சேரன் காதலுக்கு கொடுத்த விளக்கம்.. நல்ல காதல், கள்ளக்காதல்னு எதுவும் இல்லையாம்.. இப்படி சொல்கிறாரே?
சென்னை: தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர் சேரன். அவர் இயக்கிய பல படங்கள் ரசிகர்களால் காலங்கடந்து கொண்டாடப்படுவை. கடந்த மாதம்கூட ஆட்டோகிராஃப் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டபோது; அப்போதும் கூட்டம் கூட்டமாக சென்று படத்தை பார்த்தார்கள் ரசிகர்கள். இந்நிலையில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் சேரன் பேசிய விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
கே.எஸ்.ரவிக்குமார், சந்தான பாரதி ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சேரன். அவர்களிடம் வேலைகளையும், வித்தைகளையும் கற்றுக்கொண்டு பாரதி கண்ணம்மா படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். பார்த்திபன் ஹீரோவாக நடித்திருந்த அப்படம் சூப்பர் டூப்பர் ஹிட். முதல் பட வெற்றியை தொடர்ந்து பெயர் பெற்ற சேரன்; இரண்டாவதாக இயக்கிய பொற்காலமும் ஹிட்டானது.
முன்னணி இயக்குநர்: வரிசையாக முதல் இரண்டு படங்களை ஹிட் கொடுத்ததை அடுத்து கோலிவுட்டில் முன்னணி இயக்குநர் வரிசையில் இணைந்தார். அதனையடுத்து அவர் இயக்கிய தேசிய கீதம், வெற்றிக்கொடிகட்டு, பாண்டவர் பூமி ஆகிய படங்களும் ஹிட்டடித்தன. அதுவும் வெற்றிக்கொடிகட்டு படம் தேசிய விருதையும் வென்றது. சேரனின் இயக்கத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என்று நடிகர்கள் ஆசைப்பட்ட காலம் எல்லாம் ஒன்று உண்டு.

ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து: சேரனின் கரியரிலேயே ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து ஆகிய இரண்டு படங்களும் முக்கியமானவரை. ஆட்டோகிராஃப் ஒரு மனிதனுக்குள் தோன்றும் காதல்களை எந்தவித அலங்காரமுமின்றி பேசியது. அதேபோல் தவமாய் தவமிருந்து படம் ஒரு தந்தையின் வலி, போராட்டத்தை படுநேர்த்தியாக பேசியிருந்தது. பலரை கலங்கடித்த திரைப்படம் தவமாய் தவமிருந்து. இந்த இரண்டு படங்களும் சேரனை உச்சத்தில் கொண்டு சென்று நிறுத்தியது.
நடிகராக சேரன்: இதற்கிடையே ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து படங்களில் மற்ற ஹீரோக்கள் நடிக்க மறுத்ததால் சேரனே ஹீரோவாகவும் நடித்தார். இப்போது இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர்; விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் செய்வதாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போய்விட்டது. இருந்தாலும் நடிப்பில் பிஸியாக இருக்கும் அவர்; தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.
சேரனின் பேச்சு: இந்நிலையில் சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டார் சேரன். அப்போது பேசிய அவர், "சமூகத்தில் ஒரு பெண்ணைத்தான் காதலிக்க வேண்டும் என்று இல்லை. நாம் எந்த ஒரு உயிரின் மேல் அன்பு வைத்தாலும் அது காதல்தான். காதலில் நல்ல காதல், கள்ளக்காதல் என்றெல்லாம் இல்லை. சமூகம் நம் மிது செலுத்தும் ஆதிக்கம்தான் கள்ளக்காதல். எனவே அனைவரும் வாழ்க்கையின் சுமைகளை விட்டு யாரை காதலிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ காதலித்துவிடுங்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











