இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் உயிரிழப்பு.. திரையுலகில் உச்சக்கட்ட அதிர்ச்சி
சென்னை: தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றிவைத்தவர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கிய பல படங்கள் கல்ட் க்ளாசிக்காக இருப்பவை. அவர் அறிமுகப்படுத்திய பல ஹீரோயின்கள் இன்று இந்திய அளவில் பிரபலமாக இருக்கிறார்கள். அந்தவகையில் தனது மகன் மனோஜையும் ஹீரோவாக திரைத்துறையில் அறிமுகப்படுத்தினார். ஆனால் அவரால் தந்தை போல் ஜொலிக்க முடியவில்லை. இந்தச் சூழலில் அவர் இன்று தனது 48ஆவது வயதில் உயிரிழந்தார்.
இயக்குநர் இமயம் என்று புகழப்படுபவர் பாரதிராஜா. 16 வயதினிலே படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் தொடர்ந்து ஹிட் படங்களை இயக்கினார். அவரது உதவி இயக்குநர்கள்தான் பாக்யராஜ், மணிவண்ணன், மனோபலா உள்ளிட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இயக்கிய பல திரைப்படங்கள் இன்றளவும் கல்ட் க்ளாசிக்காக கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. மேலும் அவர் அறிமுகப்படுத்திய ஹீரோயின்களின் எண்ணிக்கையும் அதிகம். அவர்கள் இந்திய அளவில் பெருமை பெற்றிருக்கிறார்கள்.
பாரதிராஜாவின் மகன்: சூழல் இப்படி இருக்க அவர் தனது மகன் மனோஜை திரைத்துறையில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். பாரதிராஜாவே இயக்கிய தாஜ் மஹால் திரைப்படத்தில் மனோஜ் கதாநாயகனாக வர; ரசிகர்கள் பெரிதாக ஈர்க்கப்படவில்லை. காதல் கதை என்றாலும் அது பாரதிராஜாவின் மேக்கிங்கிலிருந்து தூரமாகவே நின்றது என பல விமர்சனங்கள். இருந்தாலும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளியான பாடல்கள் அனைத்து பெரிய ஹிட்டடித்ததால் படத்துக்கு அடையாளம் கிடைத்தது.

அடுத்தடுத்த படங்கள்: தாஜ் மஹால் திரைப்படத்துக்கு பிறகு மனோஜ் வருஷமெல்லாம் வசந்தம், சமுத்திரம், அல்லி அர்ஜுனா உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் அந்தப் படங்கள் எல்லாம் அவருக்கு பெரிய திருப்புமுனையை எதுவும் தரவில்லை. இதன் காரணமாக மெல்ல மெல்ல அவர் சினிமாவிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். பிறகு மாநாடு, கொம்பன் உள்ளிட்ட படங்களில் குணசித்திர வேடத்தில் தோன்றிக்கொண்டிருந்தார். மேலும் படம் ஒன்றை அவர் இயக்கவிருந்ததாகவும் ஒரு தகவல் ஓடியது குறிப்பிடத்தக்கது.
மனோஜ் மரணம்: இந்நிலையில் அவர் இன்று தனது 48ஆவது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். சில நாட்களுக்கு முன்பு அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. அதன் பிறகு சில நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர்; தொடர்ந்து வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்றுவந்திருக்கிறார். ஆனால் அவர் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உயிரிழப்பு பாரதிராஜா மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் அதிர்ச்சியையும், சோகத்தையும் கொடுத்திருக்கிறது.
முன்னதாக மனோஜ் ஹீரோவாக அறிமுகமாவதற்கு முன்பு இயக்குநர்கள் மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். அதுமட்டுமின்றி இவரது பெயரில் பாரதிராஜா 'மனோஜ் கிரியேஷன்ஸ்’ என தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மனோஜுக்கு ஆர்த்திகா, மதிவதினி என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர் சாதுர்யன் என்ற படத்தில் நடித்தபோது அவருக்கு ஜோடியாக நந்தனா என்பவருடன் காதலில் விழுந்தார். அதர்கு பிறகு அவரையே திருமணம் செய்துகொண்டார்.
மனோஜின் உயிரிழப்புக்கு பலரும் தங்களது இரங்கலையும், பாரதிராஜாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் அனுதாபத்தையும் தெரிவித்துவருகிறார்கள். அதேபோல் திரைத்துறையை சேர்ந்த பலரும் நேரில் வந்தவண்ணம் இருக்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்தினரும் பாரதிராஜா மீது மரியாதையும், அன்பும் வைத்திருப்பதால் பலரும் அவரது சோகத்தில் பங்கெடுக்க இருக்கிறார்கள். கண்டிப்பாக பாரதிராஜா இந்த இழப்பு கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











