ரஜினிகாந்த் பாராட்டியதை வெளியில் சொல்லாமல் மறைத்தது ஏன்?...பிரபல இயக்குநர் சுவாரஸ்ய பதில்!
சென்னை : தமிழ் சினிமாவின் சிறப்பான இயக்குநர் என்ற பெயரை எடுத்துள்ளார் சீனு ராமசாமி. இவரது இயக்கத்தில் தற்போது மாமனிதன் படம் உருவாகியுள்ளது. இவர் தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட படங்களை இயக்கி சிறப்பான இயக்குநராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.

இயக்குநர் சீனு ராமசாமி
இயக்குநர் சீனு ராமசாமி தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட படங்களின் மூலம் சிறப்பான இயக்குநராக அறியப்படுகிறார். இந்தப் படத்தின் மூலம் பிரபல நடிகர் விஜய் சேதுபதிக்கு சிறப்பான நடிகர் என்ற அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். தொடர்ந்து அவருடன் படங்களில் இணைந்து வருகிறார்.

மாமனிதன் படம்
இவர்கள் கூட்டணியில் வெளியான தர்மதுரை படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது இடம்பொருள் ஏவல், மாமனிதன் ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படங்கள் விரைவில் வெளியாக உள்ளன. இதில மாமனிதன் படத்தை எழுதி இயக்கியுள்ளார் சீனு ராமசாமி.

யுவன் சங்கர் ராஜா தயாரிப்பு
விஜய் சேதுபதி லீட் கதாபாத்தரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் காயத்ரி நாயகியாக நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை அவரே தனது ஒய்எஸ்ஆர் புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் யுவன் மற்றும் அவரது தந்தை இளையராஜா இருவரும் இணைந்து முதல்முறையாக இசையமைத்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

4வது முறையாக இணைந்த கூட்டணி
விஜய் சேதுபதி, யுவன் மற்றும் சீனு ராமசாமி இந்தப் படத்தின் மூலம் நான்காவது முறையாக இணைந்துள்ளனர். ஏற்கனவே தென்மேற்கு பருவக்காற்று, இடம்பொருள் ஏவல், தர்மதுரை படங்களில் இந்தக் கூட்டணி இணைந்துள்ளது. படம் விரைவில் வெளியாக உள்ளது.

மாமனிதனை பாராட்டிய சூப்பர்ஸ்டார்
இந்நிலையில் படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்றை தற்போது சீனு ராமசாமி வெளியிட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதமே மாமனிதன் படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தொலைபேசியில் தன்னை தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். அதை அப்போதே ஏன் வெளிப்படுத்தவில்லை என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சூப்பர்ஸ்டாரின் ஆசி போதும்
அப்போதே அதை தெரிவித்திருந்தால் விற்பனைக்காக தான் அதை வெளிப்படுத்தியதாக ஆகிவிடும் என்பதால் அதை வெளியில் சொல்லவில்லை என்றும் சூப்பர்ஸ்டார் படம் பார்த்ததே ஆசிகள் என்றும் அதுபோதும் என்றும் தான் குறிப்பிட்டதாகவும் தற்போது தானாகவே படத்தின் விற்பனை முடிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் ரஜினிக்கு நன்றியும் கூறியுள்ளார்.

சிறப்பான சூப்பர்ஸ்டார் பாராட்டு
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து சிறப்பான படைப்புகளை பார்த்து அதுகுறித்து தொலைபேசி வாயிலாக பாராட்டு தெரிவிப்பதை வழக்கமாக கொண்டவர். அந்த வகையில் மாமனிதன் படத்தை பார்த்துவிட்டு அவர் பாராட்டியுள்ளது சிறப்பாக பார்க்கப்படுகிறது. படத்திற்கான எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications











