Vijay - சிவாஜிக்கு பிறகு விஜய்யிடம்தான் அதை பார்த்தேன்.. ஆட்டோகிராஃப்பில் நடித்திருக்கலாம்.. சேரன் ஓபன் டாக்
சென்னை: Vijay (விஜய்) இயக்குநர் சேரன் விஜய்யிடம் ஆட்டோகிராஃப் கதை சொன்ன அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.
கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராக இருந்த சேரன் பொற்காலம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அடுத்ததாக அவர் இயக்கிய படங்கள் அனைத்துமே முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக இருந்தன. இதனால் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர் என்ற முத்திரை சேரன் மீது விழுந்தது.

க்ளாசிக் படங்கள்: சேரனின் படங்கள் என்றாலே அதில் கண்டிப்பாக ஒரு அழுத்தமான உணர்வு இருக்கும். அப்படித்தான அவர் இயக்கிய வெற்றிக்கொடிக்கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து இருக்கும். அதனாலேயே அவரது படங்கள் காலங்கடந்து மின்னும் க்ளாசிக் படங்களாக இருக்கின்றன.
நடிகர்: ஒருகட்டத்தில் இயக்குவதை நிறுத்திக்கொண்ட அவர் தற்போது படங்களில் நடித்துவருகிறார். கடைசியாக அவரது இயக்கத்தில் தமிழ்க்குடிமகன் படம் வெளியாகி டீசண்ட்டான வரவேற்பையே பெற்றது. இருந்தாலும் சேரன் மீண்டும் படம் இயக்க வேண்டும் என்றும் ரசிகர்களில் ஒருதரப்பினர் கூற ஆரம்பித்திருக்கின்றனர்.
விஜய்யிடம் ஆட்டோகிராஃப் கதை: இதற்கிடையே ஆட்டோகிராஃப் படத்தின் கதையை விஜய்யிடம்தான் முதலில் சேரன் கூறியிருக்கிறார். ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்தில் விஜய்யால் நடிக்கமுடியாமல் போய்விட்டது. இந்நிலையில் இயக்குநர் சேரன் விஜய்யிடம் ஆட்டோகிராஃ கதையை கூறிய அனுபவத்தை பகிர்ந்திருக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
சிவாஜிக்கு பிறகு விஜய்தான்: இயக்குநர் சேரன் அந்தப் பேட்டியில், "நான் ஆட்டோகிராஃப் கதையை முதலில் விஜய்யிடம்தான் சொன்னேன். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் அந்தக் கதையை நான் சொன்னேன். அவர் எந்த அசைவும் செய்யாமல் முழு கதையையும் கேட்டு முடித்தார். சிவாஜி சாரிடமும் நான் கதை சொல்லியிருக்கிறேன். அவர்தான் எந்த அசைவும் செய்யாமல் முழு கதையை கேட்பார். சிவாஜிக்கு பிறகு அதனை நான் விஜய்யிடம்தான் பார்த்தேன்.
ஆட்டோகிராஃப்பில் நடித்திருக்கலாம்: விஜய் ஆட்டோகிராஃப்பில் நடித்திருக்கலாம். அப்படி நடித்திருந்தால் அவருக்கு காலங்கடந்து பேசப்படும் படங்களில் ஒன்றாக இருந்திருக்கும். அந்தப் படத்தை பார்த்துவிட்டு எனக்கு ஃபோன் செய்து ரொம்பவே பாராட்டினார். தவமாய் தவமிருந்து படத்தின் ஷூட்டிங் போய்க்கொண்டிருந்தபோதுகூட விஜய் எனக்கு ஃபோன் செய்து வாங்க நாம ஒரு படம் பண்ணலாம் என்றார். ஆனால் அந்தப் படத்தின் ஷூட்டிங்கை முடிக்க நாட்களாகிவிட்டது. அதனால் செய்ய முடியவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











