Bharathiraja and Ilayaraaja - புல்லாங்குழல் வாங்கவே காசு இருக்காது.. இளையராஜா என்ன செய்வார் தெரியுமா?
சென்னை: BharathiRaja Ilayaraaja (பாரதிராஜா, இளையராஜா) இளையராஜாவின் இளமை காலம் குறித்து இயக்குநர் பாரதிராஜா அளித்திருக்கும் பேட்டி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
இளையராஜா இந்திய இசையின் அடையாளமாக திகழ்ந்துகொண்டிருக்கிறார். பண்ணப்புரத்திலிருந்து கிளம்பிவந்து கோலிவுட்டுக்கென்று இருந்த இசையின் முகத்தை வெகு இயல்பாக மாற்றியவர். ஏகப்பட்ட தேசிய விருதுகளை வென்றிருக்கும் இளையராஜா இதுவரை 1500 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இளம் இசையமைப்பாளர்களுக்கு போட்டி போட்டுக்கொண்டு தரமான இசையை வழங்கிக்கொண்டிருக்கிறார்.

விடுதலை இளையராஜா: அவரது இசையமைப்பில் கடைசியாக விடுதலை படம் வெளியானது. அதில் அவரது இசை பெரும்பாலானோரால் கொண்டாடப்பட்டது. அதேசமயம் காவல் துறை அராஜகம் செய்யும் இடத்தில் தேவையில்லாமல் மாஸ் பிஜிஎம்மை இளையராஜா வைத்திருக்கிறார் என்றும், பின்னணி இசையில் சில இடங்களில் சொதப்பியிருக்கிறார் என்று சிலர் தங்களது விமர்சனத்தையும் முன்வைத்தனர்.
சர்ச்சைகளின் ராஜா: இளையராஜாவின் இசை எந்த அளவு கொண்டாடப்படுகிறதோ அதே அளவு சர்ச்சையிலும் அவர் சிக்கிக்கொள்பவர். ஒரு கச்சேரியில் என் இசையால்தானே நீங்கள் உயிர் வாழ்கிறீர்கள் என்றது, உனக்கு அறிவு இருப்பதை எந்த அறிவு கொண்டு சொல்கிறாய் என பத்திரிகையாளரிடம் கேட்டது, மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டது, பிறகு அவருக்கு ராஜ்ய சபா எம்.பி பதவி வழங்கப்பட்டது என அந்த பட்டியல் நீளம்.
இரங்கலில்கூடவா இளையராஜா தற்பெருமை: அதேபோல் சமீபத்தில் இயக்குநரும், நடிகருமான மனோபால உயிரிழந்தார். அவருக்கு இரங்கல் தெரிவித்த இளையராஜா, 'கோடம்பாக்கம் ப்ரிட்ஸில் என்னை பார்ப்பதற்கு நின்றுகொண்டிருந்த எத்தனையோ இயக்குநர்களில் மனோபாலாவும் ஒருவர்' என கூறியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் ஒருவருக்கு தெரிவிக்கும் இரங்கலை இப்பட் தற்பெருமை தொனியில் இளையராஜா தெரிவித்திருக்கக்கூடாது என பலர் காட்டமாக விமர்சித்தனர்.
இளையராஜா குறித்து இயக்குநர் பாரதிராஜா: இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா இளையராஜாவின் இளமை காலம் குறித்து அளித்திருக்கும் பேட்டி ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் அவர், "இளையராஜா இல்லாமல் நானில்லை. என்னையும் அவன் அப்படித்தான் நினைப்பான். அவன்கூட 8 வருடங்கள் பேசாமல் இருந்திருக்கிறேன்.அப்போதும் அவனை நினைக்காமல் தூங்கவில்லை.

இளையராஜாவின் இளமை காலம்: அவனுக்காகவே சிந்திச்சு காட்சிகளை உருவாக்கி இசைக்கு இடம் கொடுத்திருக்கேன். 'உன்னோட படம் உண்டாக்கின உணர்வுதான் என்னை நல்ல இசையமைக்க தூண்டுதுனு' அவனும் என்னிடம் சொல்லிருக்கான்.சின்ன வயதில் புல்லாங்குழல் வாங்க அவனிடம் காசு இருககது. ஆத்துக்கு சென்று நாணல் தட்டையை எடுத்து வந்து நெருப்பில் வாட்டி அதில் ஓட்டை போட்டு வாசிப்பான்.
கமல், ரஜினிக்கெல்லாம் நீ வாசித்திருக்கலாம். எனக்கு வாசித்ததுதான் முதல் வாசிப்பு என்று சொல்வேன். வெள்ளையா சிரிப்பான்.அந்த சமயத்தில் கங்கை அமரனுக்கு பத்து வயது. அப்போவே அவன் பாடல் எழுதுவான். அதெல்லாம் நான் கண்டு உணர்ந்த அழகு. இங்கே யாருக்காவது கிடைச்சிருக்குமா?" என்றார். இந்தப் பேட்டி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











