பாலா!
சென்னை: இயக்குநர் பாலு மகேந்திராவின் பட்டறையில் இருந்து ட்யூன் ஆகி வந்தவர்களில் இயக்குநர் பாலா மிகப்பெரிய அளவில் தன்னை சினிமாவில் சிறந்த இயக்குநராக நிலைநிறுத்தியுள்ளார். சினிமாதான் தன்னுடைய வாழ்க்கை என்று தீர்மானித்தபோது, பாலு மகேந்திராவிடம்தான் அசிஸ்டெண்டாக சேர வேண்டும் என்று 3 ஆண்டுகள் போராடியதாக பாலா கூறியுள்ளார்.
தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படம் உருவாகியுள்ளது. முன்னதாக இந்தப் படத்தில் நடிகர் சூர்யா இணைந்திருந்த நிலையில், சூட்டிங்கின்போது ஏற்பட்ட சில மனக்கசப்புகள் காரணமாக அவர் விலகினார். இதையடுத்து தற்போது இந்தப் படத்தில் அருண் விஜய் இணைந்துள்ளார். படம் பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளது.

இயக்குநர் பாலா: இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்களில் மிகவும் முக்கியமானவராக பார்க்கப்படுபவர் இயக்குநர் பாலா. இவரது பல படங்கள் வித்தியாசமான மற்றும் அழுத்தமான கதைக்களங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை பரிதவிக்க செய்துள்ளன. தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படம் உருவாகியுள்ளது. படம் பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், படத்திற்கான அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இயக்குநர் பாலாவும் அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகிறார்.
பாலா இன்டர்வியூ: அந்த வகையில் தன்னுடைய கேரியர், சொந்த வாழ்க்கை குறித்தெல்லாம் பேசி வருகிறார் பாலா. சினிமாவிற்கு வரும்போது நாய் படாத பாடு படப்போகிறோம் என்று நினைத்ததாகவும் இதுகுறித்து தன்னுடைய நண்பர் ஒருவரிடம் பேசியபோது, நீ நாய் படாத பாடு படமாட்டாய், சொறி நாய் படாத பாடு படுவாய் என்று கூறியதாகவும் பாலா பகிர்ந்துள்ளார். ஆனால் தன்னுடைய சினிமா வாழ்க்கை அதைவிட மோசமாக அமைந்ததாகவும் பாலா குறிப்பிட்டுள்ளார். பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு கொடுத்துள்ள அவரது இந்த பேட்டியில் மேலும் பல சுவாரஸ்யங்களை போல்டான கருத்துக்களை பேசியுள்ளார்.
பழத்தை ஊட்டிவிடக்கூடாது: பாலு மகேந்திராவிடம் தான் கற்றுக் கொண்ட விஷயத்தையும் பாலா பேசியுள்ளார். ஒருவர் பசிப்பதாக கூறினால் அவருக்கு வாழைப்பழம் கொடுக்கலாம் என்றும் அவரால் உரிக்க முடியாத நிலையில் உரித்தும் கொடுக்கலாம் என்றும் கூறியுள்ள பாலா, ஆனால் வாழைப்பழத்தை ஏன் ஊட்டி விடுகிறாய் என்று பாலு மகேந்திரா கூறுவார் என்று தெரிவித்துள்ளார். இந்த மனநிலையில் இயக்குநர்கள் செயல்படக் கூடாது என்றும் படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு அறிவு இருப்பதாகவும் கூறியுள்ளார். இயக்குநர்கள் 10 -15 படங்கள் மட்டுமே கொடுப்பதாகவும் ஆனால் ரசிகர்கள் நூற்றுக்கணக்கான படங்களை பார்ப்பதாகவும் இயக்குநர்களை காட்டிலும் ரசிகர்களுக்குத்தான் அறிவு அதிகம் என்றும் தெரிவித்துள்ளார்.
ரசிகர்களின் அகம்பாவம்: படத்தில் எந்தெந்த இடங்களில் குறைகள் உள்ளன என்பதை படம் பார்க்கும் ரசிகர்கள் எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள் என்றும் பாலா குறிப்பிட்டுள்ளார். ரசிகர்களை அவ்வளவு எளிதாக ஏமாற்றிவிட முடியாது என்றும் தெரிவித்துள்ள பாலா, அவர்களுக்கு குச்சி வைத்து பாடம் எடுக்கவும் முடியாது என்றும் கூறியுள்ளார். படம் எடுப்பது மட்டுமே இயக்குநர்கள் வேலை என்றும் அதை நாங்கள் புரிந்துக் கொள்கிறோம் என்ற அகம்பாவம் அனைத்து ரசிகர்களுக்கும் உண்டு என்றும் பாலா மேலும் தெரிவித்துள்ளார். இந்த அகம்பாவம் நல்லதும்கூட என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











