ரசிகர்களிடம் விஜய்யின் அதிகப்படியான மாஸ்.. காரணத்தை கூறிய மறைந்த இயக்குநர் பாலு மகேந்திரா!
சென்னை : நடிகர் விஜய் தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இவரது பிறந்தநாள் இன்னும் சில தினங்களில் வரவுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் இந்த பிறந்தநாளை திருவிழாவாக கொண்டாடக் காத்திருக்கின்றனர்.
விஜய் பிறந்தநாளையொட்டி காமன், டிபி, மாஷ்அப் என களைகட்டி வருகிறது. இதை ரசிகர்கள் தற்போது செயல்படுத்தி வருகின்றனர்.

நடிகர் விஜய்
நடிகர் விஜய் பீஸ்ட் படத்திற்கு பிறகு தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் முதல் இரண்டு கட்ட சூட்டிங்குகள் சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில் தற்போது அடுத்தக்கட்ட சூட்டிங் மீண்டும் சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னையில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு சூட்டிங் நடந்து வருகிறது.

பொங்கல் ரிலீஸ்
படத்தின் சூட்டிங்கில் விஜய், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். இந்த படத்தின் சூட்டிங் இன்னும் சில மாதங்களில் முடியவுள்ள நிலையில், படம் பொங்கலையொட்டி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் இன்னும் வெளியிடப்படவில்லை. வரும் 22ம் தேதி விஜய் பிறந்தநாளையொட்டி படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தளபதி 67 படம்
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், அடுத்ததாக லோகேஷ் கனகராஜூடன் தளபதி 67 படத்திற்காக இணையவுள்ளார். இதுகுறித்த அறிவிப்பும் விஜய் பிறந்தநாளிலேயே வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நெல்சன் இயக்கத்தில் வெளியான இவரது பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூல் சாதனை புரிந்தது.

சிறப்பான ரசிகர்கள்
விஜய்யை இளைய தளபதியிலிருந்து தளபதியாக அவரது ரசிகர்கள் உயர்த்தியுள்ளனர். மேலும் அவரை தங்களது தலைவனாகவும் பார்த்து வருகின்றனர். இதனால்தான் பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் சிறப்பான வசூலை பெற்றது. அவரை திரையில் பார்ப்பதே தங்களுக்கு சந்தோஷம் என்ற வகையில் இந்தப் படத்தை வெற்றிப்படமாக்கினர்.

வெறித்தனமான ரசிகர்கள்
அந்த அளவிற்கு விஜய்க்கு அதிகப்படியான வெறித்தனமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். அவரது பிறந்தநாளுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் காமன் டிபி, மாஷ்அப் என அடுத்தடுத்த சிறப்பான விஷயங்களை வெளியிட்டு அதகளப்படுத்தி வருகின்றனர். இந்த மாஸான ரசிகர்கள் வட்டம் அவரும் இன்று நேற்று வந்ததில்லை. படிப்படியாக அவர் இந்த ரசிகர்களை பெற்றுள்ளார்.

மாஸ் ஹீரோவாக மாறிய தருணம்
நாளைய தீர்ப்பு படத்தில் இவரது அறிமுகம் நிகழ்ந்தபோது, அவருடைய எண்ணெய் வழியும் முகத்தை பார்த்து கேலியாக பேசியவர்களே அதிகம். படிப்படியாக நடிப்பு உள்ளிட்ட பல விஷயங்களில் தன்னை உயர்த்திக் கொண்டார் விஜய். பூவே உனக்காக உள்ளிட்ட படங்கள் இவரது சிறப்பான நடிப்பை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து மாஸ் ஹீரோவாக மாறினார் விஜய்.

சீனு ராமசாமி நினைவலை
அதன் பிறகு அவரது வெற்றிக்கு அவரை விட அவரது ரசிகர்கள் அதிகமான காரணமாக மாறினர். இந்நிலையில் தற்போது இயக்குநர் சீனு ராமசாமி விஜய் குறித்த ஒரு பகிர்வை தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார். பூவே உனக்காக உள்ளிட்ட படங்கள் வெளியான நேரத்தில் விஜய் வீட்டின் முன்பு ஏராளமான ரசிகர்கள் இருந்ததாகவும் அந்த வழியாக தானும் தன்னுடைய குருவும் பிரபல இயக்குநருமான மறைந்த பாலு மகேந்திராவும் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாலு மகேந்திரா சொன்ன விஷயம்
அப்போது விஜய் வீட்டின் வழியாக சென்றதாகவும், அந்த ரசிகர்கள் கூட்டத்தையும் வீட்டின் முன்பு இருந்த விஜய்யின் புகைப்படத்தையும் பார்த்த பாலு மகேந்திரா ரசிகர்களிடம் விஜய்க்கு ஏன் இவ்வளவு கிரேஸ் இருக்கிறது தெரியுமா என்று கேட்டதாகவும் அவரது படங்கள் வெற்றி
பெற்றதே காரணம் என்று தான் கூறியதாகவும் சீனு ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.

பூனை குடும்பத்து முகவமைப்பு
ஆனால் அதை மறுத்த பாலு மகேந்திரா, விஜய்யின் முக அமைப்பு பூனை குடும்பத்தை சேர்ந்தது என்றும் அதில் புலி, சிறுத்தை போன்றவை வரும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த முக அமைப்பு தான் மற்றவர்களை வசீகரிக்கும் தன்மையை விஜய்க்கு கொடுத்துவருவதாகவும் பாலு மகேந்திரா கூறியதாக தற்போது சீனு ராமசாமி கூறியுள்ளார். இவரது மாமனிதன் படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதையொட்டிய பேட்டியில்தான் இந்த சுவாரஸ்ய தகவலை அவர் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











