என்ன பாடி லாங்வேஜ்டா.. கர்ணனில் உன் உழைப்பு பாராட்டுக்குரியது.. நட்டியை புகழ்ந்து தள்ளிய பாரதிராஜா!
சென்னை: கர்ணன் படத்தில் வில்லன் கண்ணபிரானாக நடித்து மிரட்டிய நட்டி நடராஜை இயக்குநர் பாரதிராஜா பாராட்டி உள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன், லால் மற்றும் நட்டி நடராஜ் நடிப்பில் கடந்த மாதம் ஏப்ரல் 9ம் தேதி வெளியான படம் கர்ணன்.
கர்ணன் படம் வெளியாகி வெற்றிநடை போட்ட நிலையில், அந்த படத்தில் நடித்த ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நடராஜை பாரதிராஜா பாராட்டியதாக நட்டி போட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

கர்ணன்
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி வெற்றிப் பெற்றது. கலவையான விமர்சனங்கள் எழுந்த நிலையிலும், படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தனுஷுக்கு கர்ணன் திரைப்படம் இன்னும் நிறைய விருதுகளை பெற்றுத் தரும் என்றும் கூறப்படுகிறது.

கண்ணபிரான்
கர்ணன் படத்தில் போலீஸ் அதிகாரியாக இடைவேளைக்குப் பிறகு வரும் நடிகரும் பிரபல ஒளிப்பதிவாளருமான நட்டி நடராஜின் மிரட்டலான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை அள்ளியது. உடல் முழுவதும் வெறி ஏறி போன ஒரு போலீஸ் அதிகாரியாக அப்படியே தத்ரூபமாக கண்ணபிரான் கதாபாத்திரத்தில் நடிகர் நட்டி நடராஜ் நடித்திருந்தார்.

பாரதிராஜா பாராட்டு
இந்நிலையில், தற்போது கர்ணன் திரைப்படத்தை சமீபத்தில் பார்த்த இயக்குநர் பாரதிராஜா தனக்கு நேற்று இரவு போன் செய்து வாழ்த்தினார் என்றும், இரவு தூக்கம் வருமா என்றே தெரியவில்லை என நட்டி போட்ட ட்வீட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. திறமையான கலைஞர்களை பாராட்டுவதில் பாரதிராஜா ஒருபோதும் தயக்கம் காட்டியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன பாடி லாங்வேஜ்
"இன்று இரவு உறக்கம் வருமா என்று தெரியவில்லை..சில நிமிடங்கள் முன்னால் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் தொலைபேசி அழைப்பு.. என்ன பாடி லாங்வேஜ்டா.. அசத்திட்டடா..you are multi talented ரா..கர்ணனில் உன் உழைப்பு பாராட்டுக்குறியது" என பாரதிராஜா பாராட்டியதாக நட்டி நடராஜ் ட்வீட் போட்டு அவருக்கு நன்றி ஆசானே என நன்றியும் தெரிவித்துள்ளார்.

மாரி செல்வராஜுக்கு நன்றி
மேலும், மற்றொரு ட்வீட்டில், "அனைத்து பெருமைகளும் மாரி செல்வராஜ் அவர்களுக்குரியது.. நன்றி கலைப்புலி தாணு சார்.. நன்றி தனுஷ் சார்.. சக நடிகர்கள்.. சக தொழில் நுட்ப வல்லுனர்கள்" என இயக்குநர் முதல் படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நடராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.

ஒடிடியில் எப்போ
கொரோனா பரவல் காரணமாக கர்ணன் படம் வெளியான அடுத்த நாளே 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே தியேட்டர்கள் இயங்கின. மேலும், கொரோனா பரவல் தீவிரமடைந்த சூழலில் தியேட்டர்கள் முற்றிலுமாக கடந்த ஆண்டை போலவே மூடப்பட்டுள்ளன. இதனால், கர்ணன் வசூல் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமேசான் பிரைமில் வரும் மே 9ம் தேதி கர்ணன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











