Vijayakanth: கட்அவுட் முன்பு புகைப்படம்.. விஜயகாந்த் புகைப்படத்தை பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன்‘
சென்னை: நடிகர் விஜயகாந்தின் மறைவு அனைத்து தரப்பினரையும் வருத்தத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு ரசிகர்கள், தொண்டர்கள் மட்டுமில்லாமல் திரையுல பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் தொடர்ந்து நேரிலும் சமூக வலைதளங்கள் மூலமும் வருத்தத்தை பகிர்ந்து வருகின்றனர். வசதியான குடும்பத்தில் பிறந்தபோதிலும் சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்த விஜயகாந்த், நீண்ட போராட்டத்திற்கு பிறகு படங்களில் நடிக்க வாய்ப்பு பெற்று, அதை சிறப்பாக பயன்படுத்தி முன்னேறியவர்.
கருப்பு எம்ஜிஆர் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் விஜயகாந்த், புரட்சி கலைஞராகவும் உச்சி முகரப்பட்டார். தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மட்டுமில்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ரசிகர்களை பிரச்சினைகளில் உழன்று போக விடாமல் கட்டிக் காத்தவர் என்ற பெருமையை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டவர். அரசியல் வாழ்க்கையிலும் தேமுதிக என்ற கட்சியை துவங்கி, சிறப்பாக செயல்படுத்திய விஜயகாந்த், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதனால் சினிமா, அரசியல் வாழ்க்கையில் இருந்து ஒதுங்கி ஓய்வெடுத்து வந்தார்.

நடிகர் விஜயகாந்த்: ரஜினிகாந்த், கமல், சத்யராஜ் உள்ளிட்ட விஜயகாந்தின் சக நடிகர்கள் அனைவரும் தமிழில் மட்டுமில்லாமல் பல மொழிகளிலும் கவனம் செலுத்தி நடித்து வந்த நிலையில், தமிழில் மட்டுமே நடித்தவர் என்ற பெருமையை பெற்றவர் நடிகர் விஜயகாந்த். எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக மக்களால் அதிகமாக கொண்டாடப்பட்டவர் என்ற பெருமையை கொண்டவர். தனிப்பட்ட முறையில் பசியால் வாடிய அனைவருக்கும் தலைவாழை விருந்தளித்து உபசரித்தவர். தற்போது தன்னுடைய 71வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ள விஜயகாந்தின் மறைவு அனைத்து தரப்பினரையும் சோகத்திற்குள்ளாக்கியுள்ளது.
சிறப்பான வழிகாட்டி: வில்லனாக அறிமுகமான விஜயகாந்த், முன்னணி நடிகராக மாறி ஏராளமான ரசிகர்களை பெற்றவர். இவரது நடிப்பில் கேப்டன் விஜயகாந்த், ரமணா என அடுத்தடுத்த வித்தியாசமான ஜானர்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த படங்கள் ஏராளம். இவரது படங்கள் அனைத்துமே ஹிட் கொடுத்த நிலையில் ஒரு காலகட்டத்தில் 10 முதல் 18 படங்கள் வரை வருடத்திற்கு நடித்து சாதனை படைத்தவர் விஜயகாந்த். தன்னுடைய அலுவலகத்திற்கு வரும் அனைவருக்கும் வயிராற சாப்பாடு போட்டவர் விஜயகாந்த். அதனால் சினிமாவில் அவரை போலவே சாதிக்க நினைத்தவர்களுக்கு சிறப்பாக வழிக்காட்டியவர் விஜயகாந்த் என்ற பெருமை அவருக்குண்டு.
விஜயகாந்த் காலமானார்: கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த், கடந்த சில தினங்களாக உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்று அவர் காலமானார். சினிமாவில் அகல்விளக்கு என்ற படத்தில் வில்லனாக அறிமுகமான விஜயகாந்த் தொடர்ந்து பல படங்களில் அதிரடி காட்டினார். அவரது திரையுலக பயணங்களை தற்போது பலரும் நினைவுகூர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சினிமா விமர்சகரும் இயக்குநருமான ப்ளூ சட்டை மாறனும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஜயகாந்த் குறித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
விஜயகாந்த் புகைப்படங்கள்.. வீடியோக்கள்: விஜயகாந்தின் மறைவையொட்டி அவரது பல புகைப்படங்க்ள் வீடியோக்கள் ரசிகர்களை கவரும்வகையில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இயக்குநரும் சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் விஜயகாந்த் குறித்த பல பகிர்வுகளை தன்னுடைய ட்விட்டர் பக்க்ததில் பதிவிட்டு வருகிறார். தூரத்து இடி முழக்கம் என்ற படத்தில் விஜயகாந்த் நடித்துள்ள நிலையில், அந்தப் படத்திற்காக வைக்கப்பட்ட கட்அவுட் முன்னிலையில் அவர் அதே மாதிரியான மீசை, தலைமுடியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தூரத்து இடி முழக்கம் படம்: முன்னதாக அகல்விளக்கு, இனிக்கும் இளமை போன்ற படங்களில் நடித்திருந்தாலும் கடந்த 1981ம் ஆண்டில் வெளியான தூரத்து இடிமுழக்கம் படமே விஜயகாந்திற்கு சிறப்பாக அமைந்தது. இந்தப் படத்தில் பொன்னனாக நடித்த விஜயகாந்தின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அவரை மிகச்சிறந்த ஹீரோவாக்க அடித்தளம் அமைத்தது. தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான படங்களில் நடித்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் கமர்ஷியல் ஹீரோவாகவும் ரசிகர்களை கவர்ந்தார். அதிரடி ஆக்ஷன் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து மிகப்பெரிய ஹீரோவானார்.


Click it and Unblock the Notifications











