சுரேஷ் காமாட்சி.. அசத்திட்டே..! - இயக்குநர் இமயத்தின் பாராட்டு இது
வசிஷ்டர் வாயால் வாழ்த்துப் பெற்றதற்கு இணையான மகிழ்ச்சியில் இருக்கிறார் தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி.
அவர் இயக்கியுள்ள மிக மிக அவசரம் படத்தின் ட்ரைலரை சமீபத்தில் பார்த்துள்ளார் இயக்குநர் இமயம் பாரதிராஜா. பார்த்ததுமே அவருக்கு மிகப் பிடித்துவிட்டதாம். அதை விட, 'சுரேஷ் காமாட்சி.... அற்புதம். இதை உங்கிட்டருந்து நான் எதிர்ப்பார்க்கவே இல்ல. நல்லா பண்ணியிருக்க," என்று பாராட்டியுள்ளார்.

இதைப் பார்த்ததுமே, படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட சம்மதித்துள்ளார். மோஷன் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வில், உடனிருந்த இயக்குநர் ஈ ராமதாஸ் மற்றும் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே எனும் ஜே சதீஷ்குமாரிடம் பாரதிராஜா மிக இயல்பாக இப்படிக் கூறினார்:

"என்னால நம்பவே முடியலய்யா... இப்படி தயாரிப்பாளர்களெல்லாம் டைரக்ட் பண்ண ஆரம்பிச்சிட்டா, நாங்கள்லாம் என்ன ஆகிறது.. அதுவும் ரிட்டயர் ஆகிற ஸ்டேஜ்ல இருக்கிற என்ன மாதிரி ஆளுங்க அவ்வளவுதான்...," என்றார்.
பாரதிராஜாவின் பாராட்டை ஒன்றுக்கு இருமுறைப் பெற்றுள்ள சுரேஷ் காமாட்சி கூறுகையில், "தமிழ் சினிமாவின் பிதாமகன் இயக்குநர் இமயம் பாரதிராஜா. அவரிடமிருந்து தன்னெழுச்சியாக வந்து விழுந்த வார்த்தைகள் அவை. அவரது பாராட்டுகள் மூலம் நான் சினிமாவுக்கு வந்ததன் பலனை அனுபவித்துவிட்டேன். அவரது இந்த நல் வார்த்தைகளுக்கு பங்கம் வராத அளவுக்கு தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் என் படைப்புகள் அமையும்...," என்றார். ஸ்ரீப்ரியங்கா நாயகியாக நடித்துள்ள மிக மிக அவசரம் படம் ஜூன் மாத வெளியீடாக வரவிருக்கிறது.


Click it and Unblock the Notifications











