'இயலும்,இசையும், இணைந்தது'... பல வருடங்களுக்கு பின் மீண்டும் இணைந்த பாரதிராஜா, இளையராஜா!
பாரதிராஜா மற்றும் இளையராஜா இடையேயான பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. தற்போது இருவரும் சந்தித்து பேசிவிட்டனர்.
சென்னை: பல ஆண்டுகள் கழித்து பாரதிராஜாவும், இளையராஜாவும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
ஒருகாலத்தில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்த முடிசூடா மன்னர்கள் அந்த இரண்டு ராஜாக்கள். இளையராஜாவும், பாரதிராஜாவும் அமர்ந்திருந்த சிம்மாசனத்தை யாராலும் மறந்திருக்க முடியாது.

சிறு வயதில் இருந்தே நண்பர்களாய் பழகி வந்த அவர்கள் இருவரும் சினிமாவிலும் சேர்ந்தே ஜொலித்தார்கள். 'செந்தூரப்பூவே செந்தூரப்பூவே... நீதானா அந்த குயில்'.. என காலத்தால் அழியாத பல பொக்கிஷங்களை உருவாக்கினார்கள்.
திடீரென ஒருநாள் இருவருக்கு இடையே விரிசல் ஏற்பட்டது. பல ஆண்டுகால பால்ய நட்பு உடைந்தது. இருவரும் பல ஆண்டுகள் பேசிக்கொள்ளாமல் இருந்தனர்.
இந்த நிலையில் தான் இளையராஜாவுக்கு திடீரென ஒரு பிரச்சினை வந்ததும், ஓடோடி வந்து உதவிக்கு நின்றார் பாரதிராஜா. எல்.வி.பிரசாத் லேபில் இருந்து இளையராஜாவை வெளியேற்ற முயற்சிகள் நடந்தன. துடித்துப்போன பாரதிராஜா இளையராஜாவுக்கு ஆதரவாக முன்நின்றார்.

இதன் மூலம் இருவருக்கும் இடையே பல ஆண்டுகளாக இருந்து வந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. தற்போது இருவரும் நேரில் சந்தித்து பேசிவிட்டனர். அந்த புகைப்படங்களை பாரதிராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 'இயலும்,இசையும், இணைந்தது.. இதயம் என் இதயத்தை தொட்டது என் தேனியில்' என பாரதிராஜா இந்த சந்திப்பை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
காரில் அமர்ந்தபடி அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்கள், இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சந்திப்பால் இரண்டு ராஜாக்களின் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனந்த கண்ணீருடன் இந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











