ஆளும் பொறுப்பு தேடிவர அப்பாவின் ஆசி கனிந்துள்ளது இயக்குநர் பாக்யராஜ் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து
சென்னை: தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள முக ஸ்டாலினுக்கு இயக்குநர் பாக்யராஜ் கைப்பட வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று தமிழக முதல்வராக பதவியேற்றார்.
பதவியேற்ற கையோடு முக்கிய அறிவிப்புகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் என வேகம் காட்டி வருகிறார் ஸ்டாலின். முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினுக்கு சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பணிவன்பான வணக்கம்
அந்த வகையில் இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் தனது கைப்பட கடிதம் எழுதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் எழுதியிருப்பதாவது, மரியாதைக்குரிய தமிழக முதல்வர் உயர்திரு முக ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் தங்களுடன் பொறுப்பேற்கும் அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் பணிவன்பான வணக்கத்துடனும் வாழ்த்துகளுடனும் உங்கள் பாக்யராஜ் எழுதுவது.

அப்பாவின் ஆசி கனிந்துள்ளது
பொறுத்தார் பூமி ஆள்வார். ஆளும் பொறுப்பு தங்களை தேடிவர அப்பாவின் ஆசி கனிந்துள்ளது. அதைவி தங்களது தன்னம்பிக்கையும், தளராத உழைப்புமே மிகமிக உன்னதமென என் மனம் நெகிழ்கிறது. தேர்தல் முடிவு வந்ததும் சந்தித்து வாழ்த்த நினைத்தேன்.

கொரோனா தொற்று உறுதி
ஆனால் எனக்கிருந்த நோயின் அறிகுறி, சளித்தொல்லை காரணமாக தங்களை அசௌகர்யப்படுத்த விரும்பாது தவிர்த்தேன். இப்போது அதிகாரப்பூர்வமாக தொற்று உறுதியானதால் கால தாமதமின்றி கடிதம் மூலமாகவாவது வாழ்த்துகிறேன்.

அப்பாவின் எழுத்தாணியுடன்
தமிழ் சமுதாயத்தை சீரமைக்கும் சிறப்பான சேவைப் பணியாற்றிய அப்பாவின் எழுத்தாணியுடன் அன்பு மகனான தாங்கள் அனைத்து தமிழக தாய்மார்களின் சுமை குறைத்து கொரோனா நோயாளிகளின் துயர் துடைக்கும் பொருட்டும் நிறைவான பால் வார்த்து விட்டீர்கள் குறைவான விலையில்.

அய்யாவின் அருள் உடனிருக்கும்
நெகிழ்வாக இருந்தது. காவல்துறை நண்பர்கள் குறித்தும் கருணையுடன் பரிசீலித்திருக்கிறீர்கள். மகிழ்வு. எனது குடும்பத்தார், பாக்யா குடும்பத்தினர் மற்றும் எழுத்தாளர்கள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களின் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகிறேன். நிறைவான ஆட்சி அரங்கேறி, நாடு நலம் பெற அய்யாவின் அருள் உடனிருக்கும் என வாழ்த்துகிறேன் என எழுதியுள்ளார்.


Click it and Unblock the Notifications











