Ameer - ஞானவேலுவை சூர்யா கண்டித்திருக்க வேண்டும்.. அமீருக்கு ஆதரவான இயக்குநர் படையில் சேர்ந்த சேரன்
சென்னை: Ameer (அமீர்) பருத்திவீரன் விவகாரத்தில் இயக்குநர் அமீருக்கு சேரன் தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார்.
த்ரிஷா பற்றி மன்சூர் அலிகான் ஆபாசமாக பேசிய விவகாரம் ஓய்ந்ததை அடுத்து கடந்த சில நாட்களாக பருத்திவீரன் பஞ்சாயத்து தலை தூக்கியுள்ளது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அளித்த பேட்டில் ஒன்றில் நக்கலான உடல்மொழியுடன் அமீரை தரம் தாழ்ந்து பேசியிருந்தார். குறிப்பாக அமீர் ஒரு திருடன். மார்க்கெட்டில் ஓடாத குதிரை என்று பேசியது எல்லாம் பெரும் கண்டனத்தை சம்பாதித்தது.

படைப்பாளிக்கு அவமரியாதை: இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு படைப்பாளியை இப்படியா அவமதிப்பது என கமெண்ட் செய்ய ஆரம்பித்தனர். அதேபோல் இந்தப் பேச்சை பார்த்த அமீரும் பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அமீரின் அறிக்கைக்கு அடுத்ததாக சசிகுமார், சமுத்திரகனி, பொன்.வண்ணன், கரு.பழனியப்பன், பாரதிராஜா, பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் அமீருக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தனர்.
கரு.பழனியப்பன்: இயக்குநர் கரு.பழனியப்பன் தனது அறிக்கையில் ஒருபடி மேலே சென்று இந்த விவகாரத்துக்கு பின்னால் சிவக்குமார் குடும்பம் இருப்பதாக சந்தேக நிழல் விழுவதை தடுக்க முடியவில்லை. ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்க சிவக்குமார் சொல்ல வேண்டும் என கூறியிருந்தார். இதனையடுத்து ஞானவேல் ராஜாவும் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
போலி வருத்தம்: சிவக்குமாரின் பெயர் இந்த விவகாரத்துக்குள் வந்ததும் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்தார். ஆனால் அது போலியான வருத்தம் என சசிகுமார் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து இயக்குநர் சமுத்திரகனி வெளியிட்டிருந்த அறிக்கையில், 'ப்ரதர் இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்கு செல்லாது. பொதுவெளியில் மன்னிப்பு கேளுங்கள். பணத்தை திருப்பி கொடுங்கள். நீங்கள்தான் அம்பானி ஃபேமிலியாச்சே' என்று குறிப்பிட்டிருந்தார்.
சேரன் ஆதரவு: இந்நிலையில் அமீருக்கு ஆதரவாக சேரன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " படைப்பாளிகளின் பாவம் சுமக்காதீர்கள். அமீரின் நேர்மை, உண்மை, நாணயத்தை நான் அறிவேன். நீங்கள் சொன்ன வார்த்தை முற்றிலும் பொய்யானது; சூர்யாவும், கார்த்தியும் உங்களை (ஞானவேல் ராஜாவை ) கண்டித்திருக்க வேண்டும்.
அமீர் மந்தையில் நின்றாலும் நீ வீரபாண்டி தேரு.. காலம் நூறு கடந்தாலும் பணமும் புகழும் கண்ணை மறைத்தாலும் அவர்களை உருவாக்கியவன் நீயே.. திமிராய் இரு. நீயின்றி அவர்கள் இல்லை என்ற கர்வம் மட்டும் போதும். உண்மையும் சத்தியமும் வெல்லும். காலம் எல்லா களங்கத்தையும் துடைக்கும்"என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











