Blue Sattai Maran: சாப்பிடும் முன்பு சாமி கும்பிட்ட விஷால்.. வறுத்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: நடிகர் விஷால், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது மார்க் ஆண்டனி.
இந்தப் படம் சர்வதேச அளவில் 60 கோடி ரூபாய்களுக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.
இன்னும் வரும் நாட்களில் இந்த வசூல் எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் வெற்றி விழாவை படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.

மீண்டும் அரசியலில் இணைகிறாரா விஷால் என கேள்வி கேட்ட ப்ளூ சட்டை மாறன்: நடிகர் விஷால், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான மார்க் ஆண்டனி படம் மிகப்பெரிய அளவிலான ரீச்சை ரசிகர்களிடையே எட்டியுள்ளது. கடந்த சில தினங்களில் இந்தப் படத்தின் வசூல் 60 கோடி ரூபாயை எட்டிய நிலையில், தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தில் என்ட்ரி ஆகியுள்ளது.
இதையடுத்து படத்தின் வசூல் 100 கோடி ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய தினம் இந்தப் படத்தின் வெற்றி விழா நடைபெற்ற நிலையில், இதுகுறித்து நடிகர் விஷாலும் பேசியுள்ளார். மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க வேண்டாம் என்று தனக்கு பலரும் சூட்டிங்கிற்கு முன்னதாக அறிவுறுத்தியதாகவும் ஆனால் தான் கதையின் மீதும் இயக்குநர் மீதும் நம்பிக்கை வைத்து படத்தில் நடித்ததாகவும் அது பொய்யாகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து நிகழ்ச்சியில் உணவருந்திய நடிகர் விஷால் பல மதங்களை குறிப்பிடும் வகையில் சாமி கும்பிட்ட பின்பு சாப்பிடத் துவங்கினார். இந்த அவரது செயலை தற்போது சினிமா விமர்சகரும் இயக்குநருமான ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். விஷால் மீண்டும் அரசியலில் இணைய திட்டமிடுகிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். விஷாலின் இந்த செயல் ரசிகர்களிடையேயும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

இரும்புத்திரை படத்தை தொடர்ந்து விஷாலின் அடுத்தடுத்த 7 படங்கள் தொடர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்று, வசூலிலும் சொதப்பின. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான மார்க் ஆண்டனி விஷாலுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. டைம் டிராவலை மையமாக கொண்டு வெளியாகியுள்ள இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா அதிகமாக ஸ்கோர் செய்துள்ளார். இருவரும் இருவேறு கெட்டப்புகளில் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது
முன்னதாக ஆதிக் ரவிச்சந்திரன் படங்களை இயக்கியுள்ள போதிலும் இதுதான் அவருக்கு முதல் படம் மாதிரி என்றும் விஷால் படத்தின் சக்சஸ் மீட்டில் பேசியுள்ளார். இந்தப் படத்தின் துவக்கத்தில் ஆதிக்குடன் இணைய வேண்டாம் என்று கூறியவர்கள் எல்லாம் தற்போது அவரிடமே டேட்ஸ் கேட்க வாய்ப்புள்ளது, இதுதான் சினிமா என்றும் விஷால் தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் டீசரை வெளியிட்டு சிறப்பாக துவக்கி வைத்த விஜய்க்கும் அவர் நன்றி தெரிவிதுள்ளார்.


Click it and Unblock the Notifications











