சுப்ரமணியபுரம் படத்தின் 2ஆம் பாகம் உருவாகின்றதா? இயக்குநர் போட்ட போஸ்ட்டால் குஷியில் ரசிகர்கள்
சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் எப்போது பார்த்தாலும் புதிதாக பார்க்கும் அனுபவத்தைக் கொடுக்கும். ஒரே நாளில் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாது எனும் அளவிற்கு உணர்வைக் கொடுத்த சில படங்கள் உள்ளன. அவற்றில் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் படமும் ஒன்று. இந்த படம் கடந்த 2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் தேதி வெளியானது. படம் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதனை படக்குழுவினரும் படத்தின் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
படத்தில் சசிகுமார், ஜெய், கஞ்சா கருப்பு, சமுத்திரக்கனி, ஸ்வாதி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் தேதி வெளியான இந்த படத்திற்கு தமிழ் நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக 80களில் இருந்த மதுரையை படம் வெளிச்சம் போட்டுக் காட்டியதால் படம் முழுக்க முழுக்க மதுரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

80களின் மதுரை மண்ணை தத்ரூபமாக கண்முன் கொண்டு வந்து நிறுத்திய சுப்ரமணியபுரம் படத்தில் சசிகுமார் இயக்குநராக அறிமுகமானதுடன், அவரே நடித்து தயாரித்து இருந்தார். மதுரை மண்ணின் அரசியல், அதிகாரம், இளைஞர்களுக்குள் இருந்த நட்பு, அன்பு, காதல், துரோகம் உள்ளிட்ட மதுரை மண்ணின் வாசத்தை ரசிகர்கள் மனதில் தனது திரைக்கதையால் நிரப்பியிருந்தார்.
ஜேம்ஸ் வசந்தன் இசை: படத்தின் கதை மற்றும் திரைக்கதைக்காக மட்டும் இல்லாமல், படத்தின் ஆர்ட் டைரக்ஷன் டிப்பார்ட்மெண்ட் துறையிலும் சசிகுமார் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு படத்தை உருவாக்கியிருந்தார். கதாபாத்திரங்களின் பேச்சு மொழி தொடங்கி நக்கல் நையாண்டி வரை அனைத்துமே ரசிகர்களால் பெரும் பாராட்டைப் பெற்றது. இந்த படத்தின் மூலம் சசிகுமாரின் பேராசிரியராக இருந்த ஜேம்ஸ் வசந்தன் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக கண்கள் இரண்டால் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

16 ஆண்டுகள்: இந்நிலையில் படம் ரிலீஸ் ஆகி 16 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பளரான சசிகுமார் தனது எக்ஸ் பக்கத்தில் சுப்ரமணியபுரம் படத்தின் படபிடிப்பின்போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து , " ஸ்வீட் சிக்ஸ்டீன்.. சுப்ரமணியபுரம்.. என்றுமே மறக்க முடியாத ஜூலை 4. இந்த படத்தை என்றுமே மறக்க முடியாத அளவிற்கு மாற்றிய அனைவருக்கும் நன்றி" என பதிவிட்டுள்ளார்.
சேரன் வாழ்த்து: சசிகுமாரின் இந்த பதிவுக்கு இயக்குநரும் நடிகருமான சேரன் தனது எக்ஸ் பக்கத்தில் இருந்து வாழ்த்துகள் கூறியது மட்டும் இல்லாமல், சுப்ரமணியபிரம் படத்தின் 2ஆம் பாகத்தினை எடுக்கலாமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது, " வாழ்த்துகள் தம்பி... நம்ம சுப்பிரமணியபுரம் 2 எடுக்கலாமா.... சீக்கிரம் வர்றேன்.." என பதிவிட்டுள்ளார். சேரனின் இந்த பதிவுக்கு இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக ஒரு சிலர், கேட்பதற்கே ஆனந்தமாக இருக்கின்றது. பார்ப்பதற்கு ஆவலாக இருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், " சேரன் மற்றும் சசிகுமார் காம்போ நன்றாக இருக்கும். நடக்கட்டும்.. காத்திருக்கின்றோம்" என கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications











