Bhavatharini death: தேனியில் வைக்கப்பட்ட பவதாரிணி உடல்.. கதறி அழுத இயக்குநர் பாரதிராஜா!
சென்னை: பிரபல பின்னணி பாடகி மற்றும் இசையமைப்பாளர் பவதாரிணி உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் இலங்கையில் உயிரிழந்தார். இவரது உடல் நேற்றைய தினம் விமானம்மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், சொந்த ஊருக்கான தேனிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அஞ்சலிக்காக பவதாரிணியின் உடல் வைக்கப்பட்ட நிலையில் முன்னதாக தேனியில் இருந்த இயக்குநர் பாரதிராஜா, காத்திருந்து பவதாரிணி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பவதாரிணி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
ராசய்யா படத்தின்மூலம் தன்னுடைய அப்பா இசைஞானி இளையராஜாவின் இசையில் பின்னணி பாடகியாக அறிமுகமான பவதாரிணி தொடர்ந்து பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். தொடர்ந்து ஏறக்குறைய 30 ஆண்டுகளாக திரையுலகில் இவரது பயணம் தொடர்ந்து வருகிறது. ரேவதி இயக்கத்தில் வெளியான மித்ர மை பிரெண்ட் படம் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமான பவதாரணி 10 படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான மாநாடு படத்திலும் இவர் பாடல் பாடியுள்ளார். தற்போது 3 படங்களில் இசையமைப்பாளராக கமிட்டாகி பணியாற்றி வந்தார்.

இளையராஜா மகள் பவதாரிணி: இசைஞானி இளையராஜாவின் மகள் என்ற பேக்கிரவுண்ட் இருந்தபோதிலும் தன்னுடைய தனிப்பட்ட குரலால் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து சிறப்பான பின்னணி பாடகியாக வலம்வந்தவர் பவதாரிணி. தன்னுடைய அப்பாவின் ராசய்யா படத்தின் மஸ்தானா பாடலின்மூலம்தான் இவர் பின்னணி பாடகியாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து அடுத்த ஆண்டிலேயே பாரதி படத்தில் பவதாரிணி பாடிய மயில் போலே என்ற பாடலுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து தன்னுடைய அப்பா, சகோதரர்கள் கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா போன்றவர்களின் இசையில் பாடல்களை பாடியுள்ள பவதாரிணி, தேவா, சிற்பி போன்றவர்களின் இசையிலும் ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
புற்றுநோய் பாதிப்பு: கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பவதாரிணிக்கு, கீமோ தெரபியை தாங்கும்வகையில் உடல்நிலை இல்லாததால் இலங்கையில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக திநகரில் இளையராஜா வீட்டில் வைக்கப்பட்டது. தொடர்ந்து பவதாரிணி உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பாரதிராஜா கண்ணீர் அஞ்சலி: இதையடுத்து சொந்த ஊரான தேனிக்கு பவதாரிணியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து செல்லப்பட்டது. முன்னதாக தேனியில் இருந்து இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பாரதிராஜா தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்திருந்தார். தன்னுடைய நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன் என்று தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருந்தார். மகள் பவதாரிணியின் மறைவு தங்களது குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் தேனியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பவதாரிணியின் உடலுக்கு பாரதிராஜா நேரில் அஞ்சலி செலுத்தினார்.
கதறி அழுத பாரதிராஜா: அப்போது பவதாரிணியின் உடலை பார்த்து அவர் கதறி அழுதார். இதன் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிய நிலையில் ரசிகர்களின் நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது.இன்றைய தினம் தேனி மாவட்டத்தில் பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. லோயர்கேம்ப் பகுதியில் உள்ள இளையராஜாவின் தோட்ட வளாகத்தில் அவரது தாய் மற்றும் பாட்டியின் சமாதிகள் அருகிலேயே பவதாரிணியின் உடலும் அடக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











