Bala - பாலாவால் அந்த நடிகை மும்பைக்கு ஓடினார்.. சசிக்குமார் தெருக்கோடிக்கு வந்தார்.. பிரபலம் கொடுத்த ஷாக்
சென்னை: சியான் விக்ரமுக்கு அவரது திரையுலக வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை தந்த படம் என்றால் அது சேது. அப்படம் ரிலீஸாகும்வரை சினிமாவில் தனக்கான இடத்துக்காக கடுமையாக போராடிக்கொண்டிருந்தார். விக்ரமின் திரை வாழ்க்கை சேதுவுக்கு முன் சேதுவுக்கு பின் என்றுதான் பிரிக்கப்பட வேண்டும். பாலா இப்போது வணங்கான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இதில் அருண் விஜய் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்து சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலா. விக்ரம், அபிதா, ஸ்ரீமன், சிவகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. குறிப்பாக சியான் விக்ரமுக்கு சினிமாவில் நிலையான இடத்தை பெற்றுக்கொடுத்தது. அந்தப் படம்தான் பாலாவுக்கும் சரி விக்ரமுக்கும் நல்ல வாழ்க்கைக்கான கதவை திறந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நந்தா: சேது படத்தை குறிஞ்சி மலர் என்று ஏகத்துக்கும் கொண்டாடினார்கள் விமர்சகர்களும், ரசிகர்களும். ஒரே படத்தில் புகழின் உச்சிக்கு சென்ற அவருக்கு இரண்டாவது பட வாய்ப்பும் உடனடியாக கிடைத்தது. அதன்படி அபராஜித் பிலிம்ஸ் தயாரிப்பில் சூர்யாவை வைத்து நந்தா படத்தை இயக்கினார். அந்தப் படமும் நல்ல ஹிட்டாகி காலங்கடந்து பேசப்படும் படைப்பாக மாறி நிற்கிறது. சூர்யாவுக்கும் நல்ல பெயரை அந்தப் படம்தான் பெற்றுக்கொடுத்தது.
என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்: முதல் இரண்டு படங்களிலேயே முக்கியமான இயக்குநர் என்று பாலா பெயர் எடுத்தார். அடுத்தடுத்து அவர் இயக்கிய பிதாமகன், நான் கடவுள் உள்ளிட்ட படங்களும் மிகச்சிறந்த படைப்பாக இருக்கின்றனர். அதிலும் பாலா சொன்னால் நடிகர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற நிலைதான் சினிமாவில் இருந்தது. அவரது இயக்கத்தில் ஓரிரு காட்சிகளிலாவது தோன்றிட வேண்டும் என நடிகர்கள் தவம் இருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது அவர் வணங்கான் திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார். படம் மே மாதம் ரிலீஸாகவிருக்கிறது.
குற்றச்சாட்டு: பாலா ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரையும் அடிப்பார் என்ற குற்றச்சாட்டு கடந்த பல வருடங்களாகவே இருந்துவருகிறது. பரதேசி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில்கூட குச்சியை வைத்து அவர் அடிப்பது போன்ற காட்சிகள் வெளியாகின. ஆனால் அது ஒரிஜினல் குச்சி இல்லை டம்மி குச்சி என்று பாலா கூறியிருந்தார். இந்தச் சூழலில் முதலில் வணங்கானில் சூர்யா நடித்தபோது அப்படத்தில் இருந்த நடிகை மமிதா சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார்.
அடித்த பாலா: அந்த பேட்டியில் பேசிய மமிதா, "சூர்யா கமிட்டான வணங்கான் படத்தில் நான் முதலில் நடித்தேன். ஒரு சீனில் பாடிக்கொண்டே ஆட வேண்டும். அதற்கான பயிற்சியை நான் எடுத்தேன். ஆனால் டேக்கின்போது எனக்கு பதற்றமாகிவிட்டதால் சொதப்பிவிட்டேன். சில டேக்குகள் போயின. அப்போது பாலா பின்னிருந்து எனது தோள்பட்டையில் அடித்தார். நல்லவேளை அந்தப் படத்திலிருந்து விலகிவிட்டேன்" என்றார். மமிதாவின் இந்தக் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்யாறு பாலு வீடியோ: இந்நிலையில் பத்திரிகையாளர் செய்யாறு பாலு வெளியிட்டிருக்கும் வீடியோவில், "முதல் படத்திலிருந்தே பாலா திமிர் பிடித்தவர்தான். தொடர்ந்து ஹிட் கொடுத்தவர்தான். ஆனால் நடிகர்களை அவர் டார்ச்சர் செய்துவிடுவார். பரதேசி படத்தில் அதர்வாவையும், வேதிகாவையும் காட்சிக்காக பாடு படுத்திவிட்டார். படத்தின் ஷூட்டிங் முடித்தவுடன் இனி இவர் இயக்கத்தில் நடிக்கவேகூடாது என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறினார் அதர்வா. அதேபோல் பரதேசி படம் முடிந்ததோடு சரி மும்பைக்கு ஓடிப்போனவர்தான் வேதிகா. அதற்கு பிறகு தமிழில் நடிக்கவே இல்லை.
சசிகுமாருக்கும் டார்ச்சர்: இவர்கள் மட்டுமில்லை தனது சிஷ்யரான சசிகுமாரையும் பாடாய்படுத்திவிட்டார். தாரை தப்பட்டை சசிகுமாரின் சொந்தப் படம். ஒரு காட்சியை பலமுறை எடுத்ததற்காக; செலவு ரொம்ப ஆகிறதே ஏன் இவ்வளவு எடுக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். அதனால் கோபமான பாலா ஒரு காட்டு காட்டிவிட்டார். அந்தப் படத்துக்கு பிறகுதான் சசிகுமார் தெருக்கோடிக்கே வந்துவிட்டார்"என்றார்.


Click it and Unblock the Notifications











