என்ன வன்மமான சிரிப்பு.. படைப்பாளிகளையும் அவமதிப்பதா? பாரதிராஜா கண்டனம்!
சென்னை: பருத்தி வீரன் விவகாரம் பூதாகரமாகி வரும் நிலையில், இயக்குநர் பாரதிராஜா, ஞானவேல் ராஜாவை வன்மையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கார்த்தி, இயக்குநர் அமீர், ப்ரியாமணி ஆகியோருக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்த திரைப்படம் பருத்தி வீரன்.

இப்படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய கார்த்தி, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
அமீர் பேட்டி: நடிகர் கார்த்தி நடிப்பில் அண்மையில் வெளியான ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு தன்னை கூப்பிடவில்லை என அமீர் வேதனையை வெளிப்படுத்தி இருந்தார். மேலும், பருத்தி வீரன் படத்தால் தனக்கு 2 கோடிக்கும் மேல் கடன் உள்ளது. சிவகுமார் குடும்பத்தினருடன் தனக்கு இருந்த நட்பை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கெடுத்துவிட்டார் என்றார்.
அவ்ளோ சீன்லாம் இல்லை: அமீரின் இந்த பேச்சு கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதேநேரம் அமீரின் இந்த குற்றச்சாட்டை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மறுத்து பேட்டி கொடுத்திருந்தார். அதில், அமீருக்கு அவ்ளோ சீன்லாம் இல்லை, அவர் தான் என்னை ஏமாற்றிவிட்டார் என்று கூறியிருந்தார். ஞானவேல் ராஜாவின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பாரதிராஜா கண்டனம்: இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஞானவேல் அவர்களே, உங்களுடைய காணொளியை பார்க்க நேரிட்டது. பருத்தி வீரன் திரைப்படம் சார்ந்து உங்களுக்குள் இருப்பது பொருளாதர பிரச்சனை சார்ந்தது மட்டுமே. ஆனால், நீங்கள் தந்த பேட்டியில் மிகச்சிறந்த படைப்பாளியின் புகழுக்கும், பெயருக்கும், படைப்பிற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கதக்கதாகும்.
என்ன வன்மமான சிரிப்பு: உங்களை திரைத்துறையில் அடையாளப்படுத்தி, மிகப்பெரும் தயாரிப்பாளராக உருவாக்கியதில் அமீரின் பங்களிப்பு மிகப்பெரியது என்பதை மறந்துவிட வேண்டாம். பருத்தி வீரன் திரைப்படத்திற்கு முன்பு அமீர் இரண்டு படம் இயக்கி, அதில் ஒன்றைத் தயாரித்தும் இருக்கிறார். அவர் உங்கள் படத்தில் தான் வேலை கற்றுக் கொண்டார் என்பதை எக்காளமாக கூறி வன்மமாக சிரிப்பது என் போன்ற படைப்பாளிகளையும் அவமதிக்கும் செயலாகும்.
படைப்பாளி கற்றுக்கொண்டே இருப்பான்: ஏனென்றால் உண்மையான படைப்பாளிகள் சாகும் வரை கற்றுக்கொண்டேதான் இருப்பார்கள். நான் இப்போதும் கற்றுக்கொண்டு தான் இருக்கிறேன். மிகச் சிறந்த படைப்பாளியின் படைப்புகளையும், அவர் நேர்மையையும் இழிவுபடுத்தியதற்காக வருத்தம் தெரிவித்து, பிரச்சனையை சுமூகமாக பேசி தீர்ப்பதே சரியாக இருக்கும் என நம்புகிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











