பிஸ்கட்டுக்கும் பிரியாணிக்கும் கையேந்தாத மக்களில் ஒருவன்.. லாரன்ஸ் பேச்சுக்கு சேரன் கொடுத்த சவுக்கடி
சென்னை: நடிகரும், இயக்குநரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போது, புதிதாக ஒரு வீட்டிற்கு சென்று குடியேறினால், அங்கு ரோட்டில் இருக்கும் தெரு நாய்கள் கூட நம்மை பார்த்தால் கத்தும். ஒரு சில தெரு நாய்கள் பிஸ்கட் சாப்பிடாது. பிரியாணி தான் சாப்பிடும். அந்த நாய்க்கு பிடித்தவாறு உணவு கொடுக்க வேண்டும். தெரு நாய்களுக்கு இப்படி என்றால் நாட்டையே நம்பி அவர்களிடம் கொடுத்து இருக்கும் போது அவர்களுக்கு கால அவகாசம் கொடுங்கள் என பேசியிருந்தார்.
லாரன்சின் பேச்சை பலர் கண்டித்திருக்கும் நிலையில், இயக்குநர் சேரன் வன்மையாகக் கண்டித்துத் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள காரசாரமான போஸ்ட் போட்டுள்ளார். அதில், எவ்வளவு அறிவுப்பூர்வமான விளக்கம் லாரன்ஸ்... உங்க சித்தாந்தத்தில் மக்களை நீங்கள் தெரு நாயாகச் சித்தரிப்பதையும், பிஸ்கட்டும் பிரியாணியும் போட்டு மக்களைக் குறைக்கவிடாமல் பார்த்துக்கொள்ளனும் எனக்கூறி ஒரு வாக்காளனின் உணர்வை கேவலப்படுத்தும் உங்கள் பேச்சை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சேரன் கண்டனம்: மக்களின் எதிர்ப்பு குரல்களுக்கு ஏதாவது போட்டு வாயை மூடவேண்டும் என நீங்கள் சொல்வதில் உங்கள் அரசியல் பயணம் எதை நோக்கிச் செல்கிறது எனப் புரிந்துவிட்டது. இதுவரை உங்களிடம் இருந்ததாகக் கருதப்பட்ட மனிதாபிமானத்தின் மீது சந்தேகம் கொள்ளச்செய்கிறது உங்கள் பேச்சு. ஆனால் உங்களுக்கும் இந்த மக்கள் ஓட்டு போடுவார்கள்.. கவலை வேண்டாம்.. இப்படிக்கு.. பிஸ்கட்டு பிரியாணிக்காகக் கையேந்தி நிற்காத மக்களில் ஒருவன் என்று தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்.
ராகவா லாரன்ஸ் விளக்கம்: சேரன் உட்படப் பல அரசியல் விமர்சகர்களும், பொதுமக்களும் லாரன்ஸின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் பெரிதாவதை உணர்ந்த நடிகர் ராகவா லாரன்ஸ், தனது எக்ஸ் தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், ஒரு புதிய சூழலைப் புரிந்துகொண்டு அதற்கேற்பப் பழகுவதற்கு நேரம் தேவைப்படும் என்பது பற்றித்தான் நான் பேசினேனே தவிர, மக்களைக் குறித்து நான் அவ்வாறு குறிப்பிடவில்லை. அந்த முழு வீடியோவையும் பார்த்து, நான் உண்மையில் என்ன சொல்ல வந்தேன் என்பதைப் புரிந்துகொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications