விஷால் உடல்நிலை இப்படி ஆனதற்கு நான் காரணமா?.. டாக்டர் சர்ட்டிஃபிகேட் வேணுமா?.. பாலா பளார்
சென்னை: சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் மதகஜராஜா திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு பின் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கிறது. ஒரு கமர்ஷியல் படத்திற்கான அத்தனை இலக்கணங்களோடும் படம் பந்தயம் அடித்திருக்கிறது. இதன் காரணமாக படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறது. இதற்கிடையே அந்தப் படத்தின் ரிலீஸுக்கு முன்னதாக நடந்த ப்ரோமோஷனில் விஷால் உடல்நிலை சரியில்லாததோடு கலந்துகொண்டார். சூழல் இப்படி இருக்க அவர் அப்படி ஆனதற்கு பாலாவும் ஒரு காரணம் என்று பலரும் பேசினார்கள்.
விஷால் நடிப்பில் உருவான மதகஜராஜா படம் 12 வருடங்களுக்கு பிறகு வெளியாகி ஹிட்டடித்திருக்கிறது. ஒரு படமும், திரைக்கதையும் சரியாக இருந்தால் அது எத்தனை வருடங்கள் கழித்து வந்தாலும் ஹிட்டாகும் என்ற நம்பிக்கையை இந்தப் படம் கொடுத்திருக்கிறது. இதனால் பல வருடங்கள் ரிலீஸாகாமல் இருக்கும் படங்களை உருவாக்கியவர்களுக்கெல்லாம் தைரியம் வந்திருக்கிறது. இயக்குநர் கௌதம் மேனனேகூட சமீபத்திய பேட்டி ஒன்றில் மதகஜராஜா ஹிட்டாகிவிட்டது அதனால் துருவ நட்சத்திரம் மீதும் நம்பிக்கை இருக்கிறது என்று கூறியிருந்தார்.

படத்தில் என்ன ஸ்பெஷல்?: படத்தின் கதையை பொறுத்தவரை பெரிதாக எதுவும் இல்லைதான். ஆனால் ஸ்க்ரீன் ப்ளேவில் சுந்தர்.சி வென்றுவிட்டார். ஆக்ஷன், காமெடி, கிளாமர், செண்ட்டிமெண்ட் என ஒரு கமர்ஷியல் படத்தில் எதெது எவ்வளவு மீட்டரில் இருக்க வேண்டுமோ அப்படியே கொடுத்திருந்தார். சந்தானத்தின் காமெடி, மனோபாலாவை வைத்து டயலாக்கே இல்லாமல் காமெடி சீனை நகர்த்தி சென்றது படத்தின் வெற்றிக்கு பல விஷயங்கள் துணையாய் இருந்தன என ரசிகர்கள் ஓபனாகவே மகிழ்ச்சியோடு கூறினார்கள்.
விஷாலின் உடல்நிலை: இந்தப் படத்தின் ரிலீஸுக்கு சில நாட்கள் முன்பாக ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடந்தது. அதில் விஷாலும் கலந்துகொண்டார். ஆனால் அப்போது விஷாலை பார்த்த பலரும் ஷாக்கில் உறைந்து போனார்கள். உடல் தளர்ந்தபடி, கைகள் நடுங்கியபடி அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவருக்கு கடுமையான காய்ச்சல் அதன் காரணமாகத்தான் இப்படி இருக்கிறார் என்று தொகுப்பாளினி டிடி கூறினாலும்; அதனை நம்புவதற்கு ஒருதரப்பினர் தயாராக இல்லை. அவர்கள் இஷ்டத்துக்கு விஷாலின் உடல்நிலை பற்றி கிளப்பிவிட்டார்கள்.
பாலாதான் காரணமா?: இதற்கிடையே விஷாலின் உடல்நிலை இவ்வளவு மோசமானதற்கு இயக்குநர் பாலாதான் முதன்மை காரணம் என்ற பேச்சும் எழுந்தது. அதாவது அவன் இவன் படத்தில் மாறு கண் வைத்து விஷாலை நடிக்க வைத்ததால் அவருக்கு கடுமையான வலி ஏற்பட்டது. அதனை போக்குவதற்கு மதுவை அதிக அளவு எடுத்துக்கொண்டார். அதன் காரணமாகத்தான் அவரது உடல்நிலை இவ்வளவு மோசமாகிவிட்டதாக பேசினார்கள். ஆனால் விஷாலோ இப்போது நார்மலாகிவிட்டார். அவர் கொடுக்கும் பேட்டிகளிலும், செய்தியாளர் சந்திப்பிலும் தனது உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியவர்களை வைத்து செய்துவருகிறார்.
பாலாவின் பதிலடி: இந்நிலையில் பாலா இயக்கத்தில் வெளியான வணங்கான் படமும் நல்ல வரவேற்பையே பெற்றது. அதனையொட்டி படத்தின் சக்சஸ் மீட் இன்று சென்னையில் நடந்தது. இதில் கலந்துகொண்ட பாலாவிடம் விஷாலின் உடல்நிலை இப்படி ஆனதற்கு நீங்கள்தான் காரணம் என்று சொல்கிறார்களே என்று கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "விஷாலின் உடல்நிலை இப்படி ஆக நான் காரணமா?.. டாக்டர் சர்ட்டிஃபிக்கேட்தான் வாங்கி தர முடியும். யாரோ சொல்லியிருக்கிறார் அவன் இவன் படத்தில் விஷாலுடைய கண்களை நான் தைத்துவிட்டேன் என்று. எப்படி ஒருவரின் கண்களை தைக்க முடியும்" என்று தனது பாணியில் பதிலடி கொடுத்தார்.


Click it and Unblock the Notifications











