Blue Sattai Maran: அந்த டீலிங் எனக்கு பிடிச்சிருந்தது.. அட்லீயை கலாய்த்து தள்ளிய ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: இயக்குநர் அட்லீயின் ஜவான் படம் சமீபத்தில் வெளியான நிலையில் படம் 1000 கோடி ரூபாய் வசூலை நோக்கி வெற்றி நடைபோட்டு வருகிறது.
இந்தப் படத்தின் மூலம் சர்வதேச அளவில் அங்கீகாரத்தை பெற்றுள்ளார் இயக்குநர் அட்லீ.
முன்னதாக விஜய்யின் அடுத்தடுத்த மூன்று படங்களை இயக்கி ஹாட்ரிக் வெற்றியை விஜய்க்கு பரிசளித்துள்ளார் அட்லீ.

அட்லீயின் ஹாலிவுட் சான்ஸ் குறித்த பேட்டியை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்: நடிகர் விஜய்யின் அடுத்தடுத்த படங்களை இயக்கி சர்வதேச அளவில் அங்கீகாரத்தை பெற்றவர் இயக்குநர் அட்லீ. ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, ஜெய், சந்தானம் என லீட் கேரக்டர்களை கொண்டு ராஜா ராணி படத்தின் மூலம் தன்னுடைய அறிமுக படத்திலேயே அதிரிபுதிரி வெற்றியை கொடுத்த அட்லீக்கு அடுத்தப்படமே விஜய்யுடன் அமைந்தது. விஜய்யின் தெறி, மெர்சல் மற்றும் பிகில் என அடுத்தடுத்த ஹாட்ரிக் வெற்றிப்படங்களை கொடுத்து அவரது ரசிகர்களுக்கு விருப்பமானவராக மாறியுள்ளார் அட்லீ.
கடந்த 4 ஆண்டுகளாக கொரோனா, ஷாருக்கானின் சொந்த பிரச்சினைகள் உள்ளிட்ட பல தடைகளை தாண்டி தற்போது ஜவான் படம் வெளியாகி மாஸ் காட்டியுள்ளது. படம் 1000 கோடி ரூபாய் வசூலை நோக்கி வெற்றிநடை போட்டு வருகிறது. இந்தப் படம் கடந்த 7ம் தேதி சர்வதேச அளவில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியான ஜவான் படத்தின்மூலம் பாலிவுட்டில் தன்னுடைய வெற்றிப் பயணத்தை துவங்கியுள்ளார் அட்லீ.
ஜவான் படத்தை தொடர்ந்து அட்லீ இந்திய அளவில் மோஸ்ட் வான்டட் இயக்குநராக மாறியுள்ளார். சமீபத்தில் அம்பானியின் வீட்டு நிகழ்ச்சியிலும் தன்னுடைய மனைவி பிரியாவுடன் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு அட்லீக்கு கிடைத்திருந்தது. இந்நிலையில் ஜவான் படத்தின் சக்சஸை தொடர்ந்து ஹாலிவுட்டிலும் தன்னை படமியக்க கேட்டுள்ளதாக அட்லீ கூறியுள்ளார். இதையடுத்து அவர் என்ன மாதிரியான முடிவை எடுப்பார் என்று தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அடுத்ததாக கரண் ஜோஹர் தயாரிப்பில் அட்லீ படமியக்க கமிட்டாகியுள்ளதாகவும் இதற்காக அவருக்கு 60 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இதனிடையே விஜய் அல்லது அல்லு அர்ஜூடன் அட்லீ இணைய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அட்லீயின் இந்தப் பேட்டியை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அவரை கலாய்த்துள்ளார் இயக்குநரும் சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன்.
தன்னுடைய படங்களில் மற்ற படங்களில் இருந்து காட்சிகளை சுட்டு வைப்பதாக எப்போதும் அட்லீ மீது விமர்சனங்கள் எழுந்து வரும்நிலையில், அதை குறிப்பிடும் வகையில், இங்க இருந்து எடுக்க வேணாம், இங்க வந்தே எடுங்கன்னு சொன்னாங்க, அந்த டீலிங் எனக்கு புடிச்சிருந்தது என்று ப்ளூ சட்டை மாறன் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவிற்கு ஏராளமான ரசிகர்கள் சிரிப்பு எமோஜியை கமெண்ட்டில் குறிப்பிட்டுள்ளனர். ஒரு சிலர் ப்ளூ சட்டை மாறன் இதேபோல செய்துக் கொண்டிருக்கட்டும் என்றும் ஆனால் அட்லீ எங்கேயோ போய்விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











