Cheran : முதலமைச்சர் ஐயா எனக்கு ஒரு சந்தேகம்.. இயக்குநர் சேரனின் கேள்வியைப் பாருங்க!
சென்னை: பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு சட்டமன்றத்திலேயே எதிர்க்கட்சியினர் பலரும் வாழ்த்தினர். இப்படி இருக்கையில், இயக்குநர் சேரன் தனது எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக தனது சந்தேகத்தை முன் வைத்துள்ளார்.
அதேபோல் தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை குறித்து, நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக், தனது எக்ஸ் பக்கத்தில், " 2016ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா 500 மதுக்கடைகளை மூடினார். இத்தோடு, 2 மணிநேரம் கடையின் நேரத்தைக் குறைத்தார்.

2017ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி, 500 மதுக்கடைகளை மூடினார். இத்தோடு, 169 பார்களையும் மூடினார். 2023ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஸ்டாலின் 500 மதுக்கடைகளை மூடினார். குறைந்த வருமானம் தந்த மற்றும் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்த இடங்களில் இருந்த கடைகளை மூடினார். இப்போது 2026ஆம் ஆண்டு முதல்வர் விஜய், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் அருகே இருந்த 717 மதுக்கடைகளை மூடுவதாக அறிவித்திருக்கிறார்.
டாஸ்மாக் வருமானம் கூடுதே: எல்லா முதல்வர்களும் தலா 500 மதுக்கடைகளை மூடுகிறார்கள். அதேசமயம், குறைந்திருக்க வேண்டிய Tasmac வருமானம் ஆண்டுக்கு 48,000 கோடியிலிருந்து 50,000 கோடியாக உயர்ந்து கொண்டிருக்கிறது. கடைகள் மூடப்படுகின்றன என்றால், வருமானம் குறையத்தானே வேண்டும்? மாறாக, எப்படி கூடுகிறது?" என்று பதிவிட்டுள்ளார்.
சேரன்: இவரது பதிவை குறிப்பிட்டு, "தம்பி .. என்னோட கேள்வி... ஒவ்வொருவரும் பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் அருகே இருக்கும் மூடுவதாக சொன்னார்கள்... ஆனல் அடுத்தடுத்த ஆட்சிகள் அதையே சொல்கிறார்கள்.. அப்படியானால் யாருமே மூடவில்லையா.. இல்லை குத்தகைக்கு எடுத்த எல்லா கடைகளுக்கும் பள்ளிக்கும் கோவில்களுக்கும் அருகில் தான் இருக்கிறதா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார். இயக்குநர் சேரன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications