Bharathi Raja : நான் செத்தா நீ தான் காரணம்.. நடிகையால் டென்ஷனான பாரதிராஜா!
சென்னை : இயக்குநர் பாரதிராஜா நடிகையால் டென்ஷனாகி நான் செத்தா நீ தான் காரணம் என்று திட்டிய சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
16 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா முதல் படத்திலேயே சிறந்த இயக்குநர் என்று பெயர் எடுத்தார்.
அதன்பின், சிகப்பு ரோஜாக்கள், கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை, மண் வாசனை, முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா என பல முத்தான படங்களை கொடுத்துள்ளார்.

இயக்குநர் பாரதிராஜா தமிழ் சினிமா ஸ்டூடியோவுக்குள் முடங்கி கிடந்த காலத்தில் காடு, மேடு, குளம்,மலை என தமிழ் ரசிகர்களுக்கு சினிமா மூலம் இயற்கை அழகை காட்டி மகிழ்வித்த பெருமைக்கு சொந்தக்காரர் பாரதிராஜா. இவர் ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, ராம என ஏராளமான நடிகைகளை சினிமா உலகிற்கு கொடுத்து இருக்கிறார். இதில் பலரும் தமிழ் சினிமாவின் எவர் கிரீன் நாயகியாக இருக்கிறார்கள்.
திருச்சிற்றம்பலம் படத்தில் : பல நல்ல படங்களை இயக்கிய பாரதிராஜா தற்போது, இயக்கத்தில் இருந்து ஓய்வு பெற்று நடிகராக முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த ஆண்டு தனுஷூடன் இணைந்து திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் தனுஷின் தாத்தாவாக பழம் என்ற கேரக்டரில் நடித்து பெயர் எடுத்தார்.

அலப்பறை செய்த குஷ்பு : பாரதிராஜாவின் இயக்கத்தில் நடிகை குஷ்பு கேப்டன் மகள் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த சம்பவத்தை நடிகை குஷ்பு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், கேப்டன் மகள் படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டு இருந்தது. அப்போது, அந்த இடத்தில் வேறு ஒரு படத்தின் ஷூட்டிங்கும் நடந்து கொண்டு இருந்ததால், படப்பிடிப்புக்காக பல் பிடுங்கப்பட்ட பாம்பை கொண்டு வந்திருந்தார்கள்.

நான் செத்தா நீ தான் காரணம் : நான் அந்த பாம்பை கையில் எடுத்துக்கொண்டு பாரதிராஜா சாரிடம் சென்று, சார் இங்கே பாருங்க என்றேன். பாம்பை பார்த்ததும் பாரதிராஜா சார் மிரண்டு அங்கும் இங்கும் ஓடினார். இதையடுத்து அங்கிருந்த படக்குழுவினர் என்னை தடுத்து நிறுத்தினார்கள். அவருக்கு கை,கால் எல்லாம் நடுங்கி ரொம்ப டென்ஷானாகிவிட்டார். உடனே எனக்கு ஹார்ட் அட்டாக் வந்து நான் செத்தா, அதற்கு நீ தான் காரணம் என்று அனைவர் முன்னும் திட்டியதாக குஷ்பு அண்மையில் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். இதைக் கேட்ட ரசிகர்கள் உங்கள் அலப்பறைக்கு அளவே இல்லையா என கேட்டுவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











