Vanangaan: பாலாவின் வணங்கான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.. சும்மா மிரட்டுதே!
சென்னை: இயக்குநர் பாலா -நடிகர் அருண் விஜய் கூட்டணியில் உருவாகி வரும் படம் வணங்கான். நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்து வருகிறார்.
முன்னதாக இந்தப் படத்தில் நடிகர் சூர்யா இணைந்திருந்த நிலையில், அவர் இடையிலேயே படத்திலிருந்து விலகினார்.
இதையடுத்து படத்தில் நடிகர் அருண் விஜய் இணைந்துள்ளார். படத்தின் விறுவிறுப்பான சூட்டிங் நடைபெற்று வருகிறது.

பாலா -அருண் விஜய் காம்பினேஷனில் உருவாகிவரும் வணங்கான் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்: இயக்குநர் பாலா டைரக்ஷனில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா இணைந்திருந்த படம் வணங்கான். இந்தப் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. சூர்யா தயாரிப்பில் இந்தப் படத்தின் சூட்டிங் கன்னியாகுமரியில் தொடர்ந்து 35 நாட்கள் நடைபெற்ற நிலையில், இந்தப் படத்திலிருந்து சூர்யா விலகினார். இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட பாலா, தொடர்ந்து அருண் விஜய்யை வைத்து இந்தப் படத்தின் சூட்டிங்கை துவங்கினார்.
வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் பி ஸ்டூடியோஸ் தயாரித்துவரும் இந்தப் படத்தின் சூட்டிங் மீண்டும் கன்னியாகுமரி, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டது. படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்து வருகிறார். இவர்களுடன் இயக்குநர் மிஷ்கினும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்றைய தினம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். முன்னதாக சூர்யாவின் பர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், தற்போது அருண் விஜய்யின் பர்ஸ்ட் லுக்கும் வெளியாகியுள்ளது. படத்தில் மீனவராக அருண் விஜய் நடித்துள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள போஸ்டர் மிகவும் மிரட்டலாக அமைந்துள்ளது. இந்தப் போஸ்டரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அருண் விஜய், மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதில் உடல் முழுவதும் சேறுடன் காணப்படுகிறார் அருண் விஜய். ஆத்திகம், நாத்திகம் இரண்டையும் அவர் பற்றிக் கொண்டிருப்பதாக இந்த போஸ்டரில் காணப்படுகிறது. இதை குறிப்பிடும் வகையில் ஒரு கையில் பெரியாரையும் மறுகையில் பிள்ளையாரையும் அவர் கைப்பற்றிக் கொண்டு, ஆக்ரோஷமாக காணப்படுகிறார். இந்தப் போஸ்டரின் மூலம் பாலா எதை சொல்ல வருகிறார் என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
எப்போதும் அழுத்தமான கதைக்களத்தில் இயல்பாக நடிகர்களை உலவவிட்டு, அதன்மூலம் வெற்றிப் படைப்புகளை கொடுத்து வருபவர் பாலா. அந்த வகையில் அவரது சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி, அவன் இவன், தாரை தப்பட்டை, நாச்சியார் போன்ற படங்கள் ரசிகர்களின் அதிகமான கவனத்தை பெற்றவை. இதில் பிதாமகன் படம் மூலம் விக்ரமிற்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்துள்ளார் பாலா. இதனிடையே நீண்ட இடைவெளிக்குப் பிறகு உருவாகிவரும் அவரது வணங்கான் படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











