ஆதாரமில்லாமல் நடிகை பெயரை சொல்லி அசிங்கப்படுத்தலாமா?.. சேலம் ஏ.வி. ராஜுவை விளாசிய சேரன்!
சென்னை: எந்த ஆதாரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு பரப்பலாமா என பிரபல நடிகை பற்றியும் நகைச்சுவை நடிகர் பற்றியும் பேசிய சேலம் மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜுவை இயக்குநர் சேரன் வன்மையாக கண்டித்துள்ளார்.
கூவத்தூரில் நடிகைகள் வந்ததாகவும் பிரபல காமெடி நடிகர் தான் நடிகைகளை அழைத்து வந்ததாகவும் ஏ.வி.ராஜு அளித்த பேட்டி பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது. சினிமா பிரபலங்கள் மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகள் இதனை கேட்டு விட்டு அமைதியாக செல்லக் கூடாது என சேரன் ட்வீட் போட்டிருக்கிறார்.

அதிமுகவில் இருந்து நீக்கம்: அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று அதிமுகவை சேர்ந்த வெங்கடாசலம் ஏமாற்றுகிறார் என பரபரப்பை கிளப்பிய நிலையில், ஏ.வி.ராஜுவை சேலம் மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இருந்தும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி எடப்பாடி பழனிசாமி போட்ட உத்தரவால் கடுப்பான ஏ.வி. ராஜு கூவத்தூரில் அதிமுகவினர் எப்படியெல்லாம் ஆட்டம் போட்டார்கள் தெரியுமா? என பரபரப்பாக அளித்த பேட்டி தற்போது பெரும் புயலை கிளப்பி உள்ளது.
நடிகர்களை பற்றி அவதூறு: பிரபல நடிகைகள் பற்றியும் காமெடி நடிகர் பற்றியும் வெளிப்படையாக பெயர்களை சொல்லியே கூவத்தூருக்கு வந்ததாக ஏ.வி. ராஜு பேசியது சினிமா பிரபலங்களை கோபத்தில் ஆழ்த்தி உள்ளது. பலரும் இந்த விவகாரத்தில் அமைதி காத்து வரும் நிலையில், முதல் ஆளாக இயக்குநர் சேரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
சேரன் கண்டனம்: வன்மையாக கண்டிக்கிறேன்.. எந்த ஆதாரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவரை சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று இயக்குநர் சேரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விஷால், கார்த்தி நடவடிக்கை எடுங்க: மேலும், நடிகர்கள் விஷால் மற்றும் கார்த்தி உள்ளிட்டோரை டேக் செய்து நடிகர் சங்கம் இதற்கு தகுந்த பதிலும் நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன் என இயக்குநர் சேரன் பதிவிட்டு இருக்கிறார். சினிமா பிரபலங்களை எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் இப்படி பொதுவெளியில் முன்னாள் எம்எல்ஏ பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சினிமா பிரபலங்கள் பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











